• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எழுவர் விடுதலை.. தமிழகம் பெரும் போர்க்களமாக மாறும்.. சீமான் எச்சரிக்கை

|

சென்னை: எழுவர் விடுதலையை ஆளுநர் இனியும் தாமதப்படுத்தினால் தமிழகம் பெரும் போர்க்களமாக மாறும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எழுவர் விடுதலை தாமதமாக்கப்படுதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வதைப்பட்டுக் கொண்டிருக்கிற தம்பிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அக்கா நளினி ஆகியோரை விடுதலை செய்யக்கோரி 161வது சட்டப்பிரிவின்படி தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை மாதங்களைக் கடந்தும் அதுகுறித்தான எந்தவொரு முடிவையும் ஆளுநர் அறிவிக்காதிருப்பது தாங்கொணாத் துயரத்தையும், பெரும் ஆற்றாமையையும் தருகிறது.

பாஜக - அதிமுக உறவை மறைக்கவே தம்பிதுரை குற்றச்சாட்டு... திருநாவுக்கரசர் விமர்சனம்!]

பெருந்தலைவர் ராஜீவ் காந்தி

பெருந்தலைவர் ராஜீவ் காந்தி

மரணித்த ராஜீவ் காந்தி ஒரு அரசியல் பெருந்தலைவர் என்பதினாலேயே இக்கொலை வழக்கில் பெரும் அரசியல் சூழ்ச்சிகளும், சதி வலைகளும் பின்னப்பட்டு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டு ஏழு தமிழர்களும் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கம்பிகளுக்கு நடுவே வாடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வழக்கின் விசாரணை வளையம் உண்மையானக் குற்றவாளிகளை நோக்கி விரிவடையவுமில்லை; விசாரணையானது முழுமையாக நிறைவடையவுமில்லை என்பதன் மூலம் மக்களின் கூட்டு மனசாட்சிக்கும், பொதுப்புத்திக்கும் இரையாக்கப்படவே, ஏழு தமிழர்களும் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனைப் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்துவிட்டோம்.

தமிழ் இனத்தின் கனவு

தமிழ் இனத்தின் கனவு

எழுவரின் விடுதலை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் நெடுநாள் கனவு. 12 கோடி தமிழர்கள் மீதும் சுமத்தப்பட்டக் களங்கத்தைத் துடைப்பதற்கான வரலாற்று வாய்ப்பு. அதற்காக நாம் கொடுத்த விலையும், பட்ட துயரும் மிக மிக அதிகம். கால் நூற்றாண்டு காலமாகக் கால்கடுக்க இந்நிலமெங்கும் சென்று தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய் களத்தில் நிற்கும் நமது தாய் அற்புதம்மாள் சிந்தியக் கண்ணீரையும், வலியினையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் நடந்தப் பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கருத்துப் பரப்புரைகள், அரசியல் அழுத்தங்கள், சட்டப்போராட்டங்கள், செங்கொடியின் உயிரீகம் எனப் பல அசாத்தியப் போர்க்களங்களைக் கண்டே இன்றைக்கு எழுவரின் விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

பழிவாங்குதல் கொலைதான்

பழிவாங்குதல் கொலைதான்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது பயங்கரவாத நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்டச் சதிச்செயல் அல்ல! அது வெறுமனே பழிவாங்குதல் போக்குடன் கூடிய கொலைதான் எனக்கூறி, தடா சட்டம் இவ்வழக்கிற்குப் பொருந்தாது என உச்ச நீதிமன்றம் கடந்த 11.05.1999 அன்று அறிவித்தது. இருந்தபோதிலும், தடா சட்டத்தின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டே எழுவரும் 27 ஆண்டுகளாய் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதன் மூலம் இவ்வழக்கில் எந்தளவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்துகொள்ள முடியும்

26 பேருக்கும் தூக்குத் தண்டனை ரத்து

26 பேருக்கும் தூக்குத் தண்டனை ரத்து

மத்தியப் புலனாய்வுத் துறையின் கடும் சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் தடா விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்தத் தீர்ப்பினை ரத்து செய்து, அதுகுறித்து கருத்துத் தெரிவித்த உச்சநீதிமன்றம், அத்தீர்ப்பினை ‘நீதித்துறை பயங்கரவாதம்' என்று கூறியிருந்தது. அதனையேதான் இப்போது நாமும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கக்கூற வேண்டியிருக்கிறது. ஏதுமறியா அப்பாவிகளான ஏழு தமிழர்களையும் 27 ஆண்டுகள் சிறையிலே வதைத்தும் இன்னும் வன்மம் தீராது அவர்களை விடுதலை செய்ய மறுத்து அரசியல் செய்ய முற்படுவது என்பது அப்பட்டமான ஒரு சனநாயகப் படுகொலை; மனிதநேயமற்றப் பெருங்கொடுமை.

