"தொழில்துறையில் 3ம் இடம்" தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: கடந்த ஆண்டில் மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை விட சென்னையில் அதிக புத்தொழில் நிறுவனங்கள் தொடக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில் தொடங்க உகந்த மாநிலமாக 13ம் இடத்தில் இருந்து 3ம் இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி உள்ளதாகவும், பெண்கள் தொடங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டு வருவதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனம், சர்வதேச தொழில்முனைவோர் நெட்வொர்க் மற்றும் வடஅமெரிக்க தமிழர் சங்க பேரவை நடத்திய உலகத் தமிழ் ஸ்டார்ட் அப் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புத்தொழில் சார்ந்த செயல்பாட்டுக்கான லீடட் அங்கீகாரத்தை மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா அமைப்பு தமிழ்நாடு அரசுக்கு வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் முன்னெப்பேதும் இல்லாத வகையில், புத்தொழில் நிறுவனங்களுக்கு 1.5 மில்ல்யர் டாலர் முதலீடுகள் கிடைத்துள்ளன.
2021ம் ஆண்டை ஒப்பிட்டால், சுமார் 70 சதவிகிதம் அதிகமாகும். மந்தமான பொருளாதார சூழலிலும், தமிழ்நாடு மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. தொழில் தொடங்கி நடத்துவதற்கான இலகுவான சூழலில் 13ம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தமிழ்நாட்டை முன்னேற்றியுள்ளோம். ஆராய்ச்சி, மேம்பாடு, வான்வழி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை தொகுப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து துறை வளர்ச்சியை இலக்காக கொண்டது நமது அரசு. அனைத்து தொழில்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும், சிறக்க வேண்டும். இதற்காக வட்டார புத்தொழில் மையங்கள் மதுரை, ஈரோடு, நெல்லை மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
பழங்குடி மற்றும் பட்டியலினத்தவர் பிரிவுகளை சார்ந்தவர்கள் நடத்தும் புத்தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்யும் வகையில் ரூ.30 கோடி நிதி உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் தொடங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது. அதேபோல் இன்று தொடங்கப்படும் முன்னெடுப்பின் முதற்கட்டமாக அமெரிக்கா தமிழ் நிதியம் என்ற அமெரிக்கா வாழ் தமிழர்களால் தொடக்கப்பட்ட அமைப்பு மூலம் ரூ.16 அளவிற்கு தமிழ்நாட்டின் தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வு பற்றிய செய்தி, உலகம் முழுவதும் வாழும் சக்தி வாய்ந்த தமிழர்கள் மத்தியில் பரவும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications