மே மாதத்தில் வெப்பநிலை குறையும்... தமிழகத்தில் வெப்ப அலை வீசாது... பாலச்சந்திரன் கணிப்பு
மே மாதத்தில் இயல்புக்கு சற்று குறைவாக வெப்பநிலை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: மே மாதத்தில் மட்டும் வெப்பநிலை இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சராசரி. சில நாட்களில் இயல்பைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயில் சுட்டெறிக்க துவங்கிவிட்டது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் அதி தீவிர வெயில் காலம் நாளை மே 4ம் தேதி துவங்குகிறது. எனினும் அதற்கு முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டிவதைத்து வருகிறது. நேற்று 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபேரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

வாட்டி வதைக்கும் வெயில்
தமிழகத்தில் விட இந்தியாவின் வட மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு ஏப்ரல் மாத வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தகிக்கும் வட மாநிலங்கள்
ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் கடந்த 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு மிகவும் வெப்பமான ஏப்ரல் மாதத்தை எதிர்கொண்டன. மத்திய இந்தியாவில் சராசரி அளவாக 37.78 டிகிரி செல்சியஸ் அளவும் வடமேற்கு இந்தியாவில் சராசரி அளவாக 35.9 டிகிரி செல்சியஸ் அளவும் வெப்பம் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.35 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

ஏப்ரலில் அதிகபட்ச வெப்பம்
நாடு முழுவதும் கடந்த 122 ஆண்டுகளில் நடப்பு ஏப்ரல் மாதத்தில் பதிவான 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது 4ஆவது அதிகபட்ச வெப்பநிலையாகும். நாடு 1973, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அதிக வெப்பமான ஏப்ரல் மாதத்தை கண்டது. உண்மையில், 2010 ஆம் ஆண்டு, நாடு கடந்த முறை மிகக் கடுமையான மற்றும் அதிக எண்ணிக்கையிலான வெப்ப அலைகளைக் கண்டது, இது மக்களைப் பெருமளவில் பாதித்தது.

பள்ளிகள் நேரம் மாற்றம்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அனல்காற்று வீசுவதால் மக்கள் கடுமையாக தவித்துவரும் நிலையில், இதன் காரணமாக ஒடிசாவில் கடந்த வாரம் பள்ளிக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாநில கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் பள்ளிகள் திறப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலை ஆறு மணிக்கே பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டு, உணவை காலை 9 மணிக்கே வழங்கி, அத்துடன் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து ஒடிசாவில் இன்று மாணவர்கள் காலை ஆறு மணிக்கு முன்னதாகவே பள்ளிக்கு வருகை தந்தனர்.

ஒடிசாவில் அனல்
ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரிக்கும் மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக டிடிலாகர் பகுதியில் 44.5 டிகிரியும், போலாங்கிர் மற்றும் பௌத் பகுதியில் 45 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. மேலும், 21க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேவேளை, அடுத்த சில நாள்கள் ஒடிசாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது அனல் காற்றால் தவித்து வரும் அம்மாநில மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் நிலை எப்படி
தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு வெப்பநிலை பதிவாகும். சூரியக்கதிர்கள் நேரடியாக வீசக்கூடிய காலகட்டத்தில் தரைக்காற்று அதிகமாக இருக்கும். அதனால் வெப்பம் அதிகரிக்கிறது. காற்றின் ஈரப்பதம், காற்றின் அளவு ஆகியவற்றைப் பொருத்து வெப்பநிலை அதிகரிக்கிறது. கணினியின் தரவுகளை வைத்து அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு 3 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

காற்றின் ஈரப்பதம்
பதிவான வெப்பநிலை என்பது வேறு, மக்கள் உணரும் வெப்பநிலை என்பது வேறு. கடலோரப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு காற்றின் ஈரப்பதம் ஒரு முக்கியமான விஷயமாக உள்ளது. காற்றின் திசைவேகம் கடலிலிருந்து வீசினால் வெப்பநிலை குறைவாக இருக்கும். தரைக்காற்று வீசினால் வெப்பநிலை அதிகமாக இருக்கும். நகரமயமாதலும் நகர வெப்ப தீவு தாக்கத்தினால் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது என்று கூறினார்.

வெப்பநிலை குறையும்
மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களை கோடை காலம் என்று சொல்கிறோம். மே மாதத்தில் இயல்புக்கு சற்று குறைவாக வெப்பநிலை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் மட்டும் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சராசரி. சில நாட்களில் இயல்பைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் வழு, திசை வேகம் பொருத்து வெப்பநிலை மாறும் என்று தெரிவித்தார்.
Recommended Video

வெப்ப அலைக்கு வாய்ப்பில்லை
வடமாநிலங்களில் நூற்றாண்டு காணாத வெப்பநிலை பதிவாகி வருவது பற்றி கூறிய பாலச்சந்திரன், வட மாநில பகுதி என்பது வேறு; அதன் அமைப்பு வேறு. இந்தப் பகுதியில் இருக்கும் வெப்பநிலை அமைப்பு என்பது வேறு. இரண்டுக்கும் நேரடியான தொடர்பு கிடையாது. வடமாநிலங்களில் வெப்ப அலை வீசியது. ஆனால் தமிழகத்தில் அப்படி ஒன்றும் இல்லை. 2 டிகிரி 3 டிகிரி மட்டுமே அதிகமாக உள்ளது என்று விளக்கினார். காலை 10 மணி வரையிலும், அதன்பின்பு மாலை 3 மணிக்கு பிறகும் வெளியே செல்வது நல்லது. இடைப்பட்ட அந்த நேரங்களில் சூரிய கதிர்கள் நேரடியாக தாக்கும் என்பால் பாதிப்பு ஏற்படும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications