இறுகுது பிடி.. சிறுமிகளை சீரழித்த ஜெம் கிரானைட்ஸ் வீரமணி! குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த எஸ்ஐடி!
சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீது இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே
ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அளவில் பிரபலமான கிரானைட் தொழில் அதிபரும் ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணியை சுற்றி தற்போது சர்ச்சை வெடித்து இருக்கிறது. சிறுமிகளை பாலியல் ரீதியாக அவர் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டை எழுந்தது.

திமுக ஆட்சியிலேயே இந்த புகார் எழுந்த நிலையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதாவது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் ரகசிய புகார் அளிக்கப்பட்டது.
அடையாளம் தெரியாத நபர் கொடுத்த பென் ட்ரைவில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும், சுமார் 80 வயது மதிக்கத்தக்க நபர் 13 வயது சிறுமியுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாக காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டார். மேலும், வீரமணி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கை மூடி மறைத்ததில் காவல் துறை உயர் அதிகாரிகளின் தொடர்பு இருப்பதாலும், லட்சக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாலும் இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேலும் வழக்கு தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களில் வெளியானது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி துளிர் அமைப்பின் சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்த போது, சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரு வழக்குகளில் 10 நாள்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான பிரகாஷ் தலைமறைவாக உள்ளார். அவரது முன் ஜாமீன் மனு, 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. பணப்பரிமாற்றம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார். வழக்கின் தீவிரத்தை கருதி, சிறப்பு புலன் விசாரணைக்கு தரப்பில் ஆஜராக மூன்று சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமித்து கடந்த 6 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, வழக்குகளின் விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications
