"காலை உணவு திட்டம் சிறப்பானது.. அதை தெலுங்கானாவிலும் அமல்படுத்த போகிறோம்!" முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
சென்னை: தமிழக அரசின் திட்டங்கள் தனக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாகக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். குறிப்பாகக் காலை உணவுத் திட்டம் தன்னை மிகவும் கவிந்துள்ளதாகக் கூறிய அவர், அடுத்த கல்வியாண்டு முதல் இந்தத் திட்டத்தை தெலுங்கானாவிலும் அமல்படுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டங்களைப் பாராட்டிப் பேசினார்.

ரேவந்த் ரெட்டி
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தைப் பின்பற்றியே தென்மாநிலங்கள் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். மேலும், காலை உணவுத் திட்டத்தை தெலுங்கானாவில் அமல்படுத்தப் போகிறோம் என அறிவித்த ரேவந்த் ரெட்டி, அடுத்த கல்வியாண்டு இந்தத் திட்டம் தெலுங்கானாவில் அமல்படுத்தப்படும் என்பதையும் அறிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் கல்வி மாடல் மற்ற மாநிலங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன், மற்றும் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் (விடியல் பயணத் திட்டம்) ஆகியவை சிறப்பானவை. நாடு முழுவதும் இத்திட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.
காலை உணவு திட்டம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மிகவும் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உணவளிக்கிறது. அது நிஜமாகவே எனது மனதைத் தொட்ட ஒரு திட்டமாக இருக்கிறது. கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு இது பெரிதும் உதவும். அடுத்த கல்வியாண்டில் இத்திட்டத்தை தெலங்கானா அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு மிக சிறந்த முதலமைச்சர் கிடைத்திருப்பதால், தமிழ்நாட்டு மக்கள் அதிர்ஷ்டசாலிகள்" என்று ரேவந்த் ரெட்டி பாராட்டியுள்ளார்.
சென்னை ஹைதராபாத் காரிடார்
1991ஆம் ஆண்டு தாராளமயமாக்கலுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மற்றும் தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி ஆகியவை தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டதாக ரேவந்த் ரெட்டி கூறினார். மேலும், சென்னை- ஹைதராபாத் காரிடார் ஒரு முக்கிய தொழில் மற்றும் அறிவு மையமாக மாறியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இட ஒதுக்கீடு
சமூக நீதிக் கொள்கைகளில் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா இடையே ஒற்றுமைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட ரேவந்த் ரெட்டி, இதில் மறைந்த முதலமைச்சர் மு. கருணாநிதியிடமிருந்து உத்வேகம் பெற்றதாகத் தெரிவித்தார். மேலும், தெலுங்கானாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தல்களில் ஓபிசி பிரிவினருக்கு 42% இடஒதுக்கீட்டையும், SC/ST பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டையும் அமல்படுத்த உள்ளதாக அவர் அறிவித்தார்.
கல்வியில் முதலீடு செய்வது என்பது வெறுமன சேவை இல்லை.. அது நீதி மற்றும் உரிமை என்ற தமிழ்நாட்டின் கொள்கையை தெலுங்கானாவும் நம்புவதாக அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications