ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்துழைக்க ஒருவர் மறுப்பு.. வழக்கில் திருப்பம்?
சென்னை: ராமஜெயம் கோலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் முதன்மை செயலாளருமான கே.என் நேருவின் தம்பி ராமஜெயம்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ராமஜெயம் உடல் திருச்சி- கல்லணை சாலையில் காவிரி கரையோரம் கிடந்தது.

சிறப்பு புலனாய்வு விசாரணை
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இந்த கொலை சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். கொலை சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் கடத்தப்பட்டது..
இதில் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக ராமஜெயம் குறிப்பிட்ட ஒரு மாடல் காரில் தான் கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் கிடைத்த முக்கிய ஆதாரமாக இது அமைந்ததால், அந்த மாடல் காரை வைத்திருக்கும் நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதேபோல சில ரவுடிகளையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் 13 பேர் மீது சந்தேகம் எழுந்ததால் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

13 பேருக்கு சம்மன்
இதன்படி, நரைமுடி கணேசன், திண்டுக்கல் மோகன்ராம், சாமிரவி, சத்தியராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப், தென்கோவன், சிவா என்கிற குணசேகரன், ராஜ்குமார், சுரேந்தர், கலைவாணன், சிறையில் இருக்கும் செந்தில் என 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு ஆட்சேபனை இருந்தால் அதை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உண்மை கண்டறியும் சோதனைக்கு எதிர்ப்பு
இந்த சம்மனை ஏற்று சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த நபர்கள் தங்கள் வழக்கறிஞர்களுடன் ஆஜர் ஆகினர். உண்மை கண்டறியும் சோதனைக்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை கடந்த 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 7 ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் 8 பேர் மட்டும் ஆஜர் ஆகினர். மீதமுள்ளவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகியிருந்தனர்.

13 பேரிடம் விசாரிக்க அனுமதி
அப்போது, 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு எதிர்தரப்பில் ஆஜரான நபர்களின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதேபோல், தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும், எந்த விதமான கேள்விகள் கேட்க இருக்கிறார்கள் என்பன போன்ற கருத்துக்களை முன்வைத்தனர். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

8 பேர் ஒப்புதல்
அதன்படி இன்று மனு விசரணைக்கு வந்த போது, சத்தியராஜ், லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் இன்று ஆஜர் ஆகினர். 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். ஆனால், தென்கோவன் என்ற ரவுடி மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் இல்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

4 பேர் ஆஜராகவில்லை
மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை. இன்று ஆஜர் ஆகாத 4 பேர் வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராக குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நவம்பர் 17 ஆம் தேதி உண்மை கண்டறியும் சோதனை எங்கு நடைபெறும் எப்போது நடைபெறும் போன்ற விவரங்கள் அன்றைய தினம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications