இனி எவனுக்கும் இப்படி ஒரு தைரியம் வரக்கூடாது.. “தண்டனை அப்படி இருக்கணும்”.. சரத்குமார் சொன்ன யோசனை!
சென்னை : மாணவி சத்யா கொலை வழக்கில் கைதான குற்றவாளி சதீஷூக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையைச் செய்த சதீஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பெரும் அதிர்வலை
சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில், சதீஷ் என்ற இளைஞன் காதல் தோல்வியால், ஓடும் ரயில் முன்பாக சத்யா என்ற மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரில், பொதுவெளியில் பட்டப்பகலில் நடைபெறும் இதுபோன்ற அச்சுறுத்தலான கொலை சம்பவங்களால், மக்களிடம் ஒருவித பதற்றம், பாதுகாப்பற்ற சூழல் உண்டாகிவிடுவதை காண முடிகிறது.

ஆத்திரம், வெறி
விரும்பியவரை கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரமும், வெறியும் ஏற்படுகிறது என்றால், சமுதாயத்தில் வாழும் முறையை அவன் பழகவில்லை என்றே கருத வேண்டும். தனிப்பட்ட பாதிப்பை, பிறரை தாக்கி வெளிப்படுத்தி வரும் இன்றைய சமுதாய நிலை மாறுவதற்கு பெற்றோரின் கண்காணிப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், உரிய உளவியல் மனப்பயிற்சியும் அவசியமாகிறது.

வார்த்தைகளே இல்லை
சதீஷீன் கொடூரச் செயலால் உயிரிழந்த சத்யாவை எண்ணி, தந்தை மாணிக்கம் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆதரவின்றி நிர்க்கதியாக நிற்கும் சத்யாவின் தாயார் ராமலட்சுமி மற்றும் தங்கைகளுக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. சதீஷுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனையால் நீதி நிலைபெறச் செய்வதே அக்குடும்பத்திற்கான ஆறுதலாக அமையும் என கருதுகிறேன்.

இனி இந்த துணிவு யாருக்கும் வரக்கூடாது
எனவே, இனி வருங்காலங்களில் எந்தவொரு சூழ்நிலையிலும், பிற உயிரை கொல்லும் துணிவு எவருக்கும் வராத வகையில் முன்மாதிரியான தண்டனை குற்றவாளி சதீஷூக்கு வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். மேலும், மத்திய காவல் ஆயுதப்படைகளுள் ஒன்றான ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) கூடுதல் கவனத்துடன் கண்காணித்து, ரயில் நிலையங்களில் நடந்தேறும் அசம்பாவிதங்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
