அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. திமுகவிடம் மல்லுக்கட்டி கடந்த முறையை விட கூடுதலாக 3 சீட்டுகளை காங்கிரஸ் பெற்றுள்ள நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மேலிட தலைவர்கள் இன்னும் பிரசாரம் செய்ய வரவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் அப்செட்டில் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் வரும் 21ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் அனைவரும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே தான் தற்போது வரை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி யாருமே தமிழகத்துக்கு பிரசாரம் வரவில்லை. அவர்கள் பிரசாரம் செய்ய வருவார் என்று மிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூறியிருந்தாலும் கூட இன்னும் அதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
பிரசாரத்துக்கு வராத காங்கிரஸ் தலைகள்
இது திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி தொகுதி பங்கீட்டின்போது திமுகவிடம் மல்லுக்கட்டி கடந்த முறையை விட கூடுதலாக 3 தொகுதிகளை பெற்று காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிடுகிறது. இப்படியான சூழலில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பிரசாரத்துக்கு வராதது திமுகவை அப்செட்டாக்கி உள்ளது. திமுக மட்டுமின்றி காங்கிரஸ் வேட்பாளர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
அதுமட்டுமின்றி திமுகவிடம் மல்லுக்கட்டிய காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் அதிக இடங்களில் வென்று பலத்தை நிரூபிக்க துடிக்கின்றன. இதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பிரசாரம் வலு சேர்க்கும். ஆனால் அவர்கள் மவுனமாக தமிழகத்தை புறக்கணித்து வருகின்றனர். இது திமுகவிடம் மல்லுக்கட்டிய காங்கிரஸ் தலைவர்களை சோர்வடைய செய்துள்ளது.
ராகுல் காந்தி வருவது சந்தேகம்?
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட சில எம்பிக்கள் பிரசாரம் செய்தாலும் கூட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பரப்புரை என்பது அதிக பலனை தரும். இதனால் அவர்கள் நிச்சயம் தமிழகம் வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் தற்போது அதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. இதற்கிடையே தான் நாளை முதல் வரும் 18 ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கன 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வடிவு பற்றிய விவாதம் தொடங்குிறது. இதனை காங்கிரஸ் கட்சி தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் பிரசாரம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஒருவேளை ராகுல், பிரியங்கா ஆகியோர் பிரசாரம் செய்ய விரும்பினால் ஏப்ரல் 19, 20, 21 ஆகிய தேதிகளில் வரலாம். ஆனால் தற்போது அதுவும் உறுதி செய்யப்படவில்லை.
ராகுல் காந்தி தவிர்ப்பது ஏன்?
ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்யாமல் இருப்பதன் பின்னணியில் 2 முக்கிய விஷயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சி பிரச்சனை. 2வது தொகுதி பங்கீட்டின்போது திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியை நடத்திய விதத்தால் முதல்வர் ஸ்டாலின் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போதும் கூட ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உடன் மேடையை பகிர்ந்து கொள்ளவில்லை.
முதல்வர் ஸ்டாலின் அப்செட்
எது எப்படியோ.. தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை 25 தொகுதிகள் வாங்கி 18 ல் வென்றது. இந்த முறை 28 வாங்கி உள்ளது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே காங்கிரஸ் கட்சி அடுத்த முறை திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை பெற முடியும். இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு தான் ஏற்படும். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் தோல்வியடையும்போது அது அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையலாம். இதனால் காங்கிரஸ் மேலிடம் மீது முதல்வர் ஸ்டாலினும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications