பெட்ரோல், டீசல் விலையில் 21வது நாளாக மாற்றமில்லையே... காரணம் இதுதான் ப. சிதம்பரம் கிண்டல்
பெட்ரோல், டீசல் விலை 21 வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த 21 வது நாட்களாக விலையில் எந்த வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. பெகாசஸ் மென்பொருள் செல்போனில் ஊடுருவி இருப்பதாலும், இஸ்ரேலியர்கள் கேட்டுக்கொண்டு இருப்பதாலும் எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் தலைமை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்று ப. சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.

சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வந்தது.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் பெட்ரோல் ஒரு லிட்டர் 103 ரூபாய் வரை விற்பனையாகிறது. டீசல் விலையும் 100 ரூபாயை எட்டப்போவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை 17வது நாளாக எந்தவித மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 20 நாட்களாக விலை உயர்வு இல்லை என்பது சற்றே நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமான்ய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
ப.சிதம்பரம் கிண்டல்
இதனிடையே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். கடந்த 21 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஏனெனில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை மாதம் 19ஆந்தேதி தொடங்கி, 18 நாட்கள் ஆகிறது. பெகாசஸ் மென்பொருள் செல்போனில் ஊடுருவி இருப்பதாலும், இஸ்ரேலியர்கள் கேட்டுக்கொண்டு இருப்பதாலும் எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் தலைமை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அனைத்து துறையின் தலைமை அதிகாரிகள் 15ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவையனைத்தின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications