பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு பதிவு கட்டணம் 1% குறைப்பு: அரசின் அரசாணை
சென்னை: ரூ.10 லட்சம் வரை வீடு, மனை, விளை நிலம் போன்ற அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் வாங்கினால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில், தற்போது இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டிருக்கிறது. அரசின் இந்த உடனடி நடவடிக்கையானது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது..
நூற்றாண்டு கண்ட தமிழக சட்டப்பேரவை பெண்களின் முன்னேற்றங்களுக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான பதிவு கட்டணம் 1% குறைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அசையா சொத்துக்கள்
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சமூகத்தில் மட்டுமின்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்கள் பெண்கள் பெயரால் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் 1% குறைக்கப்படும்.
தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளில் 75% பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும். இதன் மூலம் மகளிர் சுய சார்பும் பொருளாதார சுதந்திரமும் மேலும் உயர்ந்திடும் என்று இந்த அரசு நம்புகிறது. மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதி என பல்வேறு முன்னோடி திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வண்ணம் நமது அரசு செயல்படுத்தி வருகிறது.
விற்பனைக்கான ஆலோசனைகள்
இதற்கு அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு வரும் 5 ஆண்டுகளில் 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 20% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்களை தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
வீடு, மனை, விளை நிலம்
ரூ.10 லட்சம் வரை வீடு, மனை, விளை நிலம் போன்ற அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் வாங்கினால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும்.. அந்தவகையில், தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75% பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும்.. தமிழக அரசின் இந்த அறிவிப்பானது, பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது..
இதனிடையே அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி, தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்.. அதில் கூடுதலாக ஒரு கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
குறிப்பாக, "புதுச்சேரியின் திட்டத்தை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, முத்திரைத் தீர்வை விலக்கு பெற பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களுக்கு மட்டும் என்கிற வரம்பினை நிர்ணயிக்காமல், தமிழகத்திலும் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் அவர்களுக்கும் முத்திரைத் தீர்வையில் 50% விலக்கு அளிக்கும் வகையில், தாங்கள் நடவடிக்கையை மேற்கொண்டு உரிய வழிவகை செய்ய வேண்டும்" என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications