சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் இல்லை.. பசியால் இறந்து விடுவோமோ என்று பயமா இருக்கு.. கலங்க வைக்கும் தமிழகத்தின் குரல்

Google Oneindia Tamil News

சென்னை: "நாங்கள் மனநோயாளியாகிவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது சார்..", "கொரோனாவால் அல்ல, பசியால் இறந்துவிடுவோமோ என்று பயமாக இருக்குது சார்.." இவையெல்லாம், தமிழக தொழிலாளர்களின் குரல்கள். கொரோனா ஊரடங்கால், வீட்டுக்குள் முடங்கி, சேமிப்பு கரைந்து, அடுத்து என்ன என்று தெரியாமல் வாழும் சாமானியர்களின் குரல் இது.

'நியூஸ் 18 தமிழ்நாடு' ஆசிரியர் குணசேகரன், நெறியாள்கையில், நேற்று இரவு ஒளிபரப்பான 'காலத்தின் குரல்' நிகழ்ச்சியில், சாமானியர்கள் சந்தித்து வரும் பாதிப்புகள் கேட்டறிந்து ஒளிபரப்பப்பட்டன.

Tamilnadu people is under heavy economy pressure due to lockdown

பல தரப்பட்ட தொழில் செய்வோரின் அனுபவங்களும் கேட்டறியப்பட்டன. இதோ நீங்களும் பாருங்கள், அவர்கள் மனதின் குரலை.

திருச்சியை சேர்ந்த ராஜா: நான் டிபன் சென்டருடன், டீ விற்பனை செய்து வருகிறேன். 30 நாட்களாக கடை இல்லை. கடையில் ஒரு நாளைக்கு, 1000 ரூபாய் செலவாகும். 1500 வருமானம் வரும். அந்த 500 ரூபாயை வைத்துதான் குடும்பத்தில் 4 பேர் தினசரி செலவுக்கு பயன்படுத்தினோம். இப்போ 144 தடை உத்தரவு இருப்பதால், டிபன் கடையை குறைந்தநேரத்தில் ஓபன் செய்து வைக்க அரசு அனுமதியளித்தாலும், வாடிக்கையாளர்கள் வருவதில்லை. நான் முன்னேறி வருகிறேன் என்று நினைக்கும்போது, கொரோனா, என்னை 8 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது.

Tamilnadu people is under heavy economy pressure due to lockdown

இஞ்ச், இஞ்சா முன்னேறி வந்தேன். இப்போ பின்னால் போய்விட்டேன். நாலு பேரும் சாப்பிட தினமும் 200 ரூபாயாவது ஆகும். கடன்களை செலுத்துவது எப்படி? அரசு கொடுத்த ஆயிரம் ரூபாயும், அரிசி, பருப்பும் ஒரு வாரத்திற்குத்தானே சார் போதும். இதை வைத்து எப்படி வாழ முடியும், என்றார் வருத்தத்தோடு ராஜா.

ஜெயபாலமுருகன், பெயிண்டர், மதுரை: நான் பெயிண்டிங் கான்ட்ராக்டர். என்னிடம் சுமார் 7 பேர் வேலை பார்க்கிறார்கள். ஒரு மாதத்திற்கு, 20 நாட்கள்தான் ஏற்கனவே வேலை கிடைத்து வந்தது. மாதம் ரூ.12,000 அளவுக்குத்தான் சம்பாதிக்க முடியும். கடனை வாங்கிதான் ஓட்டிக் கொண்டு இருந்தோம். எங்கள் குடும்பத்தில் 4 பேர் இருக்கிறோம். காலை டீ குடிப்பது முதல் இரவு சாப்பாடு வரை, எவ்வளவோ செலவு இருக்கிறது.

Tamilnadu people is under heavy economy pressure due to lockdown

அரசு கொடுக்கும், நிவாரண நிதி எங்களுக்கு போதுமானதாக இல்லை. அரசு எங்களையும் பார்க்க வேண்டும். ஆயிரம் இல்லை, 5000 ரூபாய் கொடுத்தாலும், எங்களுக்கு போதாது. கடன்காரர்கள், யாரும் வரமாட்டார்கள் என அரசு கூறுகிறது. ஆனால், கடன்காரர்கள், வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்களே என்ன செய்ய? 10 நாள் என்றால் இருக்கும் காசை வச்சி சமாளிச்சிரலாம் சார். ஆனால் அதுக்கு மேல காசு இல்லையே சார். நாங்கள் சிறு சிறு கம்பெனிகளிடம் சென்று, எங்கள் குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறோம். ஆனால் கம்பெனிகளோ, நாங்களே ஜிஎஸ்டி வரியால் கையில் காசு இல்லாமல் தவித்துக் கிடக்கிறோம். நாங்கள் எப்படிப்பா உங்களுக்கு உதவி செய்ய முடியும் என்று கேட்கிறார்கள். நாங்கள் தினசரி வீட்டு கதவுக்கு வெளியே எட்டி எட்டி பார்க்கிறோம். எங்களுக்கு ஆர்டர் வருமா என பார்க்கிறோம். வரலியே சார். இவ்வாறு நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

கோவையை சேர்ந்த ஷாகிதா என்ற பெண், டெய்லர் இதுபற்றி கூறியதாவது: அரசு ரூ.1000 கொடுக்கிறது. ஆனால், சமையல் எரிவாயு விலையே 810 ரூபாய். மிச்சமுள்ள 190 ரூபாயை வைத்து ஒரு மாதம் குடும்பம் நடத்த முடியுமா சார்? ரேஷன் கடையில், ரூ.500க்கு சாமான்கள் வாங்க வரச் சொல்கிறார்கள். அந்த ரூபாய் இருந்தால், நாங்கள் கடையிலேயே வாங்கிட்டு போயிருவோமே.. வீட்டில் ஒவ்வொருத்தருக்கும் பிபி, சுகர் சாதாரணமாகிவிட்டது. சாப்பாட்டுக்கே செலவு செய்ய முடியவில்லை. மாத்திரை, மருந்து வாங்க காசுக்கு எங்கே போவோம் சார்? ஒரு நாளைக்கு ஒரு ப்ளவுஸ் தைத்தா 100 கிடைக்கும். என் வீட்டுக்காரர், ஆட்டோ ஓட்டுகிறார். இப்போ ஆட்டோவும் ஓட்ட முடியாது. ஆட்டோ கடன் கொடுக்கனும், வீட்டு வாடகை கொடுக்கனும். இதெல்லாம் எப்படித்தான் சாத்தியமாகும்?

Tamilnadu people is under heavy economy pressure due to lockdown

கடலூரை சேர்ந்த, மீனவர் பிரபாகரன்: கொரோனா பிரச்சினைக்கு பிறகு, மீன்பிடிக்க போகவில்லை. இதுதவிர, 60 நாள் மீன்பிடி தடைகாலம் வேறு வருகிறது. மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகை, முன்கூட்டியே தந்தால் உதவியாக இருக்கும். குழந்தைகள் கல்வி கட்டணத்தில், பாதியாவது அரசு செலுத்த வேண்டும். வீட்டு வாடகை வாங்க வேண்டாம் என்பார்கள், கல்வி கட்டணம் வாங்க வேண்டாம் என்பார்கள், இதெல்லாம் கண் துடைப்புதான் சார். ஸ்கூலுக்கு போனதும், ஃபீஸ் கேப்பார்கள். குழந்தைகள் கண்ணை கசக்கிக் கொண்டு வந்து நிற்கும்போது நாங்கள் என்ன செய்ய முடியும் சார்?

Tamilnadu people is under heavy economy pressure due to lockdown

கொலுசு பட்டறை தொழிலாளர் வெங்கடேஷ், சேலம்: நாங்க 2 பேர் வேலை செய்தாலும் 700 ரூபாய்தான், வருமானம் ஈட்ட முடியும். சேலம் மாவட்டத்தில் வெள்ளித்தொழிலை நம்பி 3.5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கான நிதியுதவி கொடுக்கப்படவில்லை. 4 பேர் உள்ள குடும்பத்திற்கு தினமும் குறைந்தபட்சம் 200 செலவாகும். 70 நாட்கள் ஊரடங்கு போட்டுள்ளார்கள் என்றால், ரூ.14,000 வேண்டும். அரசு அவ்வளவு கொடுக்காவிட்டாலும், ஓரளவுக்காவது கொடுத்திருக்க வேண்டுமே.

சிறுகுறு தொழில்களை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழக அரசு, அதற்கும் அனுமதி கொடுக்க கூடாது என தெரிவிக்கிறது. ஊரடங்கை, நீட்டித்து எங்களுக்காக கவலைப்படும் அரசு, எங்கள் பசிக்காகவும், எங்கள் குழந்தைகள் பசிக்காகவும், கவலைப்படனும் அல்லவா. வெள்ளி தொழிலாளர்களுக்கு, அரசு இதுவரை, நிதியுதவி அறிவிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோகன், சாலையோர வியாபாரி, மதுரை: வாரத்தில் 7 நாட்களும் வேலை பார்த்துதான் நாங்கள் வாழ்க்கை நடத்தி வந்தோம். நான் ஒரு இதய நோயாளி. மருத்துவ செலவும் இருக்கிறது. நாங்கள், ஒரு மனநோயாளி போல மாறிக் கொண்டு இருக்கிறோம். ஒருவர் முகத்தை ஒருவர் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு டீ குடிக்கவே யோசிச்சிகிட்டு இருக்கிறோம். வெளியே போய் வேலை பார்த்துவிட்டு வந்தால், குழந்தைகள், ஏதாவது வாங்கித்தருவோம் என எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இப்போ, அவர்களை பார்த்தால், பாவம்போல இருக்கிறது. ஊரடங்கு மே 3ம் தேதிக்கு பிறகு தளருமா என்றும் தெரியாது. தளர்த்தினாலும், பழைய மாதிரி வியாபாரம் நடக்குமா என்று தெரியாது. இதையெல்லாம் நினைத்துதான், மனநோயாளியாக மாறிவிட்டோம். டிவியில் சினிமாவும், சீரியலும் பார்க்க கூட மனசு வரல, நியூஸ் சேனல்களையே பார்த்துகிட்டு இருக்கோம். அரசு ஏதாவது அறிவிக்குமா என ஏங்கி பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

Tamilnadu people is under heavy economy pressure due to lockdown

ரேஷன் கடை மூலமாக ரூ.1000, நடைபாதை வியாபாரிகளுக்காக ரூ.1000 அரசு அறிவித்தது. ஆனால் ரேஷன் கடை மூலமாக கொடுத்த பணம்தான் கிடைத்தது. நடைபாதை வியாபாரிக்கான உதவித் தொகை இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. வீட்டு வாடகை கட்ட வேண்டாம் என்கிறது அரசு. ஆனால் வாடகையை நம்பித்தானே வீட்டு உரிமையாளர் இருக்கிறார். அவர் கேட்கும்போது கடன் வாங்கியாவது நாங்கள் கொடுத்து வருகிறோம். நாங்கள், சாலையோரத்தில், மழையிலும், வெயிலிலும் வேலை பார்த்தவர்கள். சுத்தமான காற்றை நாங்கள் வாழ்க்கையில் சுவாசிச்சதே இல்லை. தொழில் வசதி இல்லாத நகரம் மதுரை. எனவே சாலை வியாபாரம்தான் இங்கு பிரதான தொழில்.

மருத்துவ செலவு, திடீர் திடீரென வருகிறது. அதற்கு எங்கே சார் பணத்துக்கு போவோம். யாரிடமாவது கடன் கேட்டால் கூட, இப்போதெல்லாம் கொடுக்க தயங்குறாங்க சார். இவ்வாறு அவர் மனக்குமுறலை முன் வைத்தார். மேலும், நன்கு ஊதியம் பெறும், அரசு ஊழியர்கள், அவர்கள் பகுதியிலுள்ள ஏழை, எளியவர்களுக்கு, மளிகை சாமான்களையாவது வாங்கி கொடுத்து உதவ வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தார்.

Recommended Video

    வைரசுக்கு தடுப்புமருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி - சுதா சேஷய்யன்

    இவ்வாறு இந்த நிகழ்ச்சியில், பல தரப்பட்ட மக்களும், தங்களது மனக்குமுறலை முன்வைத்தனர். இதனிடையே, மதுரையை சேர்ந்த சாலையோர வியாபாரியான மோகனின் மனக்குமுறலை கேட்டு, 3 மாதங்களுக்கு தேவையான அரிசி வழங்க மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ராதாகிருஷ்ணன் முன்வந்துள்ளார்.

    English summary
    Many workers from various sector were explained their ordeal they facing in the lockdown period to News 18 Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X