’ஹிந்து’வும் ‘தினமணியும்’ மறுப்பு.. மன்னிப்புக் கேட்பாரா அண்ணாமலை?
சென்னை: சில நாட்கள் முன்னதாக பொதுக் கூட்டம் ஒன்றில் பேச பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'பசும்பொன் தேவரின் எச்சரிகைக்குப் பிறகு அண்ணா மன்னிப்புக் கேட்டார்' என்று போகிற போக்கில் ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
அவர் சொன்ன சம்பவம் குறித்து அதற்குப் பிறகு அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன. 'அண்ணா மன்னிப்புக் கேட்கவும் இல்லை, ஊரை விட்டு ஓடவும் இல்லை' என்று சான்றுகளைக் காட்டி 'ஹிந்து'வும் 'இண்டியன் எகஸ்பிரஸ்' மற்றும் 'தினமணி'யும் செய்தி வெளியிட்டுவிட்டு விளக்கமும் அளித்துவிட்டனர்.

ஆனால், இதற்காக அண்ணாமலை இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாகப் பத்திரிகையாளர்களிடம் தர்க்கம் செய்து வருகிறார்.
1956இல் மதுரையில் என்னதான் நடந்தது?
அந்தக் காலத்தில் நடந்த அண்ணா சம்பவம்' குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், தனது நூலில் பல ஆண்டுகள் முன்பே எழுதி இருக்கிறார். அவர் சொல்லும் உண்மை என்ன?
"பலவருடங்களுக்கு முன்னால், பசும்பொன் தேவர் மற்றும் நேதாஜி இருவரின் அரசியல் பார்வை குறித்து ஒப்பீடு செய்து 'வீரத்திருமகன்' என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி இருக்கிறேன்.
கிட்டத்தட்ட 1000 பக்கத்தில் அந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. அதில், அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்ன அண்ணாவுக்கும் தேவருக்கும் இடையே நடந்த விவாதம் பற்றி எழுதியும் இருக்கிறேன்.
அண்ணாமலை குறிப்பிட்டுப் பேசிய அந்தச் சம்பவம் பற்றித் தெரிந்துகொள்ள, அன்றைய காலகட்டத்திற்கு நீங்கள் செல்லவேண்டும். அப்போதுதான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அன்றைய காலத்தில், ஆதிகம் மற்றும் நாத்திகம் ஆகிய இரண்டும் பொது மேடைகளில் மிக வெளிப்படையாகப் பேசப்பட்டுவந்த காலம்.
அண்ணாவைப் பற்றி அண்ணாமலை சொன்ன சம்பவம் நடந்தது 1956. திமுக அப்போது தேர்தலைச் சந்திக்கவில்லை. 57 தேர்தலில்தான் திமுக போட்டியிட்டது. அதற்கு முன் அக்கட்சி தேர்தல் பாதைக்குள் வரவில்லை.
அந்தக் காலகட்டத்தில்தான் மதுரையில் நடந்த தமிழ்ச்சங்கம் பொன்விழாவுக்குப் பல தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில், அண்ணாவும் ஒருவர். அண்ணாவுக்கு முன்னதாக சிறுமி ஒருவர் பேசுகிறார். இவர் சேலத்தைச் சேர்ந்த தமிழாசிரியரின் மகள். அவள் பெயர் மணிமேகலை. அடுத்துத்தான் அண்ணா பேசுகிறார். அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு, 'மேடைப் பேச்சு'.

மேடைக்குப் பேச வந்த அண்ணா, 'இந்தக் குழந்தை மிக அருமையாகப் பேசியது. இதுவே புராணகாலமாக இருந்தால் இது ஞானப்பால் அருந்திய குழந்தை என்று சொல்லி இருப்பார்கள். ஆனால், இது பகுத்தறிவுக் காலம்' என்று அவர் சொன்னார்.
இது கோயில் வளாகத்திற்குள் பேசப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் பேச்சு தெய்வ நிந்தனைப் பேச்சு என்று பசும்பொன் தேவர் கருதினார். மறுநாள் பேசிய அவர் விழாவின் தலைவரான பி.டி,ராஜனிடம், "இதைப் போன்ற தெய்வ நிந்தனைப் பேச்சுக்களைக் கோயில் வளாகத்திற்குள் பேசுவதற்கு நீங்கள் அனுமதி அளிக்கக் கூடாது' என்ற பொருளில் தன் மறுப்பைப் பதியவைத்தார்.
உடனே ராஜன், 'நான் பேச்சாளர்களின் சுதந்திரத்தில் தலையிட முடியாது. இது தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா ஆண்டு. என்ன மனதில் தோன்றுகிறதோ, அதைப் பேசுவார்கள். அது பேச்சாளர்களின் சுதந்திரம்' என்றார்.
அதற்குத் தேவர், 'அப்படி என்றால் ஆலய வளாகத்திற்குள் கூட்டத்தை நடத்தாதீர்கள். தெய்வ நிந்தனை பேச்சுக்களை எப்படி கோயில் வளாகத்திற்குள் நடத்த முடியும்? வேண்டுமென்றால் தமுக்கம் மைதானத்திற்குக் கூட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள்' என்றார். அவர் சொன்னதைப் போல் கூட்டம் தமுக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இதுதான் அன்று நடந்த உண்மை சம்பவம்.
அண்ணா மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று பசும்பொன் தேவர் சொல்லவும் இல்லை. ரத்த அபிஷேகம் நடக்கும் என்று அவர் சொல்லவும் இல்லை.

இதற்கு அடுத்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதை அண்ணாமலை வசதியாக மறந்துவிட்டார். 1957இல் அண்ணா காஞ்சிபுரத்தில் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பசும்பொன் தேவர் காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் செய்தார். இந்தத் தேர்தலில் 15 இடங்களில் திமுக வென்றது.
1959இல் உள்ளாட்சித் தேர்தல். சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியது. மதுரை அன்று மாநகராட்சி கிடையாது. வெறும் நகராட்சிதான். இந்தத் தேர்தலின்போது காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும். அதுதான் பொன் முத்துராமலிங்க தேவரின் இலக்கு. இவரது சீர்திருத்தக் காங்கிரஸ் ஒரு தனிக் கட்சி. ராஜாஜி ஆதரவுடன் இந்தக் கட்சி செயல்படுகிறது.
மதுரையில் பசும்பொன் ஆதரவுடன் தேவசகாயம் வெற்றி பெறுகிறார். இவர் ஒரு கிறிஸ்துவர். மதுரை மீனாட்சி பட்டணத்தில் எப்படி கிறிஸ்துவர் நகரசபை தலைவராக முடியும் என்று யாரும் சொல்லவில்லை. அன்றைய அரசியல் அப்படித்தான் மதங்களைக் கடந்து இருந்தது.
அதையும் தாண்டி இன்னொன்று சொல்கிறேன். 1962 தேர்தலில் திமுக 50 இடங்களை வென்றது. அந்த திமுக கூட்டணியில் ஃபார்வேர்ட் பிளாக் இடம்பெற்றது. அக்கூட்டணி சார்பில் பசும்பொன் அருப்புக்கோட்டையில் நின்றார். அவரது உடல் குன்றி இருந்தது. தேர்தல் பிரச்சாரத்திற்குப் போகாமலேயே அவர் வெற்றி பெற்றார். 63இல் அவர் மறைந்தார். அவரது இறுதிச் சடங்கிற்கு அண்ணாவும் எம்.ஜி.ஆரும் வந்தார்கள். இப்படி இணக்கமான அரசியல் சூழல்தான் அன்று இருந்தது. அண்ணாமலை சொல்வதைப் போன்று இல்லை" என்கிறார்
அண்ணாமலை 'ஹிந்து' பத்திரிகையில் இந்தச் செய்தி அந்நாளில் வந்ததாகக் குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார். அவர் குறிப்பிட்ட சம்பவம் பற்றி 'ஹிந்து' நாளிதழ்களை அலசி ஆராய்ந்து அப்படி ஒரு செய்தி வரவே இல்லை என்று நிரூபித்துக் கட்டுரை எழுதியுள்ளார் பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணன்.அவரது விளக்கம் என்ன?

"மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொன் விழா 1956 ஆம் ஆண்டு நடந்தது. அந்த மாநாட்டை ராஜாஜிதான் தொடங்கிவைத்தார். இதன் வரவேற்புக் குழுவின் தலைவராக பி.டி. ராஜன் இருந்தார். இந்த நிகழ்ச்சி 7 நாள்கள் நடைபெற்றதாக 'ஹிந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது மே 30 ஆம் தேதி மாநாடு தொடங்கி இருக்கிறது.
விழாவின் மூன்றாம் நாள் அண்ணாதுரை கலந்துகொண்டு பேசி இருக்கிறார். அவர் 'மேடைப் பேச்சு' என்ற தலைப்பில் பேசி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்திற்குள்ளாக நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் 4வது நாளில் அதாவது ஜூன் 2 ஆம் தேதி பொன் முத்துராமலிங்கத் தேவர் கலந்துகொண்டு பேசி இருக்கிறார். முதலில் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. அங்கிருந்த கூட்டத்தினர் தேவருக்கு ஆதரவாகக் கரவொலி எழுப்பி ஆதரவு தரவே, தேவரைப் பேச அனுமதித்திருக்கிறார்கள். இது குறித்து 'ஹிந்து' பத்திரிகையில் மே 31 தொடங்கி ஜூன் 6 வரை செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
விழாவில் பேசிய பொன் முத்துராமலிங்கத் தேவர் விழாக்குழுவினரைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். 'கோயில் வளாகத்திற்குள் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் உரையாற்றுவதற்கு எப்படி நீங்கள் இடம் அளித்தீர்கள்? ' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதன்பின்னர் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் விழா நிறைவடைந்ததாகச் செய்தி பதிவாகி இருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்வதைப் போல, அண்ணாதுரை மன்னிப்புக் கேட்டதாக ஒரு தகவலும் பத்திரிகையில் வெளியாகவில்லை.
ஏனென்றால், அவர் 'ஹிந்து'வில்தான் செய்தி வெளியானதாக அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னார். அப்படி எந்தச் செய்தியும் ஹிந்துவில் வெளியாகவில்லை என்பதைப் பழைய பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கும் போது உறுதியாகியுள்ளது" என்கிறார்

'ஹிந்து' பத்திரிகை தேடலில் அப்படி அண்ணா மன்னிப்புக் கேட்கவே இல்லை என்பது உறுதியாகி உள்ளது. அதைப்போலவே இண்டியன் எக்ஸ்பிரஸ் 22 ஆம் தேதி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அதன் தலைப்பு என்ன தெரியுமா? "அண்ணாமலை தயவுசெய்து கவனிக்கவும். தினமணியிலோ அல்லது இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலோ 1956 இல் அப்படியான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை" என்பதுதான் தலைப்பு.
இதுவே அண்ணாதுரை மீது அண்ணாமலை வாரி இரைத்த வசை மீது உண்மை எதுவும் இல்லை என்பதை வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
மேலும் எக்ஸ்பிரஸ் கட்டுரையில், '1956 ஜூன் மாதம் அப்போதைய பார்வர்டு பிளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரிடம் சி.என்.அண்ணாதுரை மன்னிப்பு கேட்டுவிட்டு மதுரையை விட்டு ஓடிப்போனார் என்று அண்ணாமலை பேசி இருந்தார்.
ஆனால் 1956 மே 30 முதல் ஜூன் 8 வரையான பழைய தினமணியை ஆராய்ந்தபோது, அண்ணாதுரை தேவரிடம் மன்னிப்பு கேட்டதாகவோ, மதுரையை விட்டு ஓடிப்போனதாகவோ எந்தச் செய்தியும் பதிவாகவில்லை' என்று மறுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 'தேவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாவின் பதிலை அறிய அங்குக் கூடியிருந்த மக்கள் ஆவலுடன் இருந்ததாகவும் ஆனால் அவர் அதைப் பற்றி எதுவும் பேசாததால் ஏமாற்றமடைந்ததாகவும்தான் 1956 ஜூன் 4 தேதியிட்ட தினமணி செய்தி வெளியிட்டுள்ளது' என்று விளக்கம் அளித்துள்ளது.
ஆக, ஹிந்துவைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணியில் கூட அண்ணாதுரை மன்னிப்புக் கேட்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஏனெனில் அண்ணாமலை இட்டுக்கட்டிப் பேசிய செய்தி எப்படி வரலாற்றில் இருக்க முடியும்? வரலாறு என்னவோ அதைப் பேசி இருந்தால் அது பழைய பத்திரிகைகளில் அப்படியே பதிவாகி இருக்கும்.
இப்படித் தொடர்ந்து தனது பேச்சுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் அடித்து விடுகிறார் அண்ணாமலை எனச் செய்திகள் வந்த பிறகும் அவர் தனது பேச்சுக்கு வருத்தமோ மன்னிப்போ கோரவில்லை.
பத்திரிகையாளர்களைப் படித்துவிட்டு வரவேண்டும் என ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் சொல்கிறார் அண்ணாமலை. ஆனால், படித்துவிட்டு பத்திரிகையாளர்கள் விளக்கம் அளித்தால், வாயைத் திறக்காமல் மவுனமாகி விடுகிறார்.












Click it and Unblock the Notifications