தமிழகத்தில் 5ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் - 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
தமிழகம் முழுவதும் 5ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது. இதில் 30,000 முகாம்கள் அமைக்கப்பட்டு, 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் 5ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது. இதில் 30,000 முகாம்கள் அமைக்கப்பட்டு, 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 12ஆம் தேதி தமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதையடுத்து கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற 2வது தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேரும், 26ஆம் தேதி நடைபெற்ற 3வது கட்டமாக நடந்த முகாமில் 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்தநிலையில் தமிழகத்தில் 4வது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்தவகையில் தமிழகத்தில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

டாக்டர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மட்டும் 18 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதியோர்கள் 1.4 கோடி பேர் உள்ளனர். இதில் 42 சதவீதம் பேர் முதல் தவணையும், 18 சதவிகிதம் பேர் 2வது தவணையும் செலுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

33 லட்சம் பேருக்கு இலக்கு
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 5-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது. இதில் 30,000 முகாம்கள் அமைக்கப்பட்டு, 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Recommended Video

18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தடுப்பூசி செலுத்த தகுதியுடைவர்கள் அனைவரும், தவறாமல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது.

93.17 கோடி தடுப்பூசிகள்
இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 50,17,753 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை, நேற்று காலை 7 மணி நிலவரப்படி 93,17,17,191 கடந்துள்ளது.

39,95,52,444 தடுப்பூசி டோஸ்கள்
அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் அன் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 39,95,52,444 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதில் 21,62,68,034 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 18,66,18,184 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications