மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை... 13 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில் 13 மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
யாஸ் புயல் கரையைக் கடந்ததால் தமிழகத்தில் வறண்ட காற்று நுழைகிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்துள்ளதால் ஆறுகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அங்கு மழை குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நேற்றைய தினம் குழித்துறை, நாகர்கோவில், இரணியல் பகுதிகளில் 1 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மே 28ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்.

இடி மின்னலுடன் மழை
கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தென் கடலோர மாவட்டங்களில் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

13 மாவட்டங்களில் வெப்பநிலை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சென்னையில் வெப்பநிலை
நேற்றைய தினமே தமிழகம் முழுவதும் 12 பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவானது. இந்த வெப்பநிலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலும் தற்போது வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

காற்று வீசும்
இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். மாலத்தீவு மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் அலை குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 3 முதல் 3.8 செமீ வரை உயரக்கூடும் மீனவர்கள் 5 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications