சென்னை பெருவெள்ளம்.. தாம்பரமும், முடிச்சூரும்.. இன்றும் மறக்காது சைலேந்திர பாபுவை! அதிரவைத்த சம்பவம்
சென்னை : தமிழகத்தின் சட்டம் ஓழுங்கு டிஜிபியாக நாளை பொறுப்பேற்க உள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ், 2015ம் ஆண்டு கடலோர காவல் படை கூடுதல் டிஜியாக இருந்த காலக்கட்டத்தில், அவரே வெள்ளம் சூழந்த தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில் மிதவை படகில் சென்றும் தண்ணீரில் நீந்தியும் பலரையும் மீட்டு வந்தார்.
Recommended Video
2015-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் அதுவரை இல்லாத ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதுவும் எப்படி வழக்கத்திற்கு மாறாக அடுத்த சில நாட்களில் மிக பலத்த மழை பெய்யும், 20 செமீ க்கு மேல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது, அரசுக்கு இது தொடர்பாக எச்சரிக்கை செய்திகளை அனுப்பியும் இருந்தது..
இதையடுத்து அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு வழக்கம்போல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகளை எடுத்தது.

100 ஆண்டில் இல்லாத மழை
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டியது. நவம்பர் 30-ம் தேதி சில மணி நேரத்தில் 490 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது..
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருப்பதால் உடனே பெருமளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனற நிலை ஏற்பட்டது. அப்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நள்ளிரவில் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஏற்கனவே சென்னையில் வெள்ளம் பாய்ந்து சென்ற நிலையில் இந்த வெள்ளமும் சேர்ந்த காரணத்தால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

மக்கள் தவிப்பு
அரசு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முன்னெச்சரிக்கை செய்தது. ஆனால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்ட காரணத்தால் செய்திகளை அறிந்து கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் அரசின் எச்சரிக்கை மக்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேரவில்லை. இதேபோல் தகவல் தெரிந்த பலரும் வழக்கமான அலர்ட் என்று அசால்ட்டாக இருந்துவிட்டனர்- ஆனால் யாரும் எதிர்பாரதவிதமாக தாம்பரம், முடிச்சூர், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் அடையாறு உள்ளிட்ட பகுதிகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டன. ஈக்காட்டுத்தாங்கல் பாலமும், கோட்டூர்புரம் பாலமும், சைதாப்பேட்டை கிண்டி பாலமும் தண்ணீரில் மூழ்கிப்போனது என்றால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை பாருங்கள்.

சைலேந்திரபாபு
வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது. அப்போது கடலோர காவல்படை கூடுதல் டிஜியாக இருந்த சைலேந்திர பாபு எடுத்த நடவடிக்கைகள் மிகவும் அபாரமானது. தனது குழுவினரை அழைத்துக்கொண்டு மிதவை படகில், மிகமிக மோசமாக பாதிக்கப்பட்டு தண்ணீ ரில் தத்தளித்த தாம்பரம் முடிச்சூர் பகுதி மக்களை தேடி சென்றார்.

காத்திருந்த மக்கள்
மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, உணவும் இல்லை,, மொட்டை மாடிகளில் யாராவது உதவிக்கு வருவார்களா என்று ஏங்கி தவித்த மக்கள் பலரையும் சைலேந்திர பாபுவின் டீம் மீட்டது. உதவிக்கு சைலேந்திர பாபு மீனவர்களையும் அழைத்துச் சென்றார். முதல்மாடி, தரைத்தளம், மேல்மாடி என சிக்கியிருந்த மக்களை நீந்தி சென்று அவரும் அவரது டீமும் காப்பாற்றினர் படகுக்காக காத்திருந்த மக்களை மட்டுல்ல, மாடுகளையும் ஜீவராசிகளையும் காப்பாற்றியது சைலேந்திரபாவுவின் டீம்தான்.

அபாரமான பணி
சைலேந்திர பாபுவே மிதவை படகில் இருந்து குதித்து, வெள்ளத்தை பொருட்படுத்தாமல் வீடுகளுக்குள் சென்று மக்களை மீட்டு மிதவை படகில் அனுப்பிவைத்தார். பலரையும் வெள்ளத்தில் இருந்து மீட்டார். தாம்பரமும் முடிச்சூரும் அன்று சிந்திய கண்ணீரை துடைத்ததில் சைலேந்திர பாபுவுக்கும், அவரது தலைமையிலான கடலோர காவல் படைக்கும், சென்னை மீனவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. மனிதமே பெரிது என்பதை பலரும் உணர்ந்த தரும் சென்னை பெருவெள்ளம் தான்.












Click it and Unblock the Notifications