அரசு ஊழியர்கள் மீதான விசாரணைக்கு முன்அனுமதி சட்டப்பிரிவு செல்லுமா? உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு
டெல்லி: அரசு ஊழியர்கள் எடுக்கும் நேர்மையான நிர்வாக முடிவுகளுக்காக, அவர்கள் பழிவாங்கப்படுவதைத் தடுக்க இந்த 'முன் அனுமதி' பாதுகாப்பு அவசியம் என்று அரசு கருதியது. ஆனால் சரியாக இல்லை.. இது அரசு ஊழியர்களை பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.. அரசு ஊழியர்கள் மீது ஊழல் விசாரணை நடத்த முன்அனுமதி பெற வேண்டும் என்ற சட்டப்பிரிவு செல்லுமா என்பது பற்றிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பு அளித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் எடுக்கும் நேர்மையான நிர்வாக முடிவுகளுக்காக, அவர்கள் பழிவாங்கப்படுவதைத் தடுக்க இந்த 'முன் அனுமதி' பாதுகாப்பு அவசியம் என்று அரசு கருதியது. மேலும் விசாரணை என்ற பயம் இருந்தால், அதிகாரிகள் எந்தக் கோப்பிலும் கையெழுத்திட மாட்டார்கள்; அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துவிடும்..ஆட்சி மாறும்போது பழைய அதிகாரிகள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் போடப்படும் பொய் வழக்குகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சட்டத்தில் பாதுகாப்பை கொண்டு வந்தது.

இதற்காக கடந்த 1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில் உரிய மேல் அதிகாரியிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் எந்த அரசு ஊழியர் மீதும் விசாரணை நடத்தக்கூடாது என்ற 17ஏ பிரிவு கடந்த 2018-ம் ஆண்டு அச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
இதற்கிடையே, முன்அனுமதி பெற வேண்டும் என்ற உட்பிரிவால், அரசு ஊழியர்களுக்கு எதிரான விசாரணை பாதிக்கப்படும் என்றும், அதனால் அந்த உட்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி, 'பொதுநல வழக்கு மையம்' என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண், அரசாங்கம் சர்வ சாதாரணமாக அனுமதி கொடுப்பது இல்லை என்பதால், 17ஏ பிரிவு, ஊழல் தடுப்பு சட்டத்தை முடக்குவதாக குற்றம் சாட்டினார். அவர் வாதிடுகையில், "ஊழலை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி: பிரிவு 17A என்பது ஊழலைத் தடுப்பதற்கானது அல்ல, மாறாக ஊழல் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கான "இரும்புத் திரை" . விசாரணைக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பது, ஒரு குற்றவாளியைக் காப்பாற்ற அரசாங்கமே வழிவகுத்துக் கொடுப்பது போன்றது.
அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதே அரசியல்வாதிகள் அல்லது ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்தோடுதான் பல நேரங்களில் நடக்கிறது. அப்படி இருக்கும்போது, அந்த அதிகாரி மீது விசாரணை நடத்த அதே அரசாங்கத்திடம் அனுமதி கேட்பது என்பது, "திருடனிடமே சாவி கொடுப்பது போன்றது.
விசாரணைக்கு அனுமதி கோரும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தகவல் தெரிந்துவிடுகிறது. இதனால் அவர் ஆவணங்களை அழிப்பதற்கும், சாட்சிகளைக் கலைப்பதற்கும் அரசாங்கமே கால அவகாசம் கொடுத்தது போல ஆகிறது. 'ரகசிய விசாரணை' என்பதே இங்கே இல்லாமல் போகிறது.
ஒரு பாக்கெட் பால் திருடியவனுக்கு உடனடியாகக் கைது உண்டு. ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அரசு அதிகாரிக்கு மட்டும் 'முன் அனுமதி' எனும் சிறப்புரிமை ஏன்? இது அரசியலமைப்புச் சட்டம் 14-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற உரிமையை அப்பட்டமாக மீறுகிறது. அரசாங்கம் சர்வ சாதாரணமாக அனுமதி கொடுப்பது இல்லை. குறிப்பாக செல்வாக்குள்ள அதிகாரிகள் அல்லது ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி கோரினால், அந்த கோப்புகள் காலவரையன்றி முடக்கப்படுகின்றன. இதன் மூலம் ஊழல் தடுப்புச் சட்டமே செயலற்றுப் போகிறது" இவ்வாறு வாதிட்டார்
தொடர்ந்து 17ஏ பிரிவு தொடர்பாக மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அப்போது அவர் கூறும் போது, அரசு அதிகாரிகள் ஒரு முடிவை எடுக்கும்போது, பின்னாளில் விசாரணை வரும் என்கிற பயம் இருந்தால் அவர்கள் செயல்படத் தயங்குவார்கள். இது நாட்டின் வளர்ச்சிக்கும், நிர்வாகத்திற்கும் முட்டுக்கட்டையாக அமையும். நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்க இந்த 'முன் அனுமதி' வடிகட்டி அவசியம்.
ஆட்சி மாறும்போது அல்லது தனிப்பட்ட பகை இருக்கும்போது, அரசு ஊழியர்கள் மீது பொய்யான மற்றும் உள்நோக்கம் கொண்ட புகார்கள் அளிக்கப்படுகின்றன. விசாரணை என்ற பெயரில் அவர்களை அலைக்கழிப்பதைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
பழைய தீர்ப்புகளில் உயர் அதிகாரிகள் - கீழ்நிலை அதிகாரிகள் எனப் பிரித்துப் பார்த்ததுதான் தவறு எனச் சொல்லப்பட்டது. ஆனால், பிரிவு 17A அனைத்து நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கும் பொதுவானது; எனவே இது பாரபட்சமானது கிடையாது. இது ஊழலை மறைப்பதற்கான சட்டமல்ல, மாறாக 'விசாரணைக்கு முன் ஒரு சரிபார்ப்பு' மட்டுமே. 60% வழக்குகளுக்கு சிபிஐ-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது (புள்ளிவிவரங்களையும் அவர் தாக்கல் செய்தார்) என்றார்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. இரு நீதிபதிகளும் ஒருவருக்கொருவர் முரண்பட்ட தீர்ப்பு அளித்தனர். நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில் கூறுகையில்,
இந்தப் பிரிவு 17A என்பது ஊழலுக்கு எதிரான போரில் ஒரு 'பின்னடைவு' எனத் தாக்கினார். அவர் கூறும் போது, ஊழல் என்பது சமூகத்தை அரிக்கும் புற்றுநோய் போன்றது. அதைத் தடுக்க வேண்டிய சட்டமே, ஊழல்வாதிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கக் கூடாது.
இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் (ஆர்டிக்கிள் 14) என்கிற விதியை மீறுகிறது. ஒரு சாதாரணக் குடிமகனுக்கும், அரசு அதிகாரிக்கும் தனித்தனி சட்டங்கள் இருக்க முடியாது. ஏற்கனவே 'வினீத் நாராயண்' மற்றும் 'சுப்பிரமணிய சுவாமி' வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இத்தகைய 'முன் அனுமதி' முறையை ரத்து செய்திருந்தது. ஆனால், அரசாங்கம் மீண்டும் அதே போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது நீதிமன்ற அவமதிப்பு போன்றது. உண்மையிலேயே நேர்மையாக இருக்கும் அதிகாரிகளுக்கு இத்தகைய சட்டக் கவசங்கள் தேவையில்லை. இது மறைமுகமாக ஊழல்வாதிகளை விசாரணையில் இருந்து தப்பிக்கவே வழிவகுக்கிறது" என்றார்..
நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தனது தீர்ப்பில் கூறுகையில்,17ஏ பிரிவை ரத்து செய்வது என்பது, குழந்தையைக் குளிப்பாட்டிய தண்ணீரோடு சேர்த்து குழந்தையையும் கீழே ஊற்றுவதற்குச் சமம்". அதாவது, ஒரு சிறிய தவறுக்காக நல்ல அதிகாரிகளின் தைரியத்தை முடக்கிவிடக் கூடாது.
இன்றைய சமூக ஊடகக் காலத்தில், ஒரு அதிகாரி மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டாலே அவர் குடும்பத்தோடு அவமானப்பட வேண்டியுள்ளது. பின்னர் அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும் அந்த இழந்த மரியாதையை மீட்க முடியாது. ஆனால் ஒரு பெரிய மாற்றம் தேவை. விசாரணைக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திடம் வைக்கக் கூடாது. மாறாக, லோக்பால் அல்லது லோக் ஆயுக்தா போன்ற தன்னாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமான முடிவு எடுக்கப்படும்" இவ்வாறு கூறினார்.
தங்களது முரண்பட்ட தீர்ப்பு காரணமாக, அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இவ்வழக்கை மாற்ற தலைமை நீதிபதி முன்பு வழக்கை முன்வைக்குமாறு கோர்ட்டு பதிவாளருக்கு 2 நீதிபதிகளும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications