Thenisai Thendral: இறந்த தேவாவின் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலி! யார் பரிசாக கொடுத்தது தெரியுமா?
சென்னை: தேனிசைத் தென்றல் தேவா மறைந்துள்ள நிலையில் அவர் கழுத்தில் அணிந்திருப்பது யார் கொடுத்த தங்க சங்கிலி தெரியுமா? அண்ணாமலை படத்தின் வெற்றிக்காக ரஜினி, தேவாவுக்கு பரிசாக கொடுத்திருந்த சங்கிலியாம்.
1980-களில் தமிழ் சினிமாவில் இளையராஜாவின் ஆதிக்கம் இருந்தது. இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமாகி ஹிட்களை கொடுத்தார். பின்னர் அதே காலகட்டத்தில் கானா பாடல்கள் மூலம் தேவா அறிமுகமானார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு மத்தியில் தனது தனித்துவமான இசையால் இளைஞர்களுக்கு துள்ளல் பாடல்களை கொடுத்தார். வைகாசி பிறந்தாச்சு படம்தான் இவருக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு ஒரே ஆண்டு 36 படங்களுக்குக் கூட அவர் இசையமைத்திருக்கிறார்.
1992 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருக்கிறார். அந்த படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட்! பாட்ஷா படத்திலும் இசையமைத்து ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்தார். இதையடுத்து அருணாச்சலம்!
அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற "ஒரு பெண் புறா" என்ற பாடல் ரஜினிக்கு பிடித்தமான பாடலாகிவிட்டதாம். இந்த பாடலை கேசட்டில் பதிவு செய்ததும் ரஜினியிடம் கொடுத்த போது, அதை கேட்ட ரஜினி, தேவாவுக்கு 80 முறையாவது போன் செய்து பாட்டு நன்றாக இருப்பதாக தெரிவித்தாராம்.
அத்துடன் படத்தின் வெளியீட்டு விழாவில் ராகவேந்திரர் டாலர் பதித்த தங்க சங்கிலியை தேவாவுக்கு ரஜினி பரிசளித்தார். இதை தேவா அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார். ரஜினி கையால் பெறப்பட்ட தங்க சங்கிலியை எண்ணி பெருமிதமும் கொண்டிருந்தார்.
தேவாவுக்கு இன்று காலை 9 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தாராம். அப்போது அருகில் இருந்த மருத்துவரான அவரது மகள், தேவாவுக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து பார்த்தார், ஆனாலும் தேவா சுயநினைவுக்கு வராததால் அருகில் உள்ள வடபழனி சூர்யா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவருக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி காலை 11 மணி அளவில் காலமானார். இதையடுத்து அவருடைய உடல் திநகரில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், எஸ்வி சேகர் உள்ளிட்டோர் நேரில் போய் அஞ்சலி செலுத்தினர்.
தேவாவின் நெற்றியில் வழக்கம் போல் அவர் விரும்பும் திருநீறு, குங்குமம் இடப்பட்டிருந்தது, எப்போதும் கையில் இருக்கும் வெள்ளை கைக்குட்டையும் இருந்தது, மேலும் கழுத்தில் ரஜினிகாந்த் பரிசாக கொடுத்திருந்த சங்கிலி தேவாவுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.
தேவாவின் உடல், நாளை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. நாளை மதியம் 12 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications
