புத்தாண்டு நாளில் நள்ளிரவில் கோவில்கள் திறப்பு... சாமி தரிசனம் செய்ய அனுமதி - அமைச்சர் சேகர் பாபு
புத்தாண்டு தினத்தில் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை: புத்தாண்டு அன்று கோவில்களில் வழிபடுவதற்கு தடையில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு தினத்தில் வழிபாட்டுக்காக நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும் கோவில்கள், நடைமுறைகளை மாற்றாமல் இந்த ஆண்டும் வழக்கம்போல திறக்கப்படும் என்றும் கூறினார்.
Recommended Video
நாளை நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 1 ஆம் இரவு வரை பொதுமக்கள் அதிக கூட்டம் சேராமல் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்யலாம் எனவும் அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோயில் நிலங்களை கண்டறிவது தொடர்பாக வட்டாட்சியர்கள் உடனான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களில் வழிபடுவதற்கு தடையில்லை என்று கூறினார்.

சாமி தரிசனத்திற்கு அனுமதி
தமிழக அரசு கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஜனவரி 1 புத்தாண்டையொட்டி அனைவரும் கோவிலுக்கு செல்வது வழக்கம். மக்கள் தற்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு, கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.

சமூக இடைவெளி அவசியம்
திருக்கோயில்களில் தரிசனத்திற்கு செல்பவர்கள் முதல்வரின் அறிவுரைப்படி முகக்கவசம் அணிந்து கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமல், சமூக இடைவெளியை பின்பற்றி கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். நாடு நலம் பெற, மக்கள் வளம் பெற வருகின்ற ஆண்டு நல்லாண்டாக அமைவதற்கு திருக்கோயில்களில் தரிசனத்திற்கு செல்பவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்கின்ற அனைத்து வழிமுறைகளையும் கையாள வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு கேட்டுக்கொண்டார்.

மாற்றம் எதுவும் இல்லை
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் வழிபாட்டுக்காக நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும் கோவில்கள், நடைமுறைகளை மாற்றாமல் இந்த ஆண்டும் வழக்கம்போல திறக்கப்படும்.

ஒரே நேரத்தில் குவிய வேண்டாம்
பக்தர்கள் நோய் பரவாமல், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரே நேரத்தில் குவியாமல் சுவாமி தரிசனம் செய்யலாம். ஆன்மீகவாதிகள் மலர்ச்சியோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்றும் திராவிட முன்னேற்றக் கழக அரசு மாண்புமிகு தமிழக முதல்வர் உறுதுணையாக இருப்பார். ஆன்மீகத்துக்கு எதிரான இயக்கம் என்பதை இன்றைய ஆட்சி தகர்த்தெறியும், திமுக அனைவருக்கும் பொதுவான ஆட்சி என்பதை நிலை நிறுத்தும் என்று கூறினார்.

அடிப்படை வசதிகள்
நிச்சயம் எங்களுடைய தாரக மந்திரம் திருக்கோவிலுக்கு சொந்தமாக வருகின்ற வருமானங்கள் திருக்கோவிலுக்கு சென்றடைய வேண்டும் அந்த வருமானங்கள் வாயிலாக திருப்பணிகள் நடைபெற வேண்டும் திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் இதுதான் தமிழக முதல்வருடைய உத்தரவு என்று சேகர்பாபு கூறினார்.

பணி நியமன ஆணை
திருக்கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் உடைய குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 110 அறிக்கையில் சொன்னதுபோல ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணி செய்கிறவர்களை திருக்கோவில் உடைய சட்டத்திற்கு உட்பட்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது விரைவில் தமிழக முதல்வர் அவர்களால் அந்த பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாகவும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இரவு வாகன போக்குவரத்திற்கு தடை
நள்ளிரவில் சாமி தரிசனம் செய்ய தடை இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு கூறினாலும் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரைக்கும் வாகன போக்குவரத்திற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளதால் புத்தாண்டு நாளில் அதிகாலை 5 மணிக்கு மேல்தான் சாமி தரிசனம் செய்ய முடியும். அதே நேரத்தில் வாகனங்களில் செல்லாமல் நடந்து செல்பவர்கள் கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications