நெல்லையில் திடீரென இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை.. கோவைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் வெயில் ஒருபக்கம் கொளுத்தி வரும் நிலையில் இன்று மாலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. நெல்லை அம்பாசமுத்திரம், பாபநாசம் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதிய நேரங்களில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் அனலாக தகிக்கிறது. இன்று மாலை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. அம்பாசமுத்திரம், இடைகால், பள்ளக்கால் புதுக்குடி, கல்லிடைக்குறிச்சி, பாபநாசம் என பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

கோவையில் மழை பெய்யும்
இதனால் பகலில் அனலாக தகித்த இப்பகுதிகள் குளிர்ந்து காணப்பட்டது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வடக்கு உள் கர்நாடகா முதல் குமரிக்கடல் வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதனால் இன்று 26-04-2026: மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மழை வெளுக்கும்
நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
29 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே 2 வரை மழை தான்
30 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வரும் 1 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
2 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
26-04-2026 முதல் 30-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்
அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் கிளைமேட் எப்படி?
சென்னையில் இன்று (26-04-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் நாளை (27-04-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். என்று கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications