எல்லாத்துக்கும் ’அவரே’ காரணம்! தூது விட்ட ஓ.பன்னீர்செல்வம்! கடுகடுத்த சசிகலா! அரண்டு போன தூதுவர்கள்!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி உடன் மோதல் போக்கை கையாண்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை சந்திக்க தூது அனுப்பியதாகவும், ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு திருப்பத்தை சந்தித்து வருகிறது. தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியாகி இருக்கும் நிலையில் அதிமுகவினருக்குள்ளேயே மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்காக காத்திருந்தார் எனவும் சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றி இருக்கலாம், சசிகலா உள்ளிட்டவரை குற்றம் சாட்டுவதை தவிர வேறு வழியில்லை என ஆறுமுகசாமி ஆணையம் பகீர் அறிக்கையை அளித்திருக்கிறது.

ஜெயலலிதா மரணம்
இதனால் அதிமுக தொண்டர்கள் பலரும் சசிகலாவுக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் சசிகலா தரப்பினரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வர் பொறுப்பையும் சேர்த்து கவனித்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் அதன்பிறகு முதல்வராக பதவியேற்றார். இடைக்காலத்தில் சசிகலா தரப்பு குறித்து வாய் திறக்காத நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினார்.

கொந்தளிப்பில் தொண்டர்கள்
அவரது தர்ம யுத்தத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகவும் அது இருந்தது. இதை அடுத்து அணிகள் இணைப்புக்கு பிறகு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சசிகலா ஜெயலலிதா விவகாரம் அதிமுகவில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. பலரும் சசிகலாவை கடுமையாக திட்டி தீர்த்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.

ஓபிஎஸ் தரப்பு தூது
அதே போல ஓபிஎஸ் தரப்பும் அமைதி காப்பதால் என்ன நடக்கிறது என்று புரியாமல் அலைமோதி கிடக்கின்றனர் தொண்டர்கள். இது ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சசிகலா ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இருக்கும் என நீண்ட காலமாகவே யூகங்கள் பரவி வந்தது. இடையே ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கமும் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். நிச்சயம் அனைவரையும் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசி இருந்த நிலையில் அதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

சசிகலா மறுப்பு
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு பிறகு சசிகலாவை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் தரப்பிலிருந்து மூத்த நிர்வாகிகளும் சசிகலா தரப்பிலிருந்து சிலரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சசிகலா ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காரணம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைக்கு மூல காரணமே ஓபிஎஸ் என்பதால் கடும் அதிருப்தியில் அவர் இருப்பதாகவும் தற்போதைக்கு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி ஓ .பன்னீர்செல்வம் மோதல் குறித்து சிந்திக்க வேண்டாம் என அவர் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications