திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் 3,327 அறிவிப்புகள்! புள்ளி விவரத்தை புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்!
சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் 3,327 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், 1,816 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தமிழக சட்டசபையில் இது தொடர்பாக அவர் விடுத்த புள்ளிவிவரம் வருமாறு;

தேர்தல் அறிக்கை
ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் வகையிலான அறிவிப்புகளை மட்டுமல்லாமல், அறிவிக்காத பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்பதை இந்தப் பேரவை உறுப்பினர்களும், நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள். தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில், 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் நிதி ஆண்டுகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு,

அறிவிப்புகள் விவரம்
• ஆளுநர் உரையில் 77 அறிவிப்புகள்,
• எனது செய்தி வெளியீட்டின் மூலமாக 150 அறிவிப்புகள்
• சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன்கீழ் 60 அறிவிப்புகள்
• மாவட்ட ஆய்வுப் பயணங்களின் போது வெளியிட்ட 77 அறிவிப்புகள்
• எனது உரைகளின் வழியாக 46 அறிவிப்புகள்
• நிதிநிலை அறிக்கையில் 255 அறிவிப்புகள்
• வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 237 அறிவிப்புகள்
• மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட 2,425 அறிவிப்புகள் என மொத்தம் 3,327 அறிவிப்புகள் நமது அரசால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

78 விழுக்காடு
இந்த அறிவிப்புகளின் மீதான தொடர் நடவடிக்கைகள் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு, உரிய மேல் நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதன்படி வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 78 விழுக்காடு அளவிலான அறிவிப்புகளுக்கு, அதாவது 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் / அறிவுரைகள் வெளியிடப்பட்டு, அவற்றில் 791 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி) தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஸ்டாலின் பெருமிதம்
1,816 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. 666 அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் வெளியிட தொடர்புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 54 பணிகள் ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதை இந்த நேரத்தில் நான் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.












Click it and Unblock the Notifications