தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டார் - 2 நாட்கள் பயணத்தில் யாரை சந்திக்கிறார்
பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி பயணம் மேற்கொள்ளும் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று குடியரசுத்தலைவர், பிரதமர்,மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை சென்றபோது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா விவகாரத்தில், தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன. எனினும், ஆளுநருக்கும், தங்களுக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், ஆளுநர் இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு, குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு செப். மாதம் முதல்முறையாக நீட் விலக்கு மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. நீட் பாதிப்பு குறித்து ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா தயார் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், 6 மாதங்களாக இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த பிப்ரவரி மாதம் இந்த தீர்மானத்தைத் திருப்பி அனுப்பினார்.
ஆளுநரின் இந்தச் செயல் அப்போது தமிழக அரசியலில் பெரும் விவாதமாக மாறி இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் 13ஆம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டப்பட்டு, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீண்டும் 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. இருப்பினும், அதன் மீது ஆளுநர் ரவி இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.இதையடுத்து திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாகத் தமிழக எம்பிகள் தொடர்ச்சியாக டெல்லியில் குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்பிய திமுக எம்பிக்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியை வாபஸ் பெற வேண்டும் என்று கூட வலியுறுத்தினர். இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்ப் புத்தாண்டை ஓட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தையும் கூட அரசியல் கட்சியினரும் தமிழக அரசும் புறக்கணித்தது.
இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி சென்றுள்ளார். நீட் மசோதா தொடர்பான அறிக்கையை அவர் தயாரித்துள்ளதாகவும், அதை மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. எனவே, ஆளுநரின் இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications