சின்ன இருமலுக்கே இப்படி.. எல்லாத்துக்கும் காரணம் அதான்.. நான் நல்லா இருக்கேன்.. நெகிழ்ந்த கமல்ஹாசன்!
சென்னை : இப்போதெல்லாம் சின்ன இருமல் என்றால் கூட என்னை அதிகமாக விசாரிக்கிறார்கள், அதற்குக் காரணம் ஒன்று, ஊடகம், அப்புறம் பெருகி இருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டு வீடு திரும்பினார்.
அவரை வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையிலும் இன்று சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது உடல் நிலை குறித்துப் பேசினார்.

உலக நாயகன்
நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். அதோடு, கட்சி பணியிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன் தினம் மதியம் சென்னை திரும்பினார். நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இன்று டிஸ்சார்ஜ்
மருத்துவமனையில் கமல்ஹாசனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் இருமல், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் நலமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், லேசான காய்ச்சல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். அவர் வீட்டிலேயே ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

டிஎஸ்பி இசை வெளியீடு
எனினும், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் கமல்ஹாசன். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ள "டிஎஸ்பி" திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

நல்ல்ல்லா இருக்கேன்
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமலஹாசன், "முன்பெல்லாம் பெரிய விபத்துகள் நேரும்போது கூட எப்போது ஷூட்டிங் வருவீர்கள் என்று கேட்பார்கள், அடுத்த படம் எப்போது ரிலீஸ் என்று கேட்பார்கள். இப்போது சின்ன இருமல் என்றால் கூட எனக்கு பெரிய செய்திகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் ஒன்று, ஊடகம், அப்புறம் பெருகி இருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றி. நான் நல்லா இருக்கேன்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications