மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.. முதல்முறையாக உதயநிதி.. முக்கிய முடிவு?
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டம் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்பதால், அமைச்சரவை கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 2 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டது.
அதேபோல் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அமைச்சரவையில் புதிய அமைச்சருக்கு இடம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை கூட்டம்
இந்த நிலையில் அமைச்சரவை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி கூடியது. 3 நாட்கள் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கான தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் ஆளுநர் இந்த சட்ட மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

சட்டசபை கூட்டம்
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டப்படும் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஜனவரியில் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த மாதம் சட்டசபைக் கூட்டத்தொடர் 9ம் தேதி தொடங்க உள்ளது.

ஆளுநர் உரைக்கு ஒப்புதல்
சட்டசபைக் கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ஆளுநர் ஆற்றும் உரையில் இடம் பெறும் கருத்துகள், திட்டங்கள் போன்றவை இந்த அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட உள்ளது. அதுபற்றி அமைச்சரவை ஆலோசித்து அங்கீகாரத்தை வழங்கும். அதேபோல் ஆளுநர் உரையில் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற உள்ளது.

மசோதா பற்றி விவாதம்
இதற்கு இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், தமிழக சட்டசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள மசோதா மற்றும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால், இந்தக் கூட்டத்தில் அமைச்சரகளின் செயல்பாடுகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications