“இந்த கேவலமான வேலைக்கு தமிழக பாஜக அவார்டே கொடுக்கும்” ‘குப்பை’.. நிர்மல் குமாரை விளாசிய பிடிஆர்!
சென்னை : பெண்களைப் பற்றி கீழ்த்தரமான எண்ணங்களைக் கொண்டவர்களிடம் இருந்து இதுபோன்ற குப்பைகளைத் தவிர வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜக ஐடி விங் மாநில தலைவரை விமர்சித்துள்ளார்.
பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் பதிவிட்ட ட்வீட் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
ராகுல் காந்தி ஒரு சிறுமியின் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை, ஆச்சர்யமாக விழிக்கும் எமோஜியுடன் பதிவிட்டிருந்தார் சிடிஆர் நிர்மல்குமார்.
தனது சகோதரியான பிரியங்கா காந்தியின் மகளுடன் ராகுல் காந்தி அன்பாகப் பேசும் புகைப்படத்தைப் பதிவிட்டு நிர்மல் குமார் இவ்வாறு பதிவிட்டிருந்தது காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ராகுல் யாத்திரை
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரத்துக்கு 150 நாட்கள் ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்., 7ஆம் தேதி தொடங்கிய பாதயாத்திரை கேரளா மாநிலத்திற்குள் கடந்த 11-ஆம் தேதி நுழைந்தது. கேரளாவில் இன்று ராகுல்காந்தியின் 7-வது நாள் பாதயாத்திரை ஆலப்புழா ஹரிப்பாடு பகுதியில் இருந்து தொடங்கியது.

பாஜக விமர்சனம்
ராகுல் காந்தியின் நடை பயணத்தை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ராகுல் காந்தி அணிந்திருந்த டிசர்ட், ராகுல் ஓய்வெடுக்கும் கேரவன் பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறது பாஜக. இந்நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் ராகுல் காந்தியின் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.

பிரியங்கா மகள்
அந்தப் புகைப்படத்தில் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்காவின் மகள் மிராயா வத்ராவுடன் பேசிக் கொண்டிக்கிறார். அந்த புகைப்படம் 2015ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் எடுக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தை ஒரு எமோஜி மட்டும் போட்டு பதிவிட்டிருந்தார் நிர்மல் குமார். இதையடுத்து தாய்மாமன் உறவைக் கொச்சைப்படுத்திய நிர்மல் குமாரின் செயல் கேவலமானது என காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர்.

ட்வீட்டை மாற்றிய நிர்மல் குமார்
இதையடுத்து அந்த ட்வீட்டை நீக்கிய நிர்மல் குமார், "குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த பப்புவை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது" என்ற கேப்ஷன் உடன் அதே புகைப்படத்தை மீண்டும் பதிவிட்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினர், நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிடிஆர் வசை
இதற்கிடையே, சிடிஆர் நிர்மல் குமாரின் இந்த ட்வீட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "துரதிர்ஷ்டவசமாக, பெண்களைப் பற்றி கீழ்த்தரமான எண்ணங்களைக் கொண்ட வாய் வழியாக உணவைச் சாப்பிடாதவர்களிடம் இருந்து இதுபோன்ற குப்பைகளைத் தவிர வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த கேவலமான அவதூறுக்காக தமிழக பாஜக அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கும். அவர் தனது முதலாளியின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்றுகிறார்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications