மன்னாரிலிருந்து காற்றழுத்தம் எப்போது நகரும்?.. ராமநாதபுரம்,தூத்துக்குடிக்கு இன்று ரெஸ்ட்.. வெதர்மேன்
சென்னை: மன்னார் வளைகுடாவில் உள்ள குறைந்த காற்றழுத்தம் இன்று மதியம் அந்த இடத்தை விட்டு ஒரு வழியாக நகர்ந்து செல்லும் என்றும் கிழக்கு காற்றால் வரும் 8-ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது வலைதளப் பக்கத்தில் கூறுகையில் கடந்த 3-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தம் மன்னார் வளைகுடாவில் நுழைந்தது. அங்கேயே 48 மணி நேரம் தங்கியிருந்தது.
பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழந்தது. இதனால் கடலூருக்கு வடக்கேவும் டெல்டா பகுதிகளுக்கும் மேகக் கூட்டங்கள் அதிகரிக்கும்.

உயர் அழுத்தம்
குறைந்த காற்றழுத்தம் இரு உயர் அழுத்தங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டதால்தான் ஒரே இடத்தில் அது நகராமல் இருக்கிறது. இந்த நிலையில் இன்று மதியம் அது மேலும் குறைந்த காற்றழுத்த பகுதியாக வலுவிழக்கும். இது ஒரு வித காற்றை அரபிக் கடலுக்கு அனுப்பும். அது மெல்ல வளர்ந்து நகர்ந்து விடும்.

விட்டு விட்டு மழை
இதனால் கிழக்கு காற்றால் வரும் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும். பின்னர் 9 அல்லது 10 நாட்களுக்கு மழையே இருக்காது. டெல்டா, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுவை, காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று போல் இன்றும் விட்டுவிட்டு மழை பெய்யும்.

ரெஸ்ட்
இந்த பகுதிகளுக்கு அருகே ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு இன்று ரெஸ்ட். இன்றைய தினம் குறைந்த காற்றழுத்த பகுதி மேலும் வலுவிழந்தால் காற்று இன்று முதல் 8-ஆம் தேதி வரை உள் மாவட்டங்களின் பக்கமாக நகர்ந்துவிடும்.

நீலகிரி
இதனால் கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு மழை பெய்யும். கன்னியாகுமரியில் யாரு கண்ணு பட்டதோ தெரியலை தென் தமிழகத்தில் மழையே கிடைக்காத ஒரே மாவட்டம் ஆகிவிட்டது. சென்னையில் இன்று விட்டு விட்டு மழை பெய்யும். 8-ஆம் தேதிக்கு பிறகு சென்னையில் மழை இருக்காது என்றார்.