மதுரை கோரிப்பாளையம் பாலம் எப்போது திறக்கப்படும்? செல்லூர் ராஜு கேள்விக்கு அமைச்சர் எவ வேலு பதில்!
சென்னை: மதுரை கோரிப்பாளையம் பாலம் ஜனவரி மாதமும், அப்போலோ மருத்துவமனை பாலம் நவம்பர் மாதத்திலும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார். மதுரையின் போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறிய அவர், விரைவில் ஃபாத்திமா கல்லூரி அருகில் இணைப்புச் சாலை பணிகளும் முடிக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் வைகை ஆற்றை கடப்பதை கடந்து மதுரையில் பெரியளவில் பாலங்கள் இல்லாததும் இதற்கு மறைமுக காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த பின், கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ மருத்துவமனை அருகில் பாலம் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் பாலக் கட்டுமானத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கின. குறிப்பாக கோரிப்பாளையம் பாலம் கட்டப்படுமா என்ற கேள்விகள் எழுந்தது.
ஆனால் அமைச்சர் எவ வேலு நில உரிமையாளர்கள், அழகர் கோயில் மண்டகப்படி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பேசி கட்டுமான பணிகளை தொடங்கினர். மதுரையின் இரு முக்கியமான இடங்களில் பாலம் பணிகள் தொடங்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் உச்சத்திற்கு சென்றது. சுமார் ஓராண்டாக பாலத்தின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜு, கோரிப்பாளையம் பாலம் பணிகள் எப்போது முடியும்? அதேபோல் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பரிசோதனை காரணமாக சாலைகளில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் மதுரை மக்கள் சர்க்கஸில் செல்வது போல் பயணம் செய்கிறார்கள். மதுரை மக்களுக்கு எப்போது விடிவு காலம் வரும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சார் எவ வேலு எழுந்து, கடந்த முறை செல்லும் போது செல்லூர் ராஜு வீட்டிற்கு சென்றேன்.. அப்போது கேட்டால், ஏதோ பங்களா கட்டிக் கொண்டு ஃபார்ம் ஹவுஸில் இருப்பதாக கூறினார்கள். கோரிப்பாளையம் பாலத்தின் பணிகள் காரணமாக எனக்கு வீட்டிற்கு சென்று வருவதே கடினமாக இருப்பதாக என்னிடம் தொலைபேசியில் கூறி இருந்தார்.
அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு சங்கடப்படக் கூடாது என்று நான், அமைச்சர் மூர்த்தி மற்றும் தளபதி ஆகிய மூவரும் அதிகாலை நடைபயிற்சியின் போது சென்று ஆய்வு செய்தோம். இந்தப் பாலத்தை கட்டுவது நீண்ட கால திட்டம். மண்டபப் படி உரிமையாளர்கள், தேவர் சிலை குழுவினர் என்று பலருடன் ஆலோசித்து பேச்சுவார்த்தை நடத்தி கட்டுமான பணிகளை தொடங்கினோம்.
எப்போதும் நாம் ஒரு திட்டத்தை போடும் போது 90 சதவிகிதம் குறித்த நேரத்தில் முடிக்கப்படும். ஆனால் சில நேரங்களில் இயற்கை சீற்றம் காரணமாக கொஞ்சம் தள்ளிப் போகும். கோரிப்பாளையம் பாலத்தை ஜனவரி மாதம் திறக்க திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறோம். அப்போலோ மருத்துவமனை பாலத்தை நவம்பரில் திறக்க முடிவு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் மதுரை மேற்கு தொகுதியில் இன்னொரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்த பின் மதுரையின் போக்குவரத்து பிரச்சனைகள் சீராகிவிடும். வைகை வடகரை ஃபாத்திமா கல்லூரி அருகில் டிசம்பர் மாதத்தில் இணைப்புச் சாலையை திறக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications