எனக்கு மட்டும் ஒரு நியாயமா? ஆர்ப்பரிக்கும் சசிகலா! "திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்.." பரபர அறிக்கை
சென்னை: ஒருதலைப்பட்சமாக செயல்படும் ஆளுங்கட்சியினரை தமிழக மக்கள் புறக்கணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும், திமுகவினர் எத்தனை சித்து வேலைகளைச் செய்தாலும், மக்களின் மனதை மாற்ற முடியாது என சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அவரது இறப்பிற்கு பிறகு முதலமைச்சராக முன்மொழியப்பட்டவருமான சசிகலா சிறைவாசத்திற்கு பிறகு பல்வேறு அறிக்கைகள் மூலம் தன்னை லைம் லைட்டில் நிறுத்துக் கொண்டுள்ளார்.
குறிப்பாக கடந்த நில நாட்களாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் எனவும் அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34-ஆம் ஆண்டு நினைவு நாளான கடந்த 24-ம் தேதியன்று, அவர் மெரினாவில் உள்ள நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருந்த நிலையில், 23-ம் தேதி அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை காவல்துறை ஆணையாளரிடமிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி
அந்தக் கடிதத்தில், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுப்பதற்காக மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.ன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து காவல்துறையினரின் கடிதத்துக்கு மதிப்பளித்து, உடனடியாக தொண்டர்களை சென்னைக்கு வர வேண்டாம் என்று அறிவித்து, உரிய முறையில், கொரோனா விதிமுறைகளைக் கடைபிடித்து, தங்களது முகாம் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே புரட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்களுக்கு அனுமதி
அதே சமயம், ஏராளமானோர் மெரினாவில் உள்ள புரட்சித்தலைவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அன்றைய தினமே அஞ்சலி செலுத்தியதையும் காணமுடிந்தது என கூறியுள்ள சசிகலா இதைப் பார்க்கும்போது, திமுக அரசாங்கம் திட்டமிட்டு பிரித்தாளுகின்ற சூழ்ச்சியை ஏதும் செய்கிறதோ என்ற எண்ணம், உண்மையான தொண்டர்கள் மனதில் எழுகிறது என கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
அதேநாளில் தமிழக முதல்வரே பொது இடத்தில் கூட்டம் சேர்த்து, இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது எனவும், அதேபோல், கோயம்புத்தூரில் ஆளுங்கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் என்ற பெயரில் ஏராளமானவர்களை ஒரே இடத்தில் கூட்டம் சேர்த்து எந்தவித கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், அவர்களுடைய கட்சி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளதாக சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, இதுபோன்ற ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகள் மட்டும் தமிழக காவல்துறையினரின் கண்களில் படாமல் போய்விடுகிறதா? அல்லது அரசின் சட்ட திட்டங்களை ஆளுங்கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லையா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

சட்டம் அனைவருக்கும் சமம் தானே?
சட்டம் அனைவருக்கும் சமம் தானே? இல்லாவிட்டால் முதல்வருக்கும் மற்றும் அவரைச் சார்ந்த கட்சியினருக்கும் தனி சட்டப்புத்தகம் ஏதும் உள்ளதா? அண்ணாசாலை மற்றும் கோவை கொடிசியா மைதானம் போன்ற இடங்கள் எல்லாம் பொது இடங்களாக தமிழக காவல்துறைக்கு தெரியவில்லையா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள சசிகலா , ஆளுங்கட்சியினர் அன்றாடம் போடும் வேஷங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கும் சாமானிய மக்களும் கேள்வி கேட்பதாக கூறியுள்ளார்.

திமுகவினரின் சித்து வேலை
என்னதான் திமுகவினர் எத்தனை சித்துவேலைகளை செய்தாலும், மக்களின் மனதை மாற்ற முடியாது என கூறியுள்ள சசிகலா, தமிழக அரசு இனிமேலாவது இதுபோன்று, ஒருதலைபட்சமாக செயல்படாமல், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கொள்கையை கடைபிடித்தால்தான், சாமானிய மக்களும் அடக்குமுறைகளுக்கு ஆளாகாமல் சுதந்திரமாக வாழ்கின்ற சூழ்நிலை அமையும் - அவ்வாறு இல்லையென்றால், தமிழக மக்கள் திமுகவை முற்றிலுமாக புறக்கணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்துக் கொள்வதாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications