அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்துக்குள் நுழைய தடை? விஜய் அரசுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்துக்குள் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் நுழைய தடை விதித்துள்ள நவீன தீண்டாமைக்கு "களம் பாடம் கற்பிக்கும்" என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, தங்கள் பிரச்சனைகளுக்கான முறையீடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தலைமைச் செயலகத்தின் உள்ளே செல்லவே முடியாத நிலை நிலவி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தேர்வு செய்யப்பட்டு ஆட்சிப் பெறுப்பேற்றிருக்கும் ஒரு சேமநல அரசு எனும் கோட்பாட்டிற்கு எதிரான இந்த அணுகுமுறைக்கு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

TVK Government

இறைவனை வழிபட ஆலயங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அனுமதிக்க மறுப்பது எவ்வளவு கொடுமையான தீண்டாமையோ, அதே போல நாட்டின் பொது அதிகார மையமான அரசு நிர்வாக இடங்களுக்குள் நுழைவதை தடுப்பதும், அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாழ்வாதார மற்றும் சமூக வளர்ச்சியை முடக்கும் தீண்டாமைக் கொடுமையே.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் வெறும் வழிபாட்டு உரிமைக்காக மட்டும் போராடவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவுமே போராடினர். தீண்டாமை என்பது மனிதர்களைத் தொடாமல் இருப்பது மட்டுமல்ல. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் மக்களைத் தள்ளி வைப்பதும் தீண்டாமையே!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சேமநல அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திற்குள், சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அல்லது அனுமதி மறுப்பு என்பது தீண்டாமைக்கு நிகரானது மட்டுமல்ல, ஜனநாயக விரோத செயல்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திற்குள், தங்களின் குறைகளைத் தீர்க்க நேரடியாக வரும் சாமானிய மக்களை, சங்க நிர்வாகிகளை பாதுகாப்பு அல்லது ஒழுங்கு என்ற பெயரில் உள்ளே அனுமதிக்க மறுத்து, உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை நேரடியாகச் சந்திக்கும் உரிமையை மறுத்து, வாசலிலேயே மனுக்களைப் பெற்றுக் கொண்டு மக்களை அரசு நிர்வாகத்திலிருந்து அந்நியப்படுத்துவது ஒரு வகையான நவீன அதிகாரத்துவப் பாகுபாடு மட்டுமல்ல. அதிகாரத் தீண்டாமையுமாகும். இவ்வாறு தடுப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தலைமைச் செயலகம் என்பது மிக முக்கியமான அரசு ஆவணங்களும், உயர் பொறுப்பில் உள்ளவர்களும் இருக்கும் தற்காப்புப் பகுதி என்பதால், அங்கு பாதுகாப்பு சோதனைகளும் அனுமதிச் சீட்டு முறைகளும் அவசியமாகின்றன என்றும், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உள்ளே நுழைந்தால், அன்றாட அலுவலகப் பணிகள் மற்றும் கோப்புப் பரிமாற்றங்கள் பாதிக்கப்படலாம் எனவும் நிர்வாகத்தால் முன்வைக்கப்படும் காரணங்கள் எதுவும் ஏற்புடையதல்ல.

மேலும், தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வாரியாக நடத்தப்படும் குறைதீர்க்கும் முகாம்கள் மூலமாகவோ மனுக்களை எளிதாக அனுப்பும் வசதிகள் உள்ளதால், தலைமைச் செயலகத்தில் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்கவே இக்கட்டுப்பாடுகள் எனும் அரசுத் தரப்பின் விளக்கம் சாமானிய மக்கள் தங்களின் உரிமைகளுக்காகவும், குறைகளுக்காகவும் அரசை நாடி வரும் போது, அவர்களின் சுயமரியாதையோ அல்லது அணுகும் உரிமையோ பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பையும், மக்கள் தேவையையும் சமநிலைப் படுத்தும் வெளிப்படையான நிர்வாக நடைமுறையை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

அதற்கு மாறாக, தலைமைச் செயலகத்துக்கு, தலைமைச் செயலக ஊழியர்கள் தவிர வேறு யாரும் உள்ளே வரக்கூடாது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காவல் துறைக்கு கட்டளையிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால் தவெக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து தலைமைச் செயலகத்துக்குள் சங்கங்களின் தலைவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.ஜி.இராமச்சந்திரன், கலைஞர், ஜெ.ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சி காலத்தில் ஒரு நாள் கூட இது போன்று நடந்தது இல்லை. பார்வையாளர்களை சந்திப்பதற்கு கடந்த காலத்தில் அமைச்சர்கள் என்ன நடைமுறையை கையாண்டனர் என்பதை தற்போதைய அமைச்சர்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டுகிறோம்.

இன்றைய தவெக அரசின் தீண்டாமை அணுகு முறையால், தங்களது கோரிக்கைகளுடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கஷ்டப்பட்டு, கடன்பட்டு சென்னை வரும் ஏழை எளிய மக்கள், கோட்டைக்குள் நுழைய முடியாமல் நுழைவாயில் அருகிலேயே தங்களது மனுக்களுடன் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மனரீதியாக சோர்வடையும் எளிய மக்கள் வருங்காலங்களில் தக்க பாடத்தை கற்பிப்பார்கள் என்பதை தவெக அரசு உணர்ந்து தலைமைச் செயலகத்திற்குள் நுழைய புதிதாகப் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும்.

இல்லையேல் தவெக அரசின் தீண்டாமைக்கு எதிராகவும், ஜனநாயக உரிமை மறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமிழகம் போர்களமாக மாறுவது தவிர்க்க இயலாததாகும் என்பதை ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் உணர வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+