சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிசாவையே பார்த்தவன் நான்... என்னையா மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? முதல்வர் ஸ்டாலின் பாய்ச்சல்!

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், பொறுப்பற்ற வகையில் தொடர்ந்து பேசி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

தமிழ்நாட்டில் வரும் பிப். 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன.

ஹிஜாப் விவகாரம்.. கர்நாடகாவில் +1, +2 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு புதன் வரை விடுமுறைஹிஜாப் விவகாரம்.. கர்நாடகாவில் +1, +2 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு புதன் வரை விடுமுறை

அதன்படி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் காணொலி வாயிலாகப் பிரசாரம் செய்தார்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மண்ணில் - கண்ணகி நீதிகேட்டு முழங்கிய மண்ணில் - தலைவர் கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் தொடங்கிய மண்ணில் - என்னுடைய பொதுவாழ்வுப் பயணத்தில் இளைஞரணிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட மண்ணில் - 'உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி' என்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, உங்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராசன் ஆகியோருக்கும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தளபதி, மணிமாறன் ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் மதுரையும் - மதுரை வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. மதுரை முத்தில் இருந்து, எத்தனையோ தியாக மறவர்களை இந்த மதுரை மண் நம்முடைய இயக்கத்திற்கு வழங்கியிருக்கிறது. தென் தமிழகத்திற்கே தலைநகரம்போல் இருக்கும் கூடல் மாநகராம் மதுரையின் வளர்ச்சிக்காக கழக ஆட்சியில் எத்தனையோ ஆக்கப்பூர்வமான திட்டப்பணிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. நகராட்சியாக இருந்த மதுரையை 1971-இல் மாநகராட்சியாக மாற்றியதே கருணாநிதிதான். மாவட்ட நீதிமன்றம் அமைக்க, அன்றைய முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அடிக்கல் நாட்டினார். பணிகள் முடிஞ்சி திறந்து வைத்தது, அவருக்குப் பிறகு முதலமைச்சரான நம்முடைய கருணாநிதி ! இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டது நம்முடைய கருணாநிதிதான். 2000-ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான், முதலமைச்சர் கருணாநிதிதலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. தென் மாவட்ட மக்களின் பல நாள் கனவை கருணாநிதி நனவாக்கினார். இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் மாபெரும் கட்டடம் கம்பீரமாக நிற்கிறது. அந்தக் காலத்தில் சென்னை அண்ணா மேம்பாலம்தான் எல்லோராலும் பெரிதாகப் பேசப்படும். இன்றைக்கும் கூட- அது அழகும் கம்பீரமும் குறையாமல் அவ்வாறே இருக்கிறது. அதேபோல மதுரையிலும் இரண்டு பாலங்களை அமைத்தவர் கருணாநிதிதான். மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பாலம் கட்டப்பட்டு, அதற்கு மதுரை முத்து மேம்பாலம் என்று பெயர் சூட்டியவர் கருணாநிதி. ஆண்டாள்புரம் பாலத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டியவர் கருணாநிதி. மதுரை தெற்குவாசல் இருப்புப்பாதை மேம்பாலம் கட்டப்பட்டு, 'தியாகி என்.எம்.ஆர்.சுப்புராமன் மேம்பாலம்' என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரையில் இன்றைக்கு கம்பீரமாகப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைந்திருக்கிறது.

