மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டேன்.. ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா பேட்டி
சென்னை: இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன் என்று சசிகலா தெரிவித்தார்.
Recommended Video
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு, இந்த ஆண்டு துவக்கத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

சத்தியம் செய்தார்
பெங்களூர் சிறைச்சாலைக்கு செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா, சமாதியின் மீது சத்தியம் செய்வதை போல மூன்று முறை கைகளால் ஓங்கி அடித்தார். நான்கு வருடங்கள் கழித்து சிறையில் இருந்து சென்னைக்கு அவர் திரும்பியபோது வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா நினைவிடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் யாரையும் அனுமதிக்க முடியாது என்று அப்போது இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தெரிவித்துவிட்டது.

முதல் முறை
இதையடுத்து, அவர் அப்போது ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில்தான் நான்கு வருடங்களுக்கு பிறகு இன்று அதிமுகவில் பொன் விழா ஆண்டு, நாளை தொடங்குவதை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா காரில் சென்றார்.

அதிமுக கொடி
அந்த காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. ஜெயலலிதா நினைவிடம் சென்ற அவர், அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. அதை கர்சீப்பால் ஒத்திக் கொண்டார். சில நிமிடங்கள் அங்கே அவர் நின்று கொண்டு எதுவும் பேசாமல் தியானம் செய்வது போல இருந்தார். இதன் பிறகு எம்ஜிஆர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடம் ஆகியவற்றில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் சசிகலா.

சசிகலா பேட்டி
சசிகலா கூறியதாவது: நான் ஏன் இந்த தாமதமாக வந்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் . இத்தனை வருட காலமாக எனது மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன். அதிமுக தொண்டர்களை, எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்த சசிகலா தனது காரில் ஏறிக் கிளம்பிவிட்டார்.

அறிவிப்பு இல்லை
சமீபத்தில் முடிவடைந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மோசமாக தோல்வியை தழுவியுள்ளது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா வருகை தந்தார். அரசியல் வருகை மற்றும் அரசியல் சுற்றுப்பயணம் உள்ளிட்டவை பற்றி அவர் ஏதாவது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் தனது பேட்டியில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த முறையை விட இந்த முறை சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்க வந்தோரிடையே எழுச்சி குறைவாக இருந்ததை கவனிக்க முடிந்தது.












Click it and Unblock the Notifications