சட்டத்தில் இடமிருக்கிறது

சட்டத்தில் இடமிருக்கிறது

பொதுவாக ஆயுள் தண்டனைக் கைதிகளை 14 ஆண்டு காலத்திலேயே நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலைசெய்வதற்குச் சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால், ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கிற எழுவரும் 27 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் அடைப்பட்டுக்கிடக்கிறார்கள் என்பது அப்பட்டமான மனிதவதை. இச்சனநாயக நாட்டில் விடுதலைக்குரியத் தகுதிகளைக் கொண்டிருக்கிற எழுவரையும் அதிகாரம் கொண்டு தனிமனிதக் காழ்ப்புணர்ச்சிக்கும், அரசியல் பழிவாங்குதல் போக்குக்கும் இரையாக்க முனையும் கொடுஞ்செயலைப் புரிவது எதன்பொருட்டும் ஏற்கவியலா மனித உரிமை மீறல். இவ்வழக்கில் எழுவரின் வாக்குமூலங்களையும் பெற்ற மத்தியப் புலனாய்வுத்துறை அதிகாரி தியாகராஜன், தம்பி பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் தான் திருத்தி எழுதியதாக ஒப்புக்கொண்டு அதனை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரமாகத் தாக்கல் செய்திருக்கிறார். இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கே.டி.தாமஸ் அவர்களும், ‘எழுவரும் விடுதலைக்குத் தகுதியானவர்கள்' எனக் கூறுகிறார். ஆகவே, இனியும் விடுதலை செய்யாது எழுவரையும் சிறைப்படுத்தி வைத்திருப்பது என்பது சனநாயகத்தையே சாகச் செய்வதற்குச் சமம்.

முட்டுக்கட்டை போட்டது காங். அரசு

முட்டுக்கட்டை போட்டது காங். அரசு

எழுவரையும் விடுதலை செய்வதெனத் தீர்மானித்து அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடந்த 2014ல் அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டைப் போட்டது அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரசு. தற்போது, எழுவரையும் விடுதலை செய்வதற்குரிய அதிகாரம் மாநில அரசிற்கு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 09 அன்று தமிழகச் சட்டப்பேரவை எழுவரின் விடுதலைக்கானத் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆளுநர் முடிவெடுப்பதற்குரிய காலக்கெடு எதுவும் சட்டத்தில் குறிப்பிடப்படாததால் அதனையே சாதகமாகக் கொண்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் எத்தகைய முடிவையும் எடுக்காது ஆளுநர் காலங்கடத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

அரசின் முடிவை ஆளுநர் ஏற்க வேண்டும்

அரசின் முடிவை ஆளுநர் ஏற்க வேண்டும்

மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டச் சட்டப்பேரவையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்குவதுதான் ஆளுநரின் அதிகாரமேயன்றி தனிப்பட்ட அதிகாரம் எதுவும் அவருக்கில்லை. ஆகவே, 8 கோடி மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற ஓர் அரசின் முடிவை ஆளுநர் அலட்சியப்படுத்துவது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கும் படுபாதகச்செயல். இதற்கெதிராகச் சனநாயகப் பேராற்றல்களும், இன உணர்வாளர்களும், மனிதவுரிமை ஆர்வலர்களும், சமூகப் போராளிகளும், இனமானத் தமிழர்களும் ஓரணியில் திரண்டு எழுவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டியது வரலாற்றுப் பெருங்கடமை என்பதை உணர்ந்து வீதிக்கு வந்து போராட அறைகூவல் விடுக்கிறேன்.

எச்சரிக்கிறேன்

எச்சரிக்கிறேன்

ஆகையினால், எழுவரின் விடுதலைக்குத் தீர்மானம் இயற்றியதோடு தனது கடமை முடிந்துவிட்டதெனக் கருதி நிற்கும் மோசடித்தனத்தைத் தமிழக அரசு இனியும் செய்யாது தமிழக ஆளுநருக்கு அரசியல் அழுத்தங்களைக் கொடுத்து எழுவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், தமிழக ஆளுநர் அவர்கள் எழுவரின் விடுதலைக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி, அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோருகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் தமிழர் இறையாண்மையைக் காக்கும்பொருட்டு மக்களை அணிதிரட்டித் தமிழக வீதிகளைப் பெரும் போராட்டங்களமாக மாற்றுவோம் என எச்சரிக்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
ஸ்டிரைக் ரேட்
AIADMK 50%
DMK 50%
AIADMK won 1 time and DMK won 1 time since 2009 elections

 
 
 
English summary
Naam Tamilar party chief Seeman has urged TN Governor to clear the file regarding the 7 Tamils release.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more