சென்னையில் காலையில் பெய்த சாரல் மழையால் ஜில்லென்று மாறிய வானிலை - மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் நள்ளிரவிலும் அதிகாலையிலும் பல்வேறு இடங்களில் சாரல் மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்தது.
சென்னை: நள்ளிரவு முதல் காலை வரை சென்னையில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது. இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் தெரிவித்தது போல நேற்று மாலை முதலே சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.

சென்னையில் காலை நேரத்தில் ஈக்காட்டுத்தாங்கல், விருகம்பாக்கம், கே.கே.நகர், வளசரவாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, தேனி ,திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல் நாளை நீலகிரி ,தேனி, திண்டுக்கல், ஈரோடு,சேலம் மாவட்டங்களிலும் வருகின்ற 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications