‛‛பழிபோடுவதா’’ விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த சர்ச்சை.. துடியாய் துடித்த சிவசேனா பெண் எம்பி!
டெல்லி: "விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்ததோடு மட்டுமல்லாமல், பின்னர், தான் தப்பிப்பற்தகாக அவர் மீதே பழிபோடும் கீழ்த்தரமானவர்களை என்னவென்று சொல்வது?" என சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததால் கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ரா, நேற்று நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்ததை சுட்டிக்காட்டி பிரியங்கா சதுர்வேதி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இதுபோன்ற மோசமான பேர்வழிகள் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தப்பிக்காமல் இருப்பதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விமானத்தில் அநாகரீகமான செயல்
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இதில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்பவரும் இருந்தார். ஆரம்பம் முதலாகவே மதுவை அதிகம் குடித்ததால் உச்சக்கட்ட போதையில் இருந்த அவர், 70 வயது சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த பிறகும், தனது மர்ம உறுப்பை காட்டியபடி அவர் நின்று கொண்டிருந்தார். பின்னர் சக பயணிகள் திட்டியதை அடுத்து, அவர் அங்கிருந்து நகன்றார்.

நீதிமன்றத்தில் 'அந்தர் பல்டி'
எனினும், அவர் செய்த செயலுக்கு விமானச் சிப்பந்திகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த அப்பெண், டாடா குழுமத் தலைவருக்கு புகார் கடிதம் எழுப்பினர். பின்னர் ஊடகங்களில் இந்த விஷயம் வெளியாகி பூதாகரமானதை அடுத்து, சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். மேலும், அமெரிக்க நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்த அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டார். இந்த சூழலில், நேற்று டெல்லி பெருநகர நீதிமனறத்தில் ஆஜர்படுத்த அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து 'அந்தர் பல்டி' அடித்தார்.

"அவரே அவர் மீது சிறுநீர் கழித்தார்"
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் சங்கர் மிஸ்ரா தாக்கல் செய்த பதிலில், "நான் அந்தப் பெண் பயணி மீது சிறுநீர் கழிக்கவில்லை. அவரே அவர் மீது சிறுநீர் கழித்திருப்பார். அந்தப் பெண்ணுக்கு 70 வயது ஆகிறது. மேலும், சிறுநீர் பை தொடர்பான பிரச்சினையும் அவருக்கு இருக்கிறது. எனவே அவர்தான் சிறுநீர் கழித்திருக்கிறார். மேலும், நான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து அவர் அமர்ந்திருக்க இருக்கைக்கு செல்ல முடியாத அளவுக்கு சீட்கள் இருந்தன. அப்படி நான் சிறுநீர் இருந்திருந்தால் அவரது பக்கத்தில் இருந்த பயணி மீதும் அது பட்டிருக்கும். அப்போது அவர் எந்த புகாரும் அளிக்கவில்லையே" என அதில் கூறப்பட்டிருந்தது.

"இவ்வளவு கீழ்த்தரமானவர்களா?"
சங்கர் மிஸ்ரா நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவருக்கு கண்டனமும் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஒரு மிகப்பெரிய தவறை செய்தால் அதற்காக மனம் வருந்துவது மனிதப் பண்பு. ஆனால், செய்த தவறுக்கான குற்ற உணர்ச்சி சிறிது கூட இல்லாமல் இருக்கும் பேர்வழிகள் மிக ஆபத்தானவர்கள். விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்துவிட்டு அவர் மீதே பழிபோடும் கீழ்த்தரமானவர்களை என்னவென்று சொல்வது? இதுபோன்ற மோசமான பேர்வழிகள் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தப்பிக்காமல் இருப்பதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications