மாறியது சீன்.. "பாம்பு பாஜக" விடுங்க.. விஜய்க்கு CM ஆசை கேட்குதா? பிரகாஷ் ராஜ் பேச பேச மலைத்த மதுரை
சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் தொடர்ச்சியாக தன் கருத்துக்களைப் பேசி வருகிறார். விரைவில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரகாஷ் ராஜின் பிரச்சாரங்கள் ஒவ்வொன்றும் வாக்காளர்களின் கவனத்தை பெற்று வருகின்றன.. இப்போதுகூட, மதுரை மத்திய தொகுதியில் பிரச்சாரம் செய்தது, மற்றும் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசின் கொள்கைகளை விமர்சித்தது போன்றவை அனைத்துமே சோஷியல் மீடியாவிலும முக்கியத்துவம் பெறுகின்றன.
பழனி தொகுதியில் போட்டியிட்டு சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு வாக்கு கேட்டு பிரகாஷ்ராஜ் 2 நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்திருந்தார்.. அப்போது பேசிய அவர், "பதவி ஆசை பிடித்த எடப்பாடி பழனிசாமி போன்ற ஒரு தவளை, வெளியே சென்று "பிஜேபி" என்கிற பாம்பைத் தமிழ்நாட்டிற்குள் அழைத்து வருகிறது.

அந்தப் பாம்பு உள்ளே வந்தால் மற்ற தவளைகளை மட்டுமல்ல, அந்தப் பாம்பைத் தூக்கி வந்த தவளையையும் சேர்த்து விழுங்கிவிடும். இப்படித் தன்மானத்தை மோடியின் காலடியில் அடகு வைப்பதுதான் 'அடிமை மாடல்.
சினிமா மாடல் - தவெக விஜய்
அதேபோல சினிமா மாடல் என ஒன்று உள்ளது. ஒரே படத்தின் மூலம் பணம் சம்பாதித்து விடலாம்.மிகப்பெரிய அளவில் ஸ்டாராக மாறி விடலாம். அது சினிமாவில் சாத்தியம். ஒரு சினிமாவில் நீங்கள் டாக்டர், இன்ஜினியர், முதல்வராக மாறலாம்.
ஆனால் அரசியலில் அப்படியே முதல்வராகி விட முடியுமா?. யார் அரசியல் பேச வேண்டும்? என் அளவிற்கு அரசியல் பேசியது உண்டா?. இத்தனை வருடங்களில் தமிழ்நாட்டில் மக்களுக்கோ, மொழிக்கோ, தன்மானத்துக்கோ பிரச்சனை வந்தபோது வந்தது நின்றது உண்டா?, உங்கள் மேல் மக்கள் வைத்திருக்க அன்பு திறமைக்கு தான் தவிர, அரசியலுக்கு கிடையாது. அதை நீங்கள் பயன்படுத்தி கொள்கிறீர்கள்.
3 விரல் தொண்டையில் விட்டு விசில்
நடிகருக்கு ரொம்ப பிடிச்சா 3 விரலை தொண்டையில் விட்டு விசிலடிக்கலாம். ஆனால் நாட்டையெல்லாம் கொடுக்க முடியாது. அதை கொடுக்கக்கூடாது. அரசியல், சினிமா என்பது வெவ்வேறானது.
அதற்கு களத்தில் இறங்கி பேச வேண்டும். திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல் வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். விஜய் சொல்வதைப் போல தவெக - திமுகவுக்கோ நடக்கும் தேர்தல் கிடையாது. இது ஒற்றுமைக்கும், பிரிவினைக்கும் இடையே நடக்கும் தேர்தல்" என்றெல்லாம் பேசியிருந்தார்.
இப்போது மதுரையில் நடந்த பிரச்சாரத்தில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ், பாஜக கொள்கைகளால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறார்கள் என்று கடுமையாக சாடியிருக்கிறார்,
மதுரையில் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம்
திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் நடிகர் பிரகாஷ்ராஜ்.. அப்போது அவர், கடந்த 5 வருடங்களாக திமுக ஆட்சி மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சாதனைகளை விலாவரியாக எடுத்துரைத்தார்.
பிறகு பொதுமக்களிடம் பேசும்போது, "அதிமுகவிற்கு செலுத்தும் வாக்கு, பாஜவிற்கு அளிக்கும் வாக்காகும். கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசின் கொள்கைகள் காரணமாக மக்கள் பல்வேறு இழப்புகளையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். பல தொழில்கள் முடங்கியுள்ளன.
அதற்கு மாறாக, தமிழ்நாடு இன்றைக்கு தொழில் துறை மற்றும் கல்வி துறைகளில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக திகழ்கிறது. மேலும் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்காக தமிழ்நாட்டின் எம்பிக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனவே, இந்த அனைத்தையும் சிந்தித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்..
திராவிட மாடல் வளர்ச்சி வேண்டுமா அல்லது சினிமா மாடல் வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் விடுத்த அழைப்பு, மதுரை வாக்காளர்களிடையே ஒருவித மலைப்பை ஏற்படுத்தியுள்ளது....!!














Click it and Unblock the Notifications