சாவடிங்கடா என்று சொன்னார்.. கொலை முயற்சி வழக்கு போட்ட போலீஸ்.. தொடவே இல்லை என்ற ஜெயக்குமார்
ஜெயக்குமார் தொடர்ந்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இரண்டாவது வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: சாவடிங்கடா என வார்த்தைகளை கூறி ஜெயக்குமார் மிரட்டியுள்ளார். அதை கருத்தில் கொண்டு 307 கொலை முயற்சி சேர்க்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 307-க்கான குற்றமே நடக்கவில்லை. புகார் கொடுத்தவரை மனுதாரர் ஜெயக்குமார் தொடக்கூட இல்லை என்று ஜெயக்குமார் தரப்பு வாதிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக சந்தேகம் எழுந்தது. அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனிடையே கள்ள ஓட்டு போட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் ஆபாசமாக பேசுதல், கட்டையால் அடித்துக்,
கொலை முயற்சி,உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இரவோடு இரவாக காவல்துறையினர் கைது செய்து பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைத்தனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் இன்று பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அப்போது முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின்,அப்துல்ரஹிம், உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு அவரை கைது செய்த திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஜாமீன் வழக்கு விசாரணை
இந்நிலையில் ஜெயக்குமார் தொடர்ந்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அவரது மனுவை நீதிபதி தயாளன் விசாரித்தார். நீதிமன்ற விவாதத்தின் போது ஜெயக்குமார் தரப்பும், அரசு தரப்பும் மாறிமாறி தங்களது வாதங்களை முன்வைத்தனர். தங்கள் தரப்பை பேசிய ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட வழக்குகள் பெயிலில் வெளிவரக்கூடிய பிரிவுகள் எனவே ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

கொலை முயற்சி வழக்கு
ஆனால் அதனை எதிர்த்து வாதிட்ட அரசு தரப்பு, ஜெயக்குமார் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 307-கொலை முயற்சி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கியுள்ளார். சாவடிங்கடா என வார்த்தைகளை கூறி மிரட்டியுள்ளார். அதை கருத்தில் கொண்டு 307 போடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டனர்.

உயிருக்கு பாதிப்பு வரும்
ஒரு முன்னாள் அமைச்சர், சட்டம் படித்தவர் இதுபோன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பார்கள். அந்த வகையில் சம்பவம் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

ஜெயக்குமார் தொடவே இல்லை
இந்த வாதங்களுக்கு எல்லாம் மறுப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு, 307-க்கான குற்றமே நடக்கவில்லை. புகார் கொடுத்தவரை மனுதாரர் ஜெயக்குமார் தொடக்கூட இல்லை. காயம் எதுவுமில்லை, எந்த அடிப்படையில் 506(2)- கொலை மிரட்டல் போடப்பட்டது. கொலை மிரட்டலே இல்லாத போது கொலை முயற்சி எப்படி வந்தது என கேள்வி எழுப்பினர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இரண்டாவது வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications