"தெலுங்கு வந்தேறிகள்".. அந்த "சைமன்" டிராமா பண்ணிட்டிருக்கார்.. கைது பண்ணுங்க.. அதிரவைத்த நாகேந்திரன்
சீமான் பேச்சுக்கு அருந்ததிய கூட்டமைப்பு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்
சென்னை: நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான், "அருந்ததிய மக்கள், ஆந்திராவிலிருந்து வந்தவர்கள்" என்று சீமான் பேசியிருந்ததையடுத்து, அவருக்கான எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து கொண்டிருக்கின்றன.. சீமானை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாகி வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமான் பிரச்சாரம் செய்தார். வழக்கமாக சாதி அரசியலை கையில் எடுக்காத சீமான், இந்த முறை இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு முதல் அனைத்து வியூகங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தியிருந்தார்.
திமுக மீதான எதிர்ப்பை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தினாலும், தன்னுடைய இடைத்தேர்தல் பிரச்சாரங்களில், முதலியார் ஜாதி வாக்குகளை குறிவைத்தும் பேசினார்.

முதல் + யார்
"முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத்தமிழ் மக்கள்தான் முதலியார்.. அந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். அத்துடன் போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். அதனால்தான் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர். இந்த வரலாறு தெரியுமா? அத்துடன் இந்த நிலத்தில் என் ஆதித்தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதைப்போல விஜயநகரப் பேரரசு ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள்.

தெலுங்கர்கள்
வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள்" என்று சீமான் பேசியிருந்தார்... அதாவது, அருந்ததியர்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்து குடியேற்றப்பட்ட வந்தேறிகள் என்பதுபோல சீமானின் கருத்துக்கள் இருந்ததால், இதை கேட்டு அருந்தியினர் அதிர்ச்சி அடைந்தனர். சீமானின் பேச்சுக்கு அருந்ததியினர் உடனடியாக தங்கள் எதிர்ப்புகளை கடுமையான பதிவு செய்தனர்.. கண்டனங்களை தெரிவித்தனர்.

வந்தேறிகள்
இதையடுத்து, போராட்டங்களையும் சீமானுக்கு எதிராக நடத்த துவங்கினர். இதனால் இடைத்தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டது... இடைத்தேர்தல் முடிந்தபிறகும்கூட, ரிசல்ட் வந்தபிறகும்கூட, தங்கள் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் விடாமல் தெரிவித்து வருகிறார்கள்.. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, கோவை என பல இடங்களில் சீமான் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.. போராட்டம் தீவிரமானதால், "அருந்ததியர் வந்தேறிகள்" என்று பேசியது குறித்த செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்..

தூண்டறாங்க
அதற்கு சீமான், "நான் வரலாற்றைத்தானே பேசினேன். திமுகவினர் தூண்டுதலில் சிலர் அப்படி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்" என்று கூறியிருந்தார்.. இதனால் மேலும் அதிருப்தியடைந்த அருந்ததியினர், போராட்டங்களை நடத்தியபடியே உள்ளனர்.. நேற்றுகூட, அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அருந்ததியர் மக்கள் பேரவை தலைவர் குருவை குமார் தலைமை வகித்தார். தலித் சேனா மாநில தலைவர் நாகேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

சைமன் நாடகம்
அப்போது சீமானை கண்டித்தும், தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக சீமானை கைதுசெய்ய கோரி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித்சேனா மாநில தலைவர் நாகேந்திரன் பேசும்போது, அருந்ததியர் இனத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சீமான் பேசியிருக்கிறார்.. அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கட்சியை தடை செய்ய வேண்டும்.. "சைமன்" என்ற பெயரை வைத்துக்கொண்டு அவர் நாடகம் நடத்தி வருகிறார். அவரை கைதுசெய்யும் வரை போராட்டம் தொடரும் என்றார்... நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுப்பெற்று வரும்நிலையில், சீமானுக்கு நெருக்கடிகள் கூடிவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications