திருட்டு நகைகளை இனி விற்கவே முடியாது.. மத்திய அரசின் திட்டம்.. தங்க நகைக்கடைக்களுக்கும் பெரிய செக்
சென்னை: தங்க நகைகள் கடந்த 2016-இல் ஒரு கிராம் ₹3,000-க்குக் கூட விற்கவில்லை; அதிகபட்சமாக ₹2,900 என்ற அளவில்தான் விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ₹23,000-க்குள் தான் இருந்தது. அதன்பிறகு தங்கம் விலை ₹20,000 என்ற அளவிற்குக்கூடச் சரிந்தது. அப்படி விற்ற தங்கம், இன்று ஒரு கிராமே ₹13,000-க்கு மேல் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ₹1,13,000-க்கு விற்கிறது. இதனால் தங்கத்தைத் திருடி நகைக்கடைகளிலும், அடகுக் கடைகளிலும் விற்பது அதிகரித்து வருகிறது. எனவே, திருடப்பட்ட தங்க நகைகள் மீண்டும் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு தங்க நகைக்கும் தனியாக வழங்கப்படும் 'HUID' (எச்.யு.ஐ.டி.) எண்ணுடன், அந்த நகை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டது என்பதையும் ஆன்லைன் பதிவில் குறிப்பிடும் புதிய முறையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
திருடப்பட்ட நகைகளை உருக்கியோ அல்லது அப்படியே வேறு நபர்களுக்கோ மீண்டும் விற்பனை செய்வதை இந்தியாவில் பல ஆண்டுகளாகத் திருடர்கள் செய்து வருகின்றனர். இந்த முறையை முற்றிலுமாகத் தடுக்க விரும்பும் மத்திய அரசு, ஒருமுறை விற்பனையான நகையின் HUID எண் கணினியில் "விற்பனையானது" (Sold) என்று காட்டிவிட்டால், அதை மீண்டும் போலி ஆவணங்கள் மூலம் வேறு கடையில் விற்க முடியாத நிலையை ஏற்படுத்த விரும்புகிறது.

இதற்காகவே தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்வதற்காகத் தற்போது ஒவ்வொரு ஹால்மார்க் நகைக்கும் தனித்துவமான 6 இலக்க HUID எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை அடிப்படையாகக் கொண்டு, நகையின் விவரங்களை நகைக்கடைகளால் எளிதாகக் கண்காணிக்க முடியும். அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் மத்திய அரசின் புதிய திட்டப்படி, நகை விற்பனை செய்யப்பட்டதும் அந்த நகைக்கான HUID எண் 'விற்பனையானது' என்று பதிவு செய்யப்படும். இதனால் அதே எண்ணைப் பயன்படுத்தி மற்றொரு நகையை விற்பனைக்குக் கொண்டு வந்தால், அது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட நகை என்பதை கணினி கண்டிப்பாகச் சுட்டிக்காட்டிவிடும்.
இதன் மூலம் திருட்டு அல்லது முறைகேடாகப் பெறப்பட்ட தங்க நகைகளை மீண்டும் விற்பனை செய்வதைத் தடுக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. எனவே மத்திய அரசின் திட்டப்படி, ஒருவர் பழைய தங்க நகையை விற்பனைக்குக் கொண்டு வந்தால், நகைக்கடைக்காரர் அதன் HUID எண்ணைச் சரிபார்க்க வேண்டும். அந்த நகை ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாகப் பதிவில் இருந்தால், அதன் மூலத்தை விசாரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறையில் ஒவ்வொரு நகையும் விற்பனை செய்யப்பட்ட பிறகு, அதன் HUID எண் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நிச்சயமாகத் தடுக்க இயலும். ஒரு HUID எண் வேறு நகையில் பயன்படுத்தப்பட்டால், கணினி அமைப்பு அதைக் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்யும். தற்போது நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகையில் HUID எண்ணையும், நகையின் எடையையும் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். வாடிக்கையாளர்கள் 'BIS Care' செயலி மூலம் HUID எண்ணைப் பதிவு செய்து நகையின் உண்மைத்தன்மையை எளிதாகச் சரிபார்க்க முடியும்.
இந்தத் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது. முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள நகைக்கடைகளில் இதைக் கட்டாயமாக்கவும், பின்னர் கிராமப்புறங்கள் மற்றும் அமைப்புசாரா நகை விற்பனையிலும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. தங்க நகை திருட்டைக் கட்டுப்படுத்த இந்த முறை உதவும் என்றபோதிலும், நகைக்கடைகளுக்குக் கூடுதல் செலவு ஏற்படும். எனவே, தொழில்துறையினரிடம் மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தங்கச் சந்தையில் நடக்கும் கணக்கில் வராத பரிவர்த்தனைகள் மற்றும் வரி ஏய்ப்பு அடியோடு தடுக்கப்படும். நகையின் உற்பத்தி முதல் இறுதி வாடிக்கையாளர் கைக்குச் செல்வது வரை அனைத்துத் தரவுகளும் மத்திய அரசிடம் வெளிப்படையாக இருக்கும். ஜி.எஸ்.டி. (GST) அமலாக்கம் போல ஆரம்பத்தில் சில நடைமுறைச் சிரமங்கள் ஏற்படும் என்றாலும், தங்கச் சந்தையை வெளிப்படைத்தன்மையுடன் மாற்றவும், நகை திருட்டு மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்கவும் இது பெரிய அளவில் கைகொடுக்கும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது.


Click it and Unblock the Notifications
