65-ல் பொள்ளாச்சியில் ஓடிய ரத்தம்.. டெல்லியை "பணிய வைத்த" அந்த 48 மணி நேரம்! இன்றும் குறையாத ஆதிக்கம்
சென்னை: 2026-ல் நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்கைச் சிதைத்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் அதிகாரப் போராட்ட வரலாறு மீண்டும் கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. அன்று "இந்தி" என்ற பெயரில் வந்த ஆதிக்கத்தை எதிர்த்த தமிழகம், இன்று "மக்கள் தொகை" என்ற பெயரில் வரவிருக்கும் அதிகாரப் பறிப்பை எதிர்க்கத் தயாராகி வரும் வேளையில், 1965-ல் இதே போன்றதொரு நெருக்கடி காலக்கட்டத்தில் நடந்த அந்த ரத்த சரித்திரத்தை நாம் நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது.
தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மக்களவையின் மொத்த பலத்தை தற்போதுள்ள 543-இலிருந்து 850 உறுப்பினர்களாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு மசோதா
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. "தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டால், எனது தலைமையிலேயே போராட்டம் நடைபெறும். 50, 60களில் இருந்ததைப் போன்ற பழைய திமுகவை இந்தியா திரும்பிப் பார்க்க வேண்டும்" என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.. ஸ்டாலின் சொன்ன அந்த பழைய திமுக என் தெரியுமா? 60களில் தமிழகத்தில் என்ன நடந்தது தெரியுமா?
தமிழக அரசியல் வரலாற்றில் "மொழி" என்பது வெறும் தகவல் பரிமாற்றக் கருவி மட்டுமல்ல, அது அது ஓர் இனத்தின் ஆளுமை, உரிமை மற்றும் சுயமரியாதையின் ஆகச்சிறந்த அடையாளம்.... இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் அமலுக்கு வந்தபிறகு, 1965 ஜனவரி 26 முதல் ஆங்கிலம் நீக்கப்பட்டு, இந்தி மட்டுமே மத்திய அரசின் ஒரே ஆட்சி மொழியாக மாறும் என்ற அறிவிப்பு வெளியானது. அந்த நிமிடம் முதலே, அந்த நெருப்பு அடக்குமுறை தமிழகத்தை பற்றிக்கொண்டது.. இதன் வலி மிகந்த வரலாறு மிக நீண்ட நெடியது...!!!
மொழி அடக்குமுறை
1938-ல் தொடங்கி ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்தி மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டை கொந்தளிக்க வைத்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்தி மொழித் திணிப்புக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு என்பது 1965-ல் ரத்த ஆறு பாய்ந்தோடிய போர்க்களமாகவே இருந்தது என்பது வரலாறு.
தீக்குளித்த தியாகி
மதுரையில் தொடங்கிய மாணவர் பேரணி மீது காங்கிரஸ் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல், போராட்டத்தை வன்முறை பாதையில் திருப்பியது. மொழிப் பற்றினால் உந்தப்பட்ட கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விராலிமலை சண்முகம் போன்றோர் தீக்குளித்தும், விஷத்தை சாப்பிட்டும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்..
தமிழகம் முழுவதும் "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்ற முழக்கம் விண்ணதிர ஒலித்தது. அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான அரசு, போராட்டத்தை ஒடுக்கக் கையாண்ட கடுமையான முறைகள் நிலைமையை மேலும் மோசமாக்கின.
பொள்ளாச்சியில் ஓடிய ரத்த ஆறு
இந்த வரலாற்று போராட்டத்தின் மிகக் கொடூரமான பக்கம் பொள்ளாச்சியில் அரங்கேறியதை யாராலும் மறக்கவே முடியாது.. 1965 பிப்ரவரி 11, 12-ம் தேதிகளில் பொள்ளாச்சியில் நடந்த நிகழ்வுகள் ரத்தக் கறையோடு வரலாற்றில் இப்போது வரை பதிவாகியுள்ளன.
மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கத் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், அங்கு ஒரே நாளில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.. அதிகாரப்பூர்வமாக வந்த எண்ணிக்கை அவ்வளவுதான், ஆனால் அப்போது இதைவிட இதைவிட அதிகம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சொல்கின்றன.
இந்திய வரலாற்று நிகழ்வு
பொள்ளாச்சியில் நிலவிய பதற்றத்தை கட்டுப்படுத்த ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. போலீசாரின் அடக்குமுறையால் ஏற்பட்ட இந்த ரத்த ஆறு, தமிழகம் முழுவதையும் கொந்தளிக்க செய்தது. பொள்ளாச்சி சம்பவம் என்பது ஒரு பிராந்திய நிகழ்வாக ஆரம்பமானாலும், அது ஒட்டுமொத்த இந்தியாவையுமே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
வரலாற்றின் பக்கங்களில் சுவடுகளே இல்லாமல் ஆக்கப்பட்ட "பொள்ளாச்சி படுகொலைகள்" தொடர்பான நூல்கள் வெளியாகின. இதனை அடிப்படையாக வைத்துதான் அண்மையில் பராசக்தி திரைப்படமும் வெளியாகி இருந்தது.
போர்க்களமான பொள்ளாச்சி
1965-ம் ஆண்டு பிப்ரவரியில் பொள்ளாச்சி நகரம் போர்க்களமாக காட்சியளித்தது. தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வகையில் பொள்ளாச்சியில் பெரும் எண்ணிக்கையில் ராணுவம் வரவழைக்கப்பட்டிருந்தது.
ஆனால் பொள்ளாச்சியில் மாணவர்களும் பொதுமக்களும் ராணுவத்துக்கு எதிராக, ராணுவத் தடைகளை முன்னேறி போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர்.
1965 -ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி தபால் நிலையத்தில் இருந்த இந்தி பெயர் பலகையை இளைஞர் ஒருவர் அழிக்க முயன்ற போது அங்கே குவிக்கப்பட்டிருந்த ராணுவம் அவரை சுட்டுக் கொன்றது.
கொந்தளிப்பில் இருந்த பொள்ளாச்சி மாணவர்களையும் பொதுமக்களையும் ஒருசேர தீப்பிழம்பாக்கியது இந்த சம்பவம். மக்களின் பேராவேசத்தை எதிர்கொள்ள முடியாத ராணுவம், காக்கை குருவிகளைப் போல அவர்களை சுட்டுத் தள்ளியது. கொத்து கொத்தாக மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என செத்து செத்து விழுந்தனர்.
வாழும் சாட்சியங்கள்
அதேநேரத்தில் இந்த பொள்ளாச்சி படுகொலைகளைப் பற்றிய செய்திகள் வெளியே தெரியாத வகையில் ராணுவம் தனக்கே உரிய பாணியையும் கையாண்டது.
பொள்ளாச்சியில் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல்களை ஒன்றாக உடுமலைப்பேட்டை சாலை மயானம், மதுரைக்கரை ராணுவ முகாம் அருகே உள்ள இடம் ஆகியவற்றில் குவித்து மொத்தமாக எரியூட்டி சாம்பலாக்கி வரலாற்றையே தடயம் இல்லாமல் அழித்தது.
பொள்ளாச்சி படுகொலைகளின் வாழும் சாட்சியங்களாக இன்றளவும் நம்மிடையே இருப்பவர்களால் இந்த கொடுந்துயர் வரலாறு வெளி உலகக்கு வெளிப்படுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பொள்ளாச்சியில் ராணுத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பொதுமக்கள், மாணவர்களுக்கான நினைவுத் தூபி அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் "டெல்லி ஆதிக்க எதிர்ப்பு"க்கு போராட்டம் என்பது நீறுபூத்த பெருநெருப்பாக எப்போதும் கனன்று கொண்டிருக்கும்.. அதில் "கை" வைக்கும் போதெல்லாம் டெல்லி அரசு பணிந்துதான் ஆக வேண்டும்..
அன்று பொள்ளாச்சியில் பல நூறு பேரை படுகொலை செய்ததால் பாய்ந்தோடிய ரத்த ஆறுதான், இந்திதான் அலுவல் மொழியாக நீடிக்கும் என்ற 'அகம்பாவ' உத்தரவை, ஆதிக்க உத்தரவை திருமப்ப் பெற வைத்தது.
அத்தகைய இன்னொரு போர்க்களத்துக்கு- பழைய வரலாற்றை புதுப்பிக்கும் வகையிலான போராட்ட களத்துக்கு தமிழ்நாட்டை நோக்கி தள்ளிவிட வேண்டாம் என்பதுதான் இப்போது "தொகுதி'" மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தி இருக்கும் எச்சரிக்கையாகும்..!!
அதிகார சமநிலை
ஆக,
தமிழக அரசியலில் 1965-ல் வெடித்த இந்தி எதிர்ப்பு போராட்டமும், இன்று விவாதமாகியுள்ள "தொகுதி மறுவரையறை" (Delimitation) விவகாரமும் வெவ்வேறு காலக்கட்டங்களை சேர்ந்தவை என்றாலும், இவற்றின் அடிப்படை நோக்கம் ஒன்றுதான்.. அதுதான் "அதிகார சமநிலை".
தொகுதி மறுவரையறை விவகாரத்திலும், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்கு அதிக இடங்களும், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற தென் மாநிலங்களுக்குக் குறைவான இடங்களும் கிடைக்கும் நிலை உருவாகும். இது நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அரசியல் செல்வாக்கை வெகுவாகக் குறைத்துவிடும் என்ற அச்சம் இப்போது படர்ந்துள்ளது.
சுருக்கமாக சொன்னால், அன்று "இந்தி" என்ற பெயரில் வந்த ஆதிக்கத்தை எதிர்த்த தமிழகம், இன்று "மக்கள் தொகை" என்ற பெயரில் வரும் அரசியல் அதிகாரப் பறிப்பை எதிர்க்கிறது. இவை இரண்டுமே "எங்கள் உரிமை மற்றும் அதிகாரத்தின் குரல் தேயக்கூடாது" என்ற ஒரே புள்ளியில் இணைகின்றன.
கூட்டாட்சி தத்துவம்
எனவே, மொழி அரசியலாக இருந்தாலும் சரி, தொகுதி மறுவரையறையாக இருந்தாலும் சரி, தமிழகத்தின் அரசியல் அறம் என்பது தன் தனித்துவமான அதிகாரத்தையும் அடையாளத்தையும் எந்நிலையிலும் விட்டுக் கொடுக்காத பண்பில் அடங்கியிருக்கிறது.
கூட்டாட்சித் தத்துவத்தில் ஒவ்வொரு மாநிலமும் சமமான மதிப்பைப் பெற வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. மொழி என்பது ஒரு இனத்தின் உயிர்நாடி..
அதேபோல் முறையான அரசியல் பிரதிநிதித்துவம் என்பது அந்த இனத்தின் இருப்பு. இவற்றைத் திணிக்கவோ அல்லது சிதைக்கவோ முயலும் எந்தவொரு அதிகாரப் போக்கும் இறுதியில் ஜனநாயகப் பின்னடைவுக்கே வழிவகுக்கும் என்பதை வரலாறு நமக்குத் தொடர்ந்து பாடம் புகட்டிக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் இன்றைய குரல் என்பது வெறும் எதிர்ப்பு மட்டுமல்ல, அது இந்தியாவின் கூட்டாட்சிப் பண்பைப் பாதுகாப்பதற்கான அறைகூவல்....!!!












Click it and Unblock the Notifications