"சங்கி கூட்டமே".. பாஜகவை விளாசிய நடிகை ஷர்மிளா! பின்னணியில் நீடா அம்பானியின் காயத்ரி மந்திர சேலை
சென்னை: மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் காயத்ரி மந்திரம் பொறித்த சேலையை முகேஷ் அம்பானி மனைவி நீடா அம்பானி அணிந்திருந்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவிய நிலையில் நடிகையும், பாஜக எதிர்பார்ப்பாளருமான நடிகை ஷர்மிளா பாஜகவினரை சங்கி கூட்டம் என்று விமர்சனம் செய்து 3 முக்கிய கேள்விகளை எழுப்பி கடுமையாக விமர்சனம் செய்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
உலகளவில் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்ற பெண்ணுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவரது மனைவி பெயர் நீடா அம்பானி. இந்த தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார்.

இந்நிலையில் தான் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ராதிகா மெர்ச்சன்ட்டின் தந்தை வீரேன் மருந்து துறை சார்ந்த தொழிலதிபராக இருக்கிறார். திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே திருமணம் சார்ந்த சடங்குகள் நடந்து வந்தன.
கடந்த 5 மாதங்களாக பல்வேறு வகைகளில் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டம் நடந்து வந்தது. அதன்பிறகு கடந்த 12ம் தேதி ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் கன்வென்சன் அரங்கில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இதில் பிரதமர் மோடி உள்பட பல அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், வெளிநாட்டு தலைவர்கள் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டை வாழ்த்தினர்.
இந்த திருமணத்தின்போது முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, மணப்பெண் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் முகேஷ்அம்பானியினர் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து கவனம் ஈர்த்தனர். அவர்களின் ஆடைகளில் பிரத்யேகமான டிசைன் பொறிக்கப்பட்டு இருந்தது. இது பெரிய அளவில் பெண்களின் மத்தியில் கவனம் பெற்றது.
முன்னதாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்தையொட்டி பால்கர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஜோடிகளுக்கு முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதி இலவச திருமணம் செய்து வைத்தனர். இந்த விழாவில் நீடா அம்பானி அணிந்திருந்த புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிவப்பு நிற பனாரஸ் புடவையில் காயத்ரி மந்திரம் பிரத்யேகமாக இடம்பெற்றிருந்தது. நீடா அம்பானி கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர். இதனால் அவர் காயத்ரி மந்திரம் பொறித்த புடவையை அணிந்து இருந்தார்.
இந்நிலையில் தான் காயத்ரி மந்திரம் பொறித்த சேலையை நீடா அம்பானி அணிந்தது தொடர்பான விவகாரத்தை எடுத்து பாஜகவினரை, டாக்டரும், நடிகையுமான ஷர்மிளா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இவர் பாஜகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் கருத்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் சூழலில் நீடா அம்பானி காயத்ரி மந்திரம் பொறித்த சேலையை அணிந்தது தொடர்பாக அவர் பேசும் வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஷர்மிளா கூறியுள்ளதாவது:

முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி திருமணத்தில் (மகன் ஆனந்த் அம்பானி திருமணம்) அணிந்திருந்த சேலையில் பார்த்தீர்கள் என்றால் ஒட்டுமொத்த காயத்ரி மந்திரத்தையும் நெய்து இருக்கிறாங்க. இந்த புடவையை போட்டோகிராபர்களுக்கு டிஸ்பிளே பண்ணுகிறேன் என்ற வகையில் காலால் அந்த புடவையை அட்ஜெஸ்ட் பண்ணிகிட்டு ஜாலியா, ஜம்முனு போஸ் கொடுக்கிறாங்க.
நமக்கு சங்கி கூட்டத்திடம் கேள்வி ஒன்னே ஒன்னு தான். முகேஷ் அம்பானி - நீடா அம்பானியை இவ்வளவு தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்களே. காயத்ரி மந்திரத்தை புடவையில் பொறித்து கால்மேல் கால் போட்டு டிஸ்பிளே செய்கிறார்களே.. இப்போது எல்லாம் உங்களின் இந்து கலாசாரம் பாதிக்கப்படலையா? இப்போதெல்லாம் உங்களின் இந்து மதம் புண்படுத்தப்படவில்லையா? இப்போதெல்லாம் உங்களின் இந்து மந்திரங்கள் அவமானப்படுத்தப்படவில்லையா? அப்படியென்றால் பணக்காரர்கள் எது செய்தாலும் உங்களுக்கு ஓகே. இதுதான் உங்களின் இரட்டை நிலைப்பாடா? இதற்கு முதல்ல பதில் சொல்லுங்க'' என காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications