‛‛இசை உலகில் அவரது பாரம்பரியம் இருக்கும்’.. வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்என் ரவி நேரில் அஞ்சலி
மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்என் ரவி நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இசை உலகில் அவரது பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும் என இரங்கல் வெளியிட்டுள்ளார்.
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்என் ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛ இசை உலகில் அவரது பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும்'' என புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்தவர் வாணி ஜெயராம். இந்தியாவின் முன்னணி பாடகர்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை வாணி ஜெயராம் பாடியுள்ளார்.
கர்நாடகா சங்கீதம், இந்துஸ்தானி இசையை முறையாக கற்றுத்தேர்ந்த இவரது பாடல்கள் அனைத்தும் மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் உள்ளது. தனது இனிமையாக குரலில் 19 மொழி பேசும் ரசிகர்களை கட்டிப்போட்ட பெருமைக்கு சொந்தக்காரராக வாணி ஜெயராம் இருந்தார்.

சென்னையில் காலமானார்
இந்நிலையில் தான் வாணி ஜெயராம் தனது 78 வயது வயதில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் குடியரசு தினவிழாவையொட்டி நாட்டின் 3வது மிகப்பெரிய விருதான பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 78.

உடலில் காயம்
அதாவது இன்று காலையில் அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. வீட்டுக்கு வந்த பணிப்பெண் போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வாணி ஜெயராம் தனது வீட்டின் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்தார். அவரது நெற்றியில் காயமிருந்த நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை
உடலில் காயம் இருந்ததால் வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என்று சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும் அவரது உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அஞ்சலிக்காக அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஆர்என் ரவி அஞ்சலி
இந்நிலையில் தான் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு ஆளுநர் ஆர்என் ரவி இன்று இரவு சென்றார். அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த வாணி ஜெயராமின் உடலுக்கு மலர்வளையம் வைத்து ஆளுநர் ஆர்என் ரவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் வாணி ஜெயராமின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛பழம்பெரும் பாடகியும், சமீபத்தில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டவருமான வாணி ஜெயராமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இசை உலகில் அவரது பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும்'' என புகழஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
முன்னதாக மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛ 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் வாணி ஜெயராம். அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது தான் வாழ்த்து தெரிவித்து இருந்தேன். விருது பெறும் முன்னரே இவ்வுலகை அவர் விட்டுப் பிரிந்தது பெரும் துயரம். வாணி ஜெயராமின் மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications