விசில் ஊதி வாய்க்கரிசி போட்டுக்கோங்க.. தமிழ்நாட்டில் விரைவில் அரிசிக்கு பஞ்சம் வரும்! சீமான் ஆதங்கம்
செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் விரைவில் பஞ்சம் வரும் என்றும், அப்போது விசில் எடுத்து ஊதிவிட்டு வாய்க்கரிசு போட்டுவிட்டு படுத்துக் கொள்ளுங்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். திமுகவை விடவும் தவெக மிகப்பெரிய தீயசக்தி என்று கூறிய சீமான், சினிமா புகழ் வெளிச்சத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வந்தவர்கள் நாங்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் வார இறுதி நாட்களான நேற்றும், இன்றும் சூடுபிடித்திருக்கிறது. கடந்த இரு நாட்களாக திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மதுராந்தகம் தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது சீமான் பேசுகையில், சினிமா புகழ் வெளிச்சத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வந்தவர்கள் நாங்கள் அல்ல. ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்து, புதிய கட்சி தொடங்கியவர்களும் நாங்கள் அல்ல. உழைக்கும் அடித்தட்டு மக்களுடைய வாரிசுகள் நாங்கள். திமுக தீயசக்தி தான். அதனைவிட தீயசக்தி யாரென்றால் அது தவெக தான். காசு கொடுக்காமல் வாக்குகளை பெற்ற கட்சி என்றால், அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.
அரசியல் கோட்பாடுகளை இன்னும் ஆழமாக உங்களிடத்தில் சேர்க்க தவறிவிட்டோமோ என்ற ஐயம் உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் விரைவில் அரிசிக்கு பஞ்சம் வரும். அப்போது விசில் எடுத்து ஊதிவிட்டு வாய்க்கரிசு போட்டுவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். தாகமா இருக்கா? விசில் எடுத்து ஊது.. வேற ஒண்ணும் பண்ண முடியாது.
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் பிரச்சனை, காவிரியில் தண்ணீர் வாங்க முடியவில்லை. விவசாயம் செய்ய முடியவில்லை என்றால், அரிசிக்கு பஞ்சம் தான் வரும். பால் கூட ஆந்திராவில் இருந்து தான் வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 14 மணி நேரம் மின் தடை இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். அதே பஞ்சாப் மாநிலத்தில் தான் ஒரு சுங்கச்சாவடி கூட இல்லை. அதனை உங்களால் முன் மாதிரியான எடுத்துக் கொள்ள முடியுமா?
நான் ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடியை தூக்கிவிடுவேன். அதேபோல் மரகதம் குமரவேல் இதற்கு முன் எம்எல்ஏ-வாக இருந்த போது, என்ன செய்துவிட்டார்? ஒன்றும் கிடையாது. கட்சி மாறியதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை பாருங்கள்.. திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டார்களாம்.. உடனே எம்ஜிஆரை எல்லாம் கொண்டு வந்து பேசுகிறார்கள்.
ஏன்டா விஜய் வந்து ஊழல் சக்தி, தீர்ந்து போன கட்சி மற்றும் பலர் என்று சொல்லும் போது கோபம் வரவில்லையா? மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அடித்த 7 ஆயிரம் டிக்கெட்டுகளை பணத்திற்கு விற்றுள்ளார்கள். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தையே கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இந்த நாட்டில் என்னென்னமோ நடக்கிறது? என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