 மதுரைக்கு திமுக செய்தது

மதுரைக்கு திமுக செய்தது

பி.கே.மூக்கையாத்தேவர் முயற்சியால் அமைக்கப்பட்ட அந்த சிலைத் திறப்புவிழாவை, அரசுவிழாவாக நடத்திக் கொடுத்ததும்; குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததும்- விழாவிற்குத் தலைமை வகித்ததும் கருணாநிதிதான். மானம் காத்த மருதுபாண்டியருக்குச் சிலை அமைத்தது கழக ஆட்சி! தமிழைச் செம்மொழி என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவிய பரிதிமாற்கலைஞருக்கு மணிமண்டபம். திராவிட மொழிநூல் ஞாயிறு என்று போற்றப்பட்ட தேவநேயப் பாவாணருக்கு மணிமண்டபம். மதுரா கோட்ஸ் மேம்பாலம். ஆனைக்கல் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், வைகை ஆற்றின் குறுக்கே 3 தரைப் பாலங்கள். செல்லூர் அருகே தத்தநேரி இருப்புப்பாதை, உயர்மட்ட மேம்பாலம் ஆகியவை கழக ஆட்சியில் அமைக்கப்பட்டன. மதுரை வடபகுதியிலிருந்து 27 கிலோமீட்டர் முதல் ரிங்ரோடு. மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். மாட்டுத்தாவணியில் வணிக வளாகம், பூ மார்க்கெட், சென்ட்ரல் மார்க்கெட். மதுரை ரயில் நிலையம் அருகே எல்லீஸ் நகர் மேம்பாலம். மதுரை மத்தியப் பகுதியில், மதுரை அண்ணா பல்கலைக்கழகம். இரண்டு பாலிடெக்னிக் கல்லூரிகள். வைகை இரண்டாம் குடிநீர்த் திட்டம் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம். வாடிப்பட்டியில் கைத்தறி ஜவுளிப் பூங்கா. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றினோம். புதிய டெர்மினல் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி அவை திறந்து வைக்கப்பட்டதும் கழக ஆட்சியில்தான்! மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத்திற்கு 2007-இல் நான்தான் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தேன். இவ்வாறு, பல்வேறு திட்டங்களை மதுரைக்கு உருவாக்கிக் கொடுத்த ஆட்சி- திமுக ஆட்சி! இந்த வரிசையில், இப்போது ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு திட்டங்களை தீட்டியிருக்கிறோம். அதில் முதன்மையானது, மிகப் பெரியது எது என்றால் சங்கம் வளர்த்த மதுரையில் கருணாநிதி பெயரில் மாபெரும் நூலகம் அமைக்கப் போகிறதுதான். 114 கோடி ரூபாய் மதிப்பில் அது கட்டப்பட இருக்கிறது. 2.70 ஏக்கர் நிலத்தில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடி கட்டடப் பரப்பில், 8 தளங்களுடன் அமையப் போகிறது. தென் மாவட்ட இளைஞர்களுடைய அறிவின் ஆலயமாக அது அமையப் போகிறது.

 அரசின் கடமை

அரசின் கடமை

அதேபோல, மதுரை நகரை மேம்படுத்துவதற்காக, 'மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தை' உருவாக்கி இருக்கிறோம். மதுரையில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்றமாதிரி, அதற்குத் தகுந்த அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கித் தர வேண்டியது ஒரு அரசின் கடமை. மதுரைக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து செயல்படுத்த, 14 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறோம். மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் பாதாளச் சாக்கடை வசதிகளை அமைக்கவும், இந்த வசதி ஏற்கனவே இருக்கின்ற பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளை மேம்படுத்தவும், 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தேன். இப்போது மதுரை நகரின் மையப் பகுதியில் இருக்கின்ற மொத்த விற்பனைச் சந்தைகள் எல்லாவற்றையும் புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றி, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்திருக்கிறேன். மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வருகிற போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, 100 கோடி ரூபாய் மதிப்பில் வைகை ஆற்றின் வடகரையில் இருக்கிற சாலையை நீட்டிப்பதற்கும், மேலக்கல் சாலையை அகலப்படுத்துவதற்கும் தேவையான பணிகள் செயல்படுத்தப்படும். நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கின்ற மத்திய சிறைச்சாலை, மாநகராட்சிக்கு வெளியே புது இடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது உள்ள அந்த 40 ஏக்கர் இடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், பசுமைப் பகுதியாக மேம்படுத்தப்படும். வண்டியூர், செல்லூர் மற்றும் தென்கரை ஏரிப்பகுதிகள் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில், பொதுப் பயன்பாட்டு இடங்களாக மேம்படுத்தப்படும். விரகனூர் சந்திப்பு, அப்போல்லோ மருத்துவமனை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, இராஜாஜி மருத்துவமனை சந்திப்பு போன்ற அதிகப் போக்குவரத்து நெரிசல் காணப்படும் சந்திப்புகளில், புதிய மேம்பாலங்களை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். தொழில் வளர்ச்சியில் மதுரை மாவட்டத்தை முன்னிறுத்தும் வகையில், மேலூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும். கடந்த ஜனவரி 21 அன்று, மதுரைக்கான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்கும் விழாவில், காணொலி மூலமாக நான் பங்கெடுத்தேன். அன்றைய நாள், 74 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான 11 பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது. 48 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான 9 பணிகளைத் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டினேன். 67 ஆயிரத்து 831 பயனாளிகளுக்கு, 219 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அந்த நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்பட்டது. மொத்தமாக அன்றைய நாள் மட்டும் 342 கோடியே 33 லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகள் மக்களுக்குக் கிடைத்தது.

