ஆன்மீகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்..ஒரே போடாக போட்ட ஸ்டாலின்.. செம "அட்டாக்"
சென்னை: "இன்றைக்கு சிலர் ஆன்மீகத்தைக் காரணம் காட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு சேவை ஆற்றுவது தான் மகத்தான ஆன்மீகம்," என்று திமுக தலைவர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், ஸ்டாலினின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் இன்று, காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.
வாழ்த்திய மோடிக்கு ரஜினிகாந்த் ஸ்பெஷல் நன்றி! எடப்பாடி முதல் ஸ்டாலின் வரை மற்ற தலைவர்களுக்கும் நன்றி

இறையியல் வளர்ச்சி தொண்டு
ஸ்டாலின் உரையில் கூறியதை பாருங்கள்: "பகையெனில் கூற்றம் வரினும் தொலையான்" என்று கலித்தொகை நூல் சொல்வதற்கு இலக்கணமாக, எந்தப் பகையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த மக்கள் வாழும் மண் இந்த ராமநாதபுரம் மண்! பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் பெரும் பேரரசாக நிலை கொள்வதற்கும், பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஏற்றம் பெறுவதற்கும் அரசப்படையில் நின்றவர்கள் இந்த ராமநாதபுரம் மண்ணைச் சேர்ந்தவர்கள். புனித சேது காவலன் என்று புகழப்பட்ட சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும் இறையியல் வளர்ச்சிக்கும் ஆற்றிய தொண்டு காலத்தால் அழிக்க முடியாதது; மறக்க முடியாதது.

சேதுபதி மன்னர்
இந்த மண்ணைக் காக்கும் பெரும் போரில் பன்னிரண்டே வயதான ராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஈடுபட்ட காட்சிகள் இன்று படித்தாலும் இரத்தம் உறைய வைப்பவை. தன்னாட்சி பெற்ற நாடாக இருந்த இந்த சேதுச்சீமையின் உரிமையைப் பறித்தவர்களையும், தன்னை திருச்சி சிறையில் அடைத்தவர்களையும் பழிவாங்க சேதுமன்னர் திட்டமிட்டார். சிறையில் இருந்தபடியே மக்களை எழுச்சி பெற வைத்தார். மன்னரின் கட்டளையை மனதில் கொண்டு ஒரு பெரும் போரையே மக்கள் நடத்தினார்கள். ஒரு நாளல்ல, 42 நாட்கள் விடாமல் அந்தப் பெரும் போரைச் செய்தார்கள்.

கருணாநிதி உத்தரவு
திருச்சியில் இருந்தால் அவரை ஒவ்வொருவராக வந்து பார்க்கிறார்கள் என்பதால் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு இழுத்து வந்து தனிமைச் சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. பதினான்கு ஆண்டு காலம் தனிமைச் சிறையில் இருந்து சிறையிலேயே மரணம் அடைந்தார் அவர். எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் வாழ்நாள் முழுக்க சிறையில் அடைத்துக் கொல்லப்பட்டார் சேது மன்னர். இத்தகைய சேதுபதி மன்னரைப் பெருமைப்படுத்தும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்கு சேதுபதி நகர் என்று பெயர் சூட்டியவர் முதல்வர் கருணாநிதி!

உதய சூரியன்தான் இலக்கு
ஒளி ஏற்றுவதற்கு ஒரே ஒரு துளி நெருப்பு தேவை. தென் பாண்டி மண்டலத்தில் விடுதலை நெருப்பை பரப்ப, முத்துராமலிங்க சேதுபதி மன்னர் அக்னியாகப் பயன்பட்டார். அத்தகைய மண்ணில் இன்றைய தினம் தமிழகம் மீட்பதற்காக நாம் கூடியிருக்கிறோம். ஒரே இலக்குதான்; கழகத்தின் வெற்றி! உதயசூரியன் வெற்றி! தமிழ்நாட்டில் திறக்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்குப் பெட்டியிலும் உதயசூரியன் மட்டும் தான் உதிக்கவேண்டும். இது ஒன்று தான் இலக்கு.

ஆளும் கட்சி மீது அட்டாக்
யார் வேட்பாளர்? உதயசூரியன் தான் வேட்பாளர்! யார் வேட்பாளர்? தலைவர் கலைஞர் தான் வேட்பாளர்! - இந்த ஒற்றைச் சிந்தனையுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன் களம் கண்டால் எதிரில் எவர் வந்தாலும் வெற்றி நமக்குத்தான்! பணத்தை மக்களுக்கு விதைத்து கோட்டையைப் பிடித்துவிடலாம் என்று எடப்பாடி கும்பல் பேராசையோடு காத்திருக்கிறது. அவர்களது அந்த ஆசை நிறைவேறாமல் தடுக்க வேண்டியது ஒன்றே கழகத் தொண்டனின் பணி என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள்!

விவேகானந்தர் பேச்சு
உலகம் முழுவதும் சுவாமி விவேகானந்தரின் புகழ் பரவக் காரணம், ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னர் தான்! இதனை விவேகானந்தரே சொல்லி இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் மார்க்கமாக வந்த விவேகானந்தர், பாம்பனில்தான் வந்து இறங்கினார். "மேன்மை தங்கிய இராமநாதபுரம் மன்னர் என்னிடம் கொண்டிருக்கும் அன்புக்கு வார்த்தைகள் மூலம் நன்றி சொல்வது முடியாத காரியம். என்னாலும் என் வாயிலாகவும் ஏதாவது நற்காரியம் செய்யப்பட்டு இருக்குமானால் அது இந்த மனிதரால் தான். இந்தியா இந்த மனிதருக்குக் கடமைப்பட்டு இருக்கிறது. நான் சிகாகோ சர்வ சமயப் பேரவைக்கு போக வேண்டும் என்று நினைத்தவரே இவர் தான்" என்று பாராட்டினார். அத்தகைய பாஸ்கர சேதுபதியின் மண்ணில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்மீக அரசியல்
இன்றைக்கு சிலர் ஆன்மீகத்தைக் காரணம் காட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு சேவை ஆற்றுவது தான் மகத்தான ஆன்மீகம் என்று சுவாமி விவேகானந்தர், இதே இராமேஸ்வரம் கோவிலில் 1897-ஆம் ஆண்டு பேசும்போது சொன்னார். மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது - இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகள், பலவீனமானவர்கள், நோயுற்றவர்களைக் காப்பவனே உண்மையில் இறைவனை வழிபடுகிறவன் என்று சொன்னார் அவர்.

எஜமானுக்கு யாரை பிடிக்கும்?
எளிமையான கதை ஒன்றை அவர் அப்போது சொல்லி இருக்கிறார். ஒரு எஜமானுக்கு ஒரு தோட்டம் இருந்ததாம். அதற்கு இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்களாம். ஒரு தோட்டக்காரன், அந்த எஜமானனைப் புகழ்வதிலும் அவர் முன்னால் நடிப்பதிலும் ஆர்வம் காட்டுபவராக இருக்கிறான். இன்னொரு தோட்டக்காரன், அந்த தோட்டத்தை கவனிப்பதில் ஆர்வம் செலுத்தினான். பழங்கள், காய்கறிகளை உற்பத்தி செய்தான். அந்த எஜமான் உயர்வுக்காக நாளும் உழைத்தான். எஜமானுக்கு யாரைப் பிடிக்கும்? தன் முன்னால் நடிப்பவரையா? தனக்கு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து தருபவரையா?

ஆண்டவன்தான் எஜமான்
இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, "ஆண்டவன் தான் எஜமான், அவனது தோட்டம் தான் இந்த உலகம். எந்த தோட்டக்காரனை ஆண்டவனுக்கு பிடிக்கும்?" என்று கேட்டார் விவேகானந்தர். இங்கே சிலர் வெறுமனே நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் தான் மக்களுக்கு நன்மைகள் செய்து கொண்டு இருக்கிறோம். இதைத் தான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா! ஏழைகள் சிரிக்க உருவாக்கப்பட்ட கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

ஏழைகள் சிரிப்பில் இறைவன்
ஏழைகள் சிரிக்க, ஒடுக்கப்பட்டோர் உயர்வு பெற, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெற, பட்டியலின மக்கள் பதவிகள் பெற, சிறுபான்மையின மக்கள் சிறப்புப் பெற நடத்தப்பட்ட ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி! ஒரு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே ‘தண்ணி இல்லாத காடு' என்று சொல்வார்கள். அரசாங்கத்திலேயே ஊழியரை மிரட்ட, ‘இராமநாதபுரத்துக்கு மாத்திடுவேன்' என்று சொல்வார்கள். அந்த நிலைமையை மாற்றிய அரசு தான் தி.மு.க. அரசு!

ராமநாதபுரம் குடிநீர் பிரச்சினை
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிதண்ணீர் இன்றி தவித்த மக்களுக்கு 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது கழக ஆட்சியில் தான். எனக்கு என்ன பெருமை என்றால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை முதலமைச்சர் கருணாநிதி எனக்கு வழங்கினார்கள். இத்திட்டத்தைச் செயல்படுத்த மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என்று அதிகாரிகள் அப்போது சொன்னார்கள். குடிநீர்ப் பிரச்சினை என்பதால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க நான் உத்தரவிட்டேன். மூன்று ஆண்டுகளுக்குள் திட்டத்தை முடிக்கவேண்டும் என்பதை இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்து பொதுமக்களின் குடிநீர் தேவையைத் தணித்த ஆட்சி தி.மு.க. ஆட்சி! இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.