பட்டாசு ஆலையில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு சூழ்நிலை வேண்டும்... தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்!
சென்னை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலை இயங்கி வந்தது. அந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் அறையில் இருந்து திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் ஒரு அறை முற்றிலும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

12 பேர் சாவு
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். 25-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். இதனால் மொத்தம் 12 பேர் இறந்துள்ளனர்.

அதிர்ச்சி
சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேர் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி விடுமுறை முடிந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனவேதனை அடைந்தேன்
இந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

பாதுகாப்பான சூழ்நிலை வேண்டும்
வெடி விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெடி விபத்தால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.மேலும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட வேண்டும் எனவும் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.