 அதிமுக படுதோல்வி அடையும்

அதிமுக படுதோல்வி அடையும்

இது எல்லாம் ஆட்சிக்கு வந்த எட்டே மாத காலத்தில் மதுரைக்குச் செய்யப்பட்ட பணிகளில், ஒரு சிறு பகுதிதான்! அதிமுக ஆட்சியில், மதுரையை இலண்டன் ஆக்கப் போகிறோம், சிங்கப்பூர் ஆக்கப் போகிறோம் என்று அப்போதைய அமைச்சர்கள் சிலர் நித்தமும் பேட்டி கொடுத்தார்கள். ஆனால், ஏற்கனவே இருந்த மதுரையையும் இன்னும் கொஞ்சம் சீரழித்து விட்டுப் போனதுதான் அவர்கள் ஆட்சியின் இலட்சணம். அதிமுக ஆட்சியில், ஊராட்சியில் நிர்வாகம் இல்லை. நகராட்சியில் நிர்வாகம் இல்லை. ஏன், மாநகராட்சியிலும் நிர்வாகம் இல்லை! இதே மதுரை மாநகராட்சியின் ஊழல் நாற்றம், ஊர் பூராவும் வீசியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எவ்வாறு சென்னையை வெள்ளத்தில் மூழ்க வைத்தார்களோ, அவ்வாறுதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையை ஊழலில் மூழ்கடித்தார்கள்! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுற்றி நடைபாதை அமைப்பதில் ஊழல் செய்தார்கள். வைகை ஆற்றுக் கரை அமைப்பதில் ஊழல் செய்தார்கள். ஸ்மார்ட் சிட்டிக்காகப் பள்ளம் தோண்டினால், அந்த இடத்தில் கிடைக்கின்ற மண்ணையும் எடுத்து விற்றார்கள். இதையெல்லாம் கண்டுபிடித்துவிடக் கூடாதென்று, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கண்காணிக்கும் சிறப்பு அதிகாரியைப் போடாமல் இருந்தார்கள். அதற்கென்று இருக்கின்ற ஆலோசனைக் குழுவைக் கூட நியமிக்காமல் இருந்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நம்முடைய மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும் அதற்காக எவ்வளவோ போராடிப் பார்த்தார். அதெல்லாம் மதுரை மக்களுக்குத் தெரியும்! நம்முடைய நிதியமைச்சர்கூட, அமைச்சரானதும் மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்த்துவிட்டு, எப்படி எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என்று பேட்டியே கொடுத்திருக்கிறார். நீங்களும் அதைப் படித்திருப்பீர்கள். ஓ.பி.எஸ்- பழனிசாமிக்கு வேணும் என்றால் மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழல் மறந்திருக்கலாம். ஆனால் மதுரை மக்கள் மறக்கவில்லை! ஏற்கனவே சென்னை ஸ்மார்ட் சிட்டி பணி ஊழல்களை விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறேன். அதில், மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழலும் சேர்த்து விசாரிக்கப்படும் நாள், வெகு தொலைவில் இல்லை! இந்த மாதிரி மாநகராட்சிகள் நிர்வாகத்தை எல்லாம் ஊழல்மயமாக்கிய அதிமுகவிற்கு, நகர்ப்புறத் தேர்தலில் நிற்கவே யோக்கியதை இல்லை என்பதுதான் உண்மை. மதுரைக்கு மோனோ இரயில் என்று சொன்னார்கள். எங்கே அது ஓடுகிறது? முத்துராமலிங்கத் தேவர் சிலையருகே பறக்கும் பாலம் என்று கூட சொன்னார்கள். பறக்கும் பாலம் ஏதாவது இருக்கிறதா? மதுரை வைகை நதியை, லண்டனின் தேம்ஸ் நதி போல மாற்றுவோம் என்றும்; மதுரையை சிட்னி நகரைப் போல மாற்றுவோம் என்றும்; மதுரையை ரோம் நகரைப் போல மாற்றிவிடுவோம் என்றும், விஞ்ஞானி செல்லூர் ராஜூ சொன்னார். ஆனால் எதையும் செய்யவில்லை. இதுதான் அதிமுகவின் லட்சணம். மீடியா மைக்கை நீட்டினாலே எதையாவது காமெடியாகச் சொல்வார்கள். அது மட்டும்தான் அ.தி.மு.க.வினருக்குத் தெரியும். 'தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கிறது'- என்று புதிதாக ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் அமாவாசைகள் யார் என்று தெரிந்துதான், 'அமைதிப்படை'யாக வாக்களித்து, அவர்களை இன்றைக்கு புலம்ப விட்டிருக்கிறார்கள் நம் தமிழக மக்கள். அ.தி.மு.க. அஸ்தமனத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்ற கட்சி, அதிமுக. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த கட்சி, அதிமுக. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்த கட்சிதான் - அதிமுக! அடுத்து நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுத்தமாகக் காணாமல் போன கட்சி- அதிமுக! இப்படி பழனிசாமி-பன்னீர்செல்வம் தலைமையில் முடங்கிப்போன கட்சி- முடக்கத்தப் பற்றி பேசலாமா? இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்திக்கப்போகின்ற கட்சிதான் - அதிமுக.

 அடிமைத்தனம்தான் தெரியும்

அடிமைத்தனம்தான் தெரியும்

அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் தெரியாது. அடிமைத்தனம்தான் தெரியும்! அவர்களுக்குத் தெரிந்த அரசியல் எல்லாம், அமாவாசை அரசியல்தான். ஆட்சியை விட்டு இறக்கப்பட்டு ஒன்பது மாதம் ஆனதால், இவர்கள் ஆட்சியில் நடந்த கோமாளிக் கூத்துகளை மக்கள் மறந்துவிட்டு இருப்பார்கள் என்று நினைத்து, திமுக ஆட்சிக்கு சட்டம் ஒழுங்கு பற்றிப் பாடம் எடுக்கிறார் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்று கொஞ்சம் நினைவூட்டவா? பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் - 6 பேர் பலி. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் -13 பேர் பலி. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை. இதுதான் அ.தி.மு.க. ஆட்சி லட்சணம்! நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி கொலையும், சிறையில் ராம்குமார் மரணமும்தான் அ.தி.மு.க. ஆட்சி! திருச்சி ராமஜெயம் கொலை. ஏர்வாடி காஜா மொய்தீன் கொலை. கச்சநத்தம் பட்டியல் இனத்தவர் மூன்று பேர் படுகொலை. உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் கொலை. உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை. ஏன், அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவிலேயே கொலை, கொள்ளை நடந்தது. இப்படி நாள்தோறும் 'கொலை - கொள்ளைதான்' அ.தி.மு.க. ஆட்சியில் தலைப்புச் செய்தியாக இருந்தது! தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் சிலை, அண்ணல் அம்பேத்கர் சிலை, திருவள்ளுவர் சிலைகள் அவமதிக்கப்பட்டது. மானுட சமுதாயத்தின் உயரிய சிந்தனையாளர்களான இவர்கள் மேல் கறை பூச, நாசகார சக்திகளை சுதந்திரமாக அனுமதித்து, கறை படிந்து, அழுக்கோடு தேங்கி நிற்கிறது அ.தி.மு.க. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது யார்? அப்படி ஒரு கொடூரமான கும்பலைக் காப்பாற்ற வெட்கமேபடாமல் செயல்பட்டதுதான்- 'பச்சைப் பொய்' பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி! தமிழ்நாடு அரசின் தலைமைப் பீடமான தலைமைச் செயலகத்துலேயே வருமான வரித்துறை சோதனை, தமிழ்நாட்டு வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கிற அந்த சம்பவம் நடந்தது அதிமுக ஆட்சியில்தான். டி.ஜி.பி. வீட்டில் சோதனை நடந்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்! இப்படியெல்லாம் ஆட்சி நடத்தி- தமிழர் விரோத பா.ஜ.க.விற்கு அடிமைச் சேவகம் செய்து, மோசமான, பாதுகாப்பற்ற ஆட்சியை நடத்திய பழனிசாமி - பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனி, எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாக்கு கேட்கிறார்கள்? எந்தத் தகுதியோடு திமுக ஆட்சியை விமர்சிக்கிறார்கள்?

 கூவத்தூர்

கூவத்தூர்

இவர்கள் முகத்தை மக்கள் அருவெறுப்போடத்தான் பார்க்கிறார்கள்! ஒருபக்கம் மக்கள் விரோத ஆட்சியை நடத்திவிட்டு, இன்னொரு பக்கம் கோமாளிக் கூத்துகளை நடத்திக் கொண்டு இருந்தவர் பழனிசாமி! கம்பராமாயணத்தை எழுதியது- சேக்கிழார் என்று பழனிசாமி சொல்வார்! தெர்மாகோல் வைத்து வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்கிறேன் என்று அறிவியல் மாமேதை செல்லூர் ராஜூ சொல்வார். மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால்தான், நொய்யல் ஆற்றில் நுரை அதிகமாகியிருக்கிறது என்று கருப்பண்ணன் சொல்வார். இவ்வாறு, திண்டுக்கல் சீனிவாசன்- ராஜேந்திர பாலாஜி- ஆர்.பி.உதயகுமார் என்று ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாள் வித விதமாக காமெடி செய்வார்கள். இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஓ.பன்னீர்செல்வம் 'தர்மயுத்தம்'-என்று ஒன்றை செய்ததுதான் மிகப் பெரிய மெகா காமெடி! எதிர்காலத்தில், பழனிசாமியோடு காமெடி தர்பார் எப்படி நடந்தது என்று யாராவது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பரமார்த்த குரு மற்றும் சிஷ்யர்களுடைய கதையை படித்த மாதிரிதான் இருக்கும். இந்த லட்சணத்தில்தான், என்னவோ சிறப்பான ஆட்சியைக் கொடுத்துவிட்ட மாதிரியான மிதப்பில், பழனிசாமி புளுகுமூட்டைகளாக அவிழ்த்துவிடுகிறார். பன்னீர்செல்வம் அதற்குப் பக்கவாத்தியம் வாசிக்கிறார்! பழனிசாமி ஆட்சியை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், கூவத்தூரில் ஊர்ந்தார்- ஊழலில் புரண்டார்- ரெய்டுகளுக்கு குனிந்தார்- சுயமரியாதையைத் துறந்தார்- நீட் தேர்வு முதல்- மாநில உரிமைகள் அனைத்தையும் டெல்லிக்கு அடகு வைத்துப் பணிந்தார்! இவ்வாறுதான் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. இந்தியாவையே போராட்டக் களமாக ஆக்கிய, மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது அதிமுக. இதையெல்லாம் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு இருந்தார்கள். சிலர் வெளியிலேயும் சொன்னார்கள். தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய நிதி- ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை- இந்தித் திணிப்பு- புதிய கல்விக் கொள்கை- முல்லைப் பெரியாறு- காவிரி உரிமை- மேகதாது அணை என்று தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்துக்காகவும் குரல் கொடுத்ததும் போராடியதும் தி.மு.க.தான். ஆனால், அ.தி.மு.க.விற்கு மும்மொழிக் கொள்கையை எதிர்க்கக் கூட முதுகெலும்பு இல்லை. "பேரறிஞர் அண்ணாவே மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார்"-என்று பாண்டியராஜன் என்று ஒரு அமைச்சர் இருந்தாரே அவரை வைத்து அபாண்டமான பொய் சொன்னார்கள். இதற்கு எதற்கு அண்ணா பெயரில் கட்சி நடத்துகிறீர்கள் என்றுதான் நான் மட்டுமில்லை, தமிழ்நாடே அடிமைகளை பாத்து கேள்வி கேட்டது! இந்த மதுரை மண்- தமிழர்களுடைய வரலாற்றின் அடையாளமாக விளங்குகிறது. "கீழடி நம் தாய்மடி"-என்று நாம் எல்லோரும் பெருமையாக சொல்லிக்கொள்கிற அளவிற்கு, ஏராளமான தொல்பொருள் சான்றுகளை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறது. மதுரையால் உலக அரங்கில் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம். ஆனால், கீழடியில் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை வெளிக்கொண்டு வந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை- தூக்கி எறிந்தார்கள்! நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான்- அவர் மீண்டும் இங்கே வந்திருக்கிறார்.

 ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தபோது, தமிழ்நாடே ஒன்று சேர்ந்து அதற்காகப் போராடியது! இளைஞர்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராடியபோது, முதலில் களத்திற்கு வந்தது நான்தான். அலங்காநல்லூருக்கு வந்து- ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உங்களோடு தோளோடு தோள் நிற்பேன் என்று சொன்னேன். மெரினாவில் போராட்டம் நடந்ததும், முதலில் ஆதரவு தெரிவித்தது நான்தான். ஆனால், போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியது யார்? ஓ. பன்னீர்செல்வம்தான். அவர்தான் அப்போது முதலமைச்சர். போராடிய இளைஞர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீச வைத்தார். எல்லாவற்றிற்கும் மேல் - மெரினா போராட்டக்காரர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? தேச விரோதிகள், சமூக விரோதிகள், தீவிரவாதிகள், குடியரசு தினத்தை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்கள், என்றெல்லாம் கூறி மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டமே, தேச விரோதப் போராட்டம், சமூக விரோதப் போராட்டம், தீவிரவாத போராட்டம் என்று வீர விளையாட்டை மீட்பதற்காக நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திக் குற்றம் சாட்டியவர்தான் இந்த பன்னீர்செல்வம். இல்லை என்று மறுக்க முடியுமா? சட்டமன்றத்தில் இதுதொடர்பாக நான் கேள்வி எழுப்பியபோது, ஓ.பன்னீர்செல்வம் சொன்ன சொற்கள்தான் இவை. அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள்தான் இவை. அத்தனையும் சட்டமன்றப் பதிவேட்டில் இருக்கிறது. வேண்டுமென்றால் அடுத்தமுறை அவைக்கு வரும்போது, ஓ.பன்னீர்செல்வம், தான் முதலமைச்சராக இருந்தபோது எனக்கு அளித்த பதிலை படித்துப் பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறெல்லாம் ஆட்சி செய்தவர்கள்தான் பழனிசாமி-பன்னீர்செல்வம் கம்பெனி!

 அதிமுக

அதிமுக

ஜல்லிக்கட்டு போராட்டத்தை இவ்வளவு கொச்சைப்படுத்தியும், இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்றால் அது இளைஞர்களின் வீரத்திற்கு, அவர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. 'பல்லக்குத் தூக்கி' பழனிசாமியின் ஆட்சிக்காலம்தான்-தமிழ்நாட்டினுடைய இருண்ட காலம்! பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சி என்பது- தொழில் வளர்ச்சியை முடக்கிய ஆட்சி! காவல்துறையைச் சீரழித்த ஆட்சி! அரசு நிர்வாகத்தைப் பாழ்படுத்திய ஆட்சி! கஜானாவைத் துடைத்து எறிந்த ஆட்சி! தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகளைக் கமிஷன் கேட்டு துரத்திய ஆட்சி! கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் என்று ஊழலில் ஊறித் திளைத்த ஆட்சி! இவ்வளவு ஏன், இந்த தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கியதும் அதிமுகதான்! வரலாற்றின் கருப்புப் பக்கங்களில்தான், 'பல்லக்குத் தூக்கி' பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி இடம்பெறும்! இந்தப் பச்சைப் பொய்யர்களுடைய லேட்டஸ்ட் பொய் என்ன தெரியுமா? கஷ்டப்படுகிற மக்களுக்கு தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு நிதி உதவி செய்யவில்லையாம். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடனேயே, அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா பிடியில் சிக்கி வாழ்வாதாரச் சிக்கலில் இருந்தவர்களுக்குத் தலா 4 ஆயிரம் ரூபாயை எந்தவிதமான புகாருக்கும் இடமில்லாமல் வழங்கியது தி.மு.க. ஆட்சி! கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கொடுத்தது தி.மு.க. அரசு! தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக 3 லட்ச ரூபாய் வழங்கியது தி.மு.க. அரசு! கொரோனாவில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் இந்தியாவிலேயே முதன்முதலில் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கியது- நமது அரசுதான்! இலங்கை கடற்படையால் சேதாரப்படுத்தப்பட்ட மீனவர்களின் 108 படகுகளுக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்கியது இந்த திமுக அரசுதான். 17 நாட்டுப் படகுகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கியதும் திமுக அரசுதான்.

 ஏமாற்ற முடியாது

ஏமாற்ற முடியாது

மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது திமுக அரசு! மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை 1500 ரூபாயில் இருந்து, 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கியது திமுக அரசு. இப்படி பல நிதி உதவிகளை வழங்கியது திமுக அரசு. இன்னும் ஒன்றை நேற்றைய பரப்புரைக் கூட்டத்தில் சொன்னேன். விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம். இந்த ஸ்டாலின் ஒன்று சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றுவான்! திமுக ஆட்சி என்பது, உதயசூரியனின் ஆட்சி. எல்லோருக்கும் விடியல் தரும் ஆட்சி! அந்த விடியலின் வெளிச்சம், பழனிசாமியின் கண்ணைக் கூசச் செய்கிறது! அதனால்தான் அவரே தன் கண்ணை மூடிக்கொண்டு இருண்டகாலம் என்று சொல்கிறார். 'பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது' - இது பழமொழி! 'பழனிசாமி கண்ணை மூடிக் கொண்டால்- தமிழ்நாடு இருண்டு விடாது'- என்பது தமிழ்நாட்டு மக்கள் சொல்லும் புதுமொழி! தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதன் மூலமாக, நாட்டு மக்களை ஏமாற்ற முடியுமா என்று பழனிசாமி பார்க்கிறார். 2024 முதல் நாட்டில் ஒரே நாடு - ஒரே தேர்தல் வரப் போகிறது என்று ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. இவருடைய ஞானதிருஷ்டிக்கு மட்டும்தான், இதெல்லாம் தெரியும் போல!

 யாரை மிரட்டுகிறார்

யாரை மிரட்டுகிறார்

கற்பனையில் கோட்டை கட்டிக் கொண்டு, பாஜகவிற்கு டப்பிங் பேசுகிறார் பழனிசாமி. . பழனிசாமி யாரை மிரட்டுகிறார்? மிசாவையே பார்த்த இந்த ஸ்டாலினை உங்கள் மிரட்ட முடியுமா? கற்பனையில்கூட அவ்வாறு கனவு காணாதீர்கள்! கூவத்தூரில் தவழ்ந்து போய் ஆட்சியைப் பிடித்தவர் என்று நினைக்கிறீர்களா? சசிகலாவின் காலைப் பிடித்து பதவியைப் பெற்று, சசிகலா காலை வாரி தனது பதவியை நிலைப்படுத்திக் கொண்டு, தனது நாற்காலியை நான்காண்டு காலம் காப்பாற்றுவதற்காக, பாஜகவிற்குப் பாதம் தாங்குவதையே வழக்கமாக வைத்திருந்து, டெல்லிக்குக் காவடி எடுத்த சுயநலத்தின் மொத்த உருவம்தான் நீங்கள்! சசிகலாவைப் பார்த்தால் பயம். ஓ.பன்னீர்செல்வத்தைப் பார்த்தால் பயம்! டெல்லியைப் பார்த்தால் பயம். கொடநாடு பங்களா என்று சொன்னாலே பயம் என்று அஞ்சி நடுங்கி வாழும் பழனிசாமிக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னைப் பார்த்துப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு? பழனிசாமியின் இதுபோன்ற பொறுப்பற்ற - ஆணவப் பேச்சுக்களுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதுதான் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல். இதில் மதுரை மக்களாகிய நீங்கள் கழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்களித்து முழுமையான வெற்றியைத் தரவேண்டும். நல்லாட்சிக்குத் துணைநிற்க வேண்டும். மதுரைக்கு மேலும் மேலும் வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்ற ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன். உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி! நன்றி. வணக்கம்" என்றார்.

English summary
Chief Minister Stalin latest campaign speech for urban local body election: Chief Minister Stalin campaign for urban local elections in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X