மாறிப் போன டிடிவி, சசிகலா பேச்சு.. ஷாக்கில் திமுக.. அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
சென்னை: சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் டிடிவி தினகரனின் பேச்சுக்கள் மொத்தமாக மாறி உள்ளது. ஏன் சசிகலாவின் கூட மிக கவனமாக பேசுவதாக தெரிகிறது. இருவருமே திமுக தான் நமது பொது எதிரி. அதற்கு எதிராக நாம் போராட வேண்டும் என்று அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசாமல் இருவரின் பேச்சும், அதிமுகவை பலப்படுத்துவதிலும், பொது எதிராக திமுகவை நாம் சட்டசபை தேர்தலில் சந்திக்க வேண்டும் என்பதாக உள்ளது.
இவர்களின் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து வரும், அதிமுக தலைவர்கள், அடுத்து நம்முடைய அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறார்கள்.

சசிகலா வருகை
சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனையை அனுபவித்து விட்டு கடந்த 27ம் தேதி விடுதலையானார். நேற்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்ட சசிகலா 23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னையில் உள்ள தியாகராய நகர் இல்லத்தை இன்று அதிகாலை அடைந்தார். வழியில் பல்வேறு இடங்களில் அமமுகவினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு மெதுவாக வந்தார்.

திமுக எதிரி
சசிகலா நேற்று கிருஷ்ணகியில் பேசும் போது, "விரைவில் அனைவரையும் சந்திப்பேன். நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என்றார். மேலும் மிக அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன்.
அதிமுக அலுவலகத்துக்கு செல்வேனா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித்தலைவி வழிவந்த ஒரு தாய் பிள்ளைகள், ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம்" என்றார்.

எதிரிகள் அல்ல
டிடிவி தினகரன் இன்று சென்னை திநகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கட்சியின் பொதுச் செயலாளரை பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவது என்பது விந்தையாக உள்ளது. உண்மைக்காக போராடுபவர்கள் நிச்சயம் எங்களுடன் தான் வருவார்கள். சசிகலா வரும் வழியில் சில இடங்களில் தடைகள் இருந்தது. அமமுக. தொடங்கப்பட்டதே அதிமுகவை மீட்க தான். அதிமுகவை மீட்ட பின்னர் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அ.தி.மு.க.வில் தொடர்வார்களா என்பது குறித்து பேசுவோம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சசிகலா கூறுகிறார். புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் எங்களுக்கு எதிரிகளே அல்ல. எங்களுக்கு ஒரே பொது எதிரி திமுகதான்" என்றார்.

கவனிக்கிறது திமுக
சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய இருவருமே முதல்வர் எடப்பாடி பழனிசாமியையோ அல்லது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தையோ விமர்சிக்கவில்லை. மாறாக வாருங்கள் சேர்ந்து செயல்பட்டு, திமுக என்ற பொது எதிரியை வீழ்த்துவோம் என்கிறார்கள். இவர்களின் இந்த பேச்சு எந்த அளவிற்கு அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. சசிகலாவும், டிடிவி தினகரனும் அதிமுகவில் இணைவார்களா அல்லது இணைக்கபட மாட்டார்களா என்பது இன்னும் சில நாளில் தெரியவரும். திமுகவை வீழ்த்துவோம் என்ற பொது எதிரி கான்செப்ட், திமுகவை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது என்பது உண்மை.