சென்னை பேருந்தில் “வாட்டர் ஷவர்”.. சீட்களை நனைத்த மழை! சகித்துக்கொண்டு சென்ற பயணிகள்
சென்னை: கனமழை காரணமாக சென்னை பெருநகர மாநகராட்சி பேருந்துகளின் மேற்கூரையில் இருந்து மழை நீர் வடிந்ததால் பொதுமக்கள் இருக்கைகளில் அமராமல் நின்றபடியே நனைந்துகொண்டு சென்றனர்.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி இருப்பதால் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வானிலை மையம்
இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேங்கி தண்ணீர்
தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களாக விடிய விடிய பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனுக்குடன் மழை நீர் தேங்கிய பகுதியில் மோட்டார் மூலம் நீரை அகற்றி வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் வீடுகளுக்கு மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

பைக்குகளை தவிர்க்கும் மக்கள்
வழக்கமாக அலுவலக பணிகளுக்கு, வேறு இடங்களுக்கு செல்ல இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் மக்கள் கனமழையில் நனையாமல் செல்வதற்காகவும், பாதுகாப்பு கருதியும் பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயில், ஷேர் ஆட்டோக்கள், கால் டாக்சிகளை பயன்படுத்துகிறார்கள்.

சென்னை பேருந்துகள்
ஆனால், இவ்வாறு பேருந்தில் செல்வதற்கு பைக்கில் நனைந்துகொண்டே சென்றுவிடலாம் என்று மக்களை யோசிக்க வைத்துவிடுகிறது பேருந்துகளின் நிலை. சென்னை மாநகராட்சியின் பேருந்துகளில் மழை நீர் ஜன்னல் வழியாகவும், மேற்கூரையிலிருந்தும் உள்ளே வடிவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பேருந்துக்குள் மழை நீர்
சென்னை தாம்பரத்தில் இருந்து பிராட்வே பேருந்து நிலையம் செல்லும் பேருந்து ஒன்றிற்குள் மழை நீர் கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இருக்கைகளில் மழை நீர் கொட்டி வருவதால் மக்கள், இருக்கையில் அமர்வதை தவிர்த்து நின்றபடி செல்கின்றனர்.

சென்னையில் மழை தொடரும்
மழையில் நனையாமல் இருக்க இருசக்கர வாகனங்களை தவிர்த்துவிட்டு பேருந்தில் செல்ல முயன்றதை எண்ணி வருந்தும் அளவுக்கு மக்கள் நனைந்தபடியே அதில் பயணம் செய்தனர். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் கோரிக்கை
எனவே இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்தும் வரும் சென்னை வாசிகள் மழை காலத்தை கருத்தில்கொண்டு சென்னை மாநகர பேருந்துகளை சீரமைக்க வேண்டும் எனவும் பழுதான, மழை நீர் உள்ளே வடியும் வகையிலான பேருந்துகளை இயக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications