“ரொம்ப தப்புங்க”.. பொங்கிய திலகபாமா.. சீறிய நாடார் அமைப்பினர்.. மீண்டும் சர்ச்சையில் திமுக 'தலை'?
சென்னை: நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய திமுக மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதியை கண்டித்து, சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாடார் அமைப்புகளை சேர்ந்த 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் புகழை களங்கப்படுத்தும் வகையிலும், நாடார் சமூக பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக குற்றம் சாட்டி, நாடார் சமூகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது
அதன் ஒரு பகுதியாக, ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யக் கோரி, சென்னை ஆலந்தூர் நாடார் சங்க திருமண மண்டபம் அருகே திரண்ட நாடார் அமைப்பினர், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோள் சீலை
இப்போராட்டத்தை பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலக பாமா தொடங்கி வைத்தார். போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதியை திமுகவின் அடிப்படை பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 200 ஆண்டுகளாக தோள் சீலை போடுவதற்கு போராடிய நாடார் பெண்களுக்கு ஜாக்கெட் போட அனுமதி பெற்று தந்து தந்தது திராவிடம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேசியதால், அவரை திமுகவில் இருந்து நீக்க சட்டப்படி நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன..

நாடார் சங்கம்
இதுகுறித்து தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் சொல்லும்போது, "திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து நாடார் சமுதாயத்தை இழிவாக பேசி வருகிறார். நாடார் பெண்கள் மட்டுமின்றி தமிழ் பெண்களையும் இழிவுபடுத்துகிறார்... நாடார் சமுதாய பெண்கள் தோள் சீலை அணியாமல் இருந்த போராட்டம் 1823ம் ஆண்டில் தொடங்கி 1859ம் ஆண்டு முடிந்தது.. பாதிரிமார்கள், அய்யா வைகுண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரலாற்றை பொய்யாக பேசிய ஆர்எஸ் பாரதி மீது பெண் வன்கொடுமை உட்பட பலபிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். திமுகவில் இருந்தும் நீக்க வேண்டும்... ஆர்எஸ் பாரதி நாடார்களை கொச்சைப்படுத்தி உள்ளார். வரலாற்றை படிக்காமல் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார்.

பாண்டியராஜன்
திராவிட கட்சிகள் வந்த பிறகுதான் சேலை அணிவித்ததுபோல் பேசி உள்ளார்.. ஆங்கிலேயர் காலத்தில் அதை எதிர்த்து போராடியது நாடார் சங்கம்தான்.. எனவே ஆர்எஸ் பாரதி மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து போராட்டம் நடத்துவோம்" என்றார் ஆவேசமாக. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை..

முற்றுகை
போராட்டம் நடந்த இடத்துக்கு அருகில்தான், ஆர்எஸ் பாரதியின் வீடு உள்ளதால், அவரது வீட்டை முற்றுகையிட முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் அனைவரும் ஆலந்தூர் கோர்ட்டு அருகே வந்தபோது அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு அருகில் இருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.. பின்னர் கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் நேரில் சந்தித்து பேசினார்.. தொடர்ந்து செய்தியாளர்களிடமும் பேசினார்.. "திமுகவை சேர்ந்த ஆர்எஸ் பாரதி பல்வேறு சமூகங்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.. நாடார் சமுதாய பெண்கள் குறித்து வரலாறு தெரியாமல் பேசுகிறார். தோள் சேலை போராட்டத்தில் திமுகவுக்கும் நீதிக்கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது" என்றார்..

பாதுகாப்பு
முன்னதாக, கைது செய்யப்பட்டவர்களை அதிமுக சார்பில் ஆதிராஜாராம், பாஜக சார்பில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.ராஜன், மாநில பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு செயலாளர் பிரதாப் சந்தர், திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினர்.. நாடார் சங்கத்தினர் இப்படி அடுத்தடுத்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருவதால், தில்லை கங்கா நகர் 26-வது தெருவில் உள்ள ஆர்.எஸ். பாரதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.. கடந்த வாரமும் இதுபோலவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அவதூறாக பேசியதாக பாஜகவினர் ஆர்எஸ் பாரதியின் வீட்டை இதேபோல, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications