பாஜகவின் பழைய “டெக்னிக்”.. பத்தாண்டுக்கு பின் அதே வழியில் தமிழருவி மணியன்! “மிஸ்டுகால்” கொடுங்க
சென்னை: காந்திய மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியை அண்மையில் காமராஜர் மக்கள் இயக்கம் என்று மாற்றிய தமிழருவி மணியன், பாஜகவின் பழைய முறையை பயன்படுத்தி கட்சிக்கு ஆள் சேர்த்து வருகிறது.
காந்திய மக்கள் இயக்கம் என்ற கட்சியை நடத்திய வந்த தமிழருவி மணியன் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்பட்டு வந்தார். ரஜினிகாந்தும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அரசியல் அறிவிப்பையும் வெளியிட்டார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார். ரஜினியை அரசியலுக்கு அழைத்து வருவதில் தோல்வியடைந்த தமிழருவி மணியனும் அரசியல் பேசாமல் இருந்து வந்தார்.

தமிழருவி மணியன் பேட்டி
கடந்த மே மாதம் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அவர் வழங்கிய சிறப்பு பேட்டியில், "ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக பேசி எனக்கு பகை மட்டுமே மிஞ்சியுள்ளது. வீட்டையும் பார்க்காமல், மக்களையும் பார்க்காமல் வாழ்க்கை முழுவதையும் விரயம் செய்துவிட்டேன். தற்போது அரசியல் பேச நான் விரும்பவில்லை. இனி மீண்டும் நான் அரசியல் பேசுவேனா என்பது எனக்குத் தெரியாது." என்று கூறினார்.

மீண்டும் அரசியல்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் அரசியலில் இறங்கிய அவர், தனது காந்திய மக்கள் இயக்கத்தின் பெயரை காமராஜர் மக்கள் இயக்கம் என்று மாற்றினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "முயற்சிகள் வீணானதால் விரக்தியில் அரசியலை விட்டு விலகி நிற்க முடிவெடுத்தது இமாலயத் தவறு என்று நினைக்கிறேன். சுயநலமாக வாழ மனசாட்சி அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய என்னை அர்ப்பணித்துவிட்டேன்.

காமராஜர் மக்கள் இயக்கம்
காமராஜர் ஆட்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கிய இந்த காந்திய மக்கள் இயக்கம் தற்போது காமராஜர் மக்கள் இயக்கம் என்று பெயர் மாற்றம் பெறுகிறது. அரசியல் களம் வன்முறைக் காடாகி விட்டது என்று கவலைப்படுபவர்கள், சகல தளங்களிலும் சிஸ்டம் சீரழிந்து விட்டது என்று சிந்திப்பவர்கள், மாற்று அரசியலை காணவேண்டும் என்று நினைப்பவர்கள், இனியும் பார்வையாளர்களாக இல்லாமல் வீட்டுக்கு ஒருவர் காமராஜர் மக்கள் இயக்கத்தில் இணைந்து செயலாற்ற அழைக்கிறேன்." என்று குறிப்பிட்டார்.

லொள்ளு சபா ஜீவா
இந்த நிலையில் அக்கட்சியில் இளைஞரணி தலைவராக லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவாவை தமிழருவி மணியன் நியமித்தார். விஜய் டிவியில் லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜீவா 2007 ஆம் ஆண்டு வேகம் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் பல திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் இவர் நடித்துள்ளார். ரஜினியின் ரசிகரான ஜீவா, அவரை போலவே மிமிக்ரி உடல்மொழிகளை செய்துகாட்டி அசத்துபவர். கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு டூப்பாக ஜீவா நடித்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக வழியில்..
இந்த நிலையில் தமிழருவி மணியன் பாஜக வழியில் செல்வதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. கட்சி தொடங்கியதில் இருந்தே ஆள்சேர்க்கையை தீவிரப்படுத்தி இருக்கும் தமிழருவி மணியன், மாவட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் மிஸ்டு கால் மூலமாக கட்சிக்கு ஆள் சேர்த்து வருகிறார்கள். கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜக இதேபோல் மிஸ்டுகால் மூலமாக ஆட்களை சேர்த்து வந்த நிலையில் தற்போது அதே முறையை தமிழருவி மணியனும் பின்பற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications