தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறிய பெரும்பாக்கம் பிரச்சினை.. உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறினால், அது சம்பந்தமான வழக்குகள் சிபிஐக்கு மாற்ற உத்தரவிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசை எச்சரித்துள்ளது. கடந்த முறை விசாரணையின் போது, தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருள்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம். காவல் துறை மீது அதிருப்தி தெரிவித்தது.
சென்னையில் குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து 2017-ஆம் ஆண்டு பெண்ணுரிமை இயக்கம் என்ற அமைப்பின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை தாக்கல் செய்த அமைப்பு, குடிசைவாசிகளுக்கு பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை" என கூறியிருந்தது.

மேலும் பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்குரைஞா் ஆணையரை நியமித்து 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதன்படி இப்பகுதிகளை ஆய்வு செய்து வழக்குரைஞா் ஆணையா் அளித்த அறிக்கையில், 'இந்த நான்கு பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களின் நடமாட்டம் தாராளமாக இருக்கிறது' என கூறியிருந்தார். இதையடுத்து சம்பந்தபட்ட அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமா்வு முன் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'வழக்குரைஞா் ஆணையா் அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தாராளமாக கிடைப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் என்று அவா் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது குறித்து காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பள்ளி குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறாா்கள். போதைப்பொருட்கள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லை? இந்த வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா?' என காவல்துறை தரப்பு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினார்கள்
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் காவல்துறை தரப்பு வழக்குரைஞா் முனியப்பராஜ், 'போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக வாதிட்டார். குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காவல்துறையினா் பணிக்கு அமா்த்தப்பட்டு உள்ளார்கள் என்றும் வழக்குரைஞா் ஆணையா் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றும் கூறினார்.
இதையடுத்து, வழக்குரைஞா் ஆணையா் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடா்பாக, மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் "போதைப்பொருளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான காவல்துறையில் தனிபிரிவு முழு அளவில் செயல்பட்டு வருகிறது.
போலீசார் ரோந்து வாகனங்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் ஆபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கடப்பாக்கம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது" என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறினால் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடப்படும்" என்று எச்சரித்தனர். மேலும், "இந்த வழக்கில் போதைப்பொருளை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications