அமைச்சர்களின் அறைக்கு பறந்த ‘திடீர்’ போன் கால்.. ‘இருக்காரா?’ டென்ஷனான ஸ்டாலின்.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
சென்னை : சமீபத்தில், முதல்வர் அலுவலகத்தில் இருந்து சில அமைச்சர்களின் அறைகளுக்கு போன் கால் பறந்துள்ளது. அப்போது கிடைத்த தகவலால் டென்ஷனான முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட்டாக ஒரு உத்தரவைப் போட்டிருக்கிறாராம்.
தமிழக அமைச்சர்கள் வாரத்தில் நான்கு நாட்களாவது தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளை கவனிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
ஆனாலும், பெரும்பாலான அமைச்சர்கள் இன்னும் 3 நாட்கள் கூட தலைமை செயலகத்தில் தங்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை என்று முதல்வர் கவனத்திற்கு புகார் சென்றுள்ளது. பெரும்பாலான சீனியர் அமைச்சர்களும் பெரும்பாலான நாட்களில் சொந்த மாவட்டங்களுக்குச் சென்று விடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, திடீரென பகல் நேரத்தில் அமைச்சர்களின் அறைகளுக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து போனில் தொடர்பு கொண்டு, அமைச்சர்கள் வந்துள்ளனரா என விசாரணை படலம் நடந்துள்ளது.

ஆய்வுக் கூட்டங்கள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுவதற்காக அவ்வப்போது அமைச்சர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது வழக்கம். சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளவும் துறை சார்ந்த அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் அலுவலர்களோடு அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

கண்காணிப்பு வளையத்தில் அமைச்சர்கள்
மேலும், அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக கண்காணித்து முதல்வருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கும் பணியிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். சில துறைகளின் அமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு வருவது மிகக் குறைவாக உள்ளது என்றும், முதல்வர் வெளியூர் சென்றால் தலைமை செயலகம் பக்கமே வருவதில்லை என்றும் புகார் சென்றுள்ளது. சில சீனியர் அமைச்சர்கள் வாரத்தில் நான்கைந்து நாட்கள் சொந்த மாவட்டத்திலேயே இருக்கிறார்கள் என்பதும் முதல்வர் கவனத்திற்குச் சென்றுள்ளது.

ஸ்டாலின் ஆர்டர்
அமைச்சர்கள், தலைமைச் செயலகத்திற்கு வராததால் துறை சார்ந்த பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு நாட்களாவது தலைமைச் செயலகம் வந்து பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதனை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போதும் நேரடியாகவே தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

திடீர் போன் கால்
இதனை தொடர்ந்து அமைச்சர்கள் தலைமை செயலகம் வந்து தங்கள் துறை பணிகளை மேற்கொள்கிறார்களா என்பதை கவனிக்கவும் தொடங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பு முதல்வர் அலுவலகத்தில் இருந்து சில அமைச்சர்களின் அறைகளுக்கு ஃபோன் கால் பறந்துள்ளது. அமைச்சர்கள் வந்துள்ளனரா என கேட்கப்பட்டுள்ளது. அப்போது ஒருசில அமைச்சர்கள் மட்டுமே தலைமைச் செயலகத்தில் தங்கள் அறைகளில் இருந்துள்ளனர்.

ஸ்ட்ரிக்ட் முதல்வர்
இந்த தகவல் முதல்வருக்கு சொல்லப்பட்டதைக் கேட்டுக்கொண்ட அவர், தலைமை செயலரிடம் இதுபற்றி அனைத்து துறைகளின் செயலர்களுக்கும் தெரிவித்து விடுங்கள். அமைச்சர்கள் 4 நாட்களாவது சென்னையில் இருக்க வேண்டியது கட்டாயம். தலைமைச் செயலகத்திற்கு தினமும் வரச் சொல்லுங்கள், அமைச்சர்கள் வராததால் பணிகள் தொய்வடைந்துள்ளதாக இனி எந்த புகாரும் வரக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்டிருக்கிறாராம். இதனால், அமைச்சர்கள் செக்ரெட்டேரியட் வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனராம்.












Click it and Unblock the Notifications