தர்மர் யார் பக்கம்? 3 லிஸ்ட்டிலும் மிஸ்ஸிங்.. என்ன காரணம்? - திட்டவட்டமாக மறுக்கும் ஓபிஎஸ் தரப்பு!
சென்னை : ஓபிஎஸ் ஆதரவாளரான ராஜ்யசபா எம்.பி ஆர்.தர்மரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்காமல் இருப்பதற்குப் பின்னணியில் என்ன காரணம் இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
அதிமுக சார்பில் சமீபத்தில் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.தர்மர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்தாலும், அவரை மட்டும் இன்னும் நீக்காமல் இருந்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
இதனால், தர்மர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவக்கூடும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதிரடி நீக்கம்
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதையடுத்து துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்களாக தனது ஆதரவாளர்களை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி.

கட்சியில் இருந்து
இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்களான 5 மாவட்ட செயலாளர்கள் உட்பட மேலும் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் ஈபிஎஸ். ஓ.பன்னிர்செல்வத்தின் மகனான அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத், ஓபிஎஸ்ஸின் இன்னொரு மகன் ஜெயபிரதீப், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

66 - 43
முதலில் ஈபிஎஸ் தரப்பு 4 பேரை பொதுக்குழுவில் வைத்தே நீக்கியது. பின்னர் 18 பேரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பதிலடியாக ஓபிஎஸ் 22 பேரை நீக்கினார். மேலும் 44 பேரை நேற்று கட்சியில் இருந்து நீக்கினார் ஓபிஎஸ். இதையடுத்து ஈபிஎஸ், மேலும் 21 ஓபிஎஸ் ஆதரவாளர்களை நேற்று மாலை கட்சியை விட்டு நீக்கினார். இதுவரை 66 பேர் ஓபிஎஸ்ஸால் நீக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு 43 பேரை இதுவரை நீக்கியுள்ளது.

ஆர்.தர்மர்
அதிமுக சார்பில் மக்களவையில் இடம்பெற்ற ஒரே ஒரு எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, அண்மையில் ராஜ்யசபா உறுப்பினராகப் பதவியேற்ற ஒரே ஒரு ஓபிஎஸ் ஆதரவு ராஜ்யசபா எம்.பியான ஆர்.தர்மரை கட்சியிலிருந்து இதுவரை நீக்கவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளர்களை கூண்டோடு நீக்கி, இரண்டு லிஸ்ட்டுகள் வந்திருந்தாலும் மாநிலங்களவை எம்.பி தர்மர் இதுவரை கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை.

சந்தேகம்
ஆர்.தர்மரை தங்கள் பக்கம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் சிறகடித்தது. எதிர்கால நலன் கருதி ஆர்.தர்மர் ஈபிஎஸ் பக்கம் தாவத் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது. அதன் காரணமாகவே கட்சி நீக்கத்தில் ஆர்.தர்மரின் பெயர் இடம்பெறவில்லை என்ற சந்தேகம் எழுந்தது.
Recommended Video

ஓபிஎஸ் தரப்பு மறுப்பு
ஆனால், ஆர்.தர்மர் ஈபிஎஸ் பக்கம் செல்கிறாரா என்ற கேள்வியை ஓபிஎஸ் தரப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், "இந்த மாதிரி குழப்புறதுக்காக எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய எம்.பி தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துதான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆர்.தர்மர் வாழ்நாள் முழுக்க அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தோடு தான் இருப்பார். இதுபோன்ற கேள்வியெல்லாம் இனிமே கேட்காதீங்க" என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரம் தான்
அப்படியென்றால், எடப்பாடி பழனிசாமி ஆர்.தர்மரை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை எனும் கேள்வி விடை கிடைக்காத வினாவாகவே தொடர்கிறது. ஆர்.தர்மர் ராஜ்யசபா எம்.பியாக டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் பதவியேற்று ஒரு வாரம் தான் ஆகிறது என்பதால், அவர் தம் பக்கம் வருவாரா என முயற்சித்துப் பார்த்த பின்னர் வேலைக்கு ஆகாவிட்டால் அவரை பின்னர் நீக்கலாம் என ஈபